ஆர்மோனியம்

                                                


                           
          "ஏதோ ஒருவகையில் ஒவ்வொரு  மனிதனோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது  இசை.  எதாகிலும்  ஒரு பாடலை தனக்கு தோன்றும்  ராகத்தில் ஒவ்வொரு மனிதனும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாடுகின்றவர்களுக்கு அதில் இருக்கிற் பிழைகள் தெரிவதில்லை. ஆனாலும், பாடுகிறார்கள். ஏனென்றால் இசை அவர்களை ஏதோ ஒரு வகையில் சாந்தபடுத்துகிறது.

இப்படி இன்பத்தையும் அமைதியையும் மனதின் மையத்தில் கொண்டு சேர்க்கவும் பாதுகாப்புக்காக்கவுமே  இசை உருவாகி  இருக்கிறது என்பது ஒரு வரலாறு.  அந்த வகையில் கிடைத்த் பொருள்களில் இருந்தெல்லாம் இசையை அறிமுகபடுத்தியவர்கள் நம் மூதாதையர்கள். அப்படித்தான் இசையின்  வடிவம் பல்வேறு இசைக் கருவிகளால் உருவம் பெற ஆரம்பித்தது".

சிவனுக்கு உடுக்கை, கிருஷ்ணனுக்கு புல்லாங்குழல், கலைவாணிக்கு வீணை என கடவுளுக்கும் ஒவ்வொரு இசைக் கருவிகளை கொடுத்து அழகு பார்த்த சமுதாயம் நம்முடையது. ஏன் என்றால் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள் என பல உயிர்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மந்திரக்கோல்  இசை. அந்த வகையில் இசையை தரும்  கருவிகளையும் அதன் காரணத்தையும் கணக்கில் கொண்டே  நரம்பு இசை கருவி என்றும், காற்று இசைக் கருவி என்றும், தோல் இசை கருவி,துளை இசைக் கருவி என்று இசைக்கருவிகளை வகைபடுத்தி வைத்திருக்கிறார்கள் மனிதர்கள். மனிதனின் ஒவ்வொரு நிகழ்விலும் அடையாளமாக இருக்கிறது இசை.

அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஆர்மோனியம் எனும் காற்று இசைக்கருவி தான் இன்று மனிதர்களோடு பின்னி பிணைந்திருக்கும் எலெக்ட்ரோ  ஆர்மோனியத்தின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. பிரெஞ்சு நாட்டவரான அலெக்ஸாண்டர் பெயின் என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. தேவாலயங்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. எடுத்துச் செல்வதற்கு இலகுவாக  இருந்தமையால் அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் நாடுகளுக்கும்  கொஞ்சம் கொஞ்சமாய் பரவ ஆரம்பித்தது.

                            
ஆர்மோனியத்தில், பல உறுப்புகள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசிச் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக பட்டைகளும், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் முக்கியமானவை. 19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ  மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கும் ஆர்மோனியங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்தனர். இதுதான் இந்தியாவுக்கு வந்த முதல் ஆர்மோனியம் ஆகும்.

\இந்தியாவின்  பாரம்பர்ய இசையோடு இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது. வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல கூடியதாகவும்,  கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்கள்  விரும்புகின்ற  ஒரு இசைக்கருவி ஆனது. இதனால், காலபோக்கில் ஆர்மோனியம் கற்றுகொள்வது என்பது ஒவ்வொருவரின் மந்திரமாகவும்  மாறி போனது.

ஹார்மோனி என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ஒருங்கிணைப்பு அல்லது இணைந்து செயல்படுவது என்பதாகும். இச்சொல்லையே தன் பெயராகக் கொண்டுள்ள இந்த ஒரு வாத்தியத்தில் மட்டுமே ஒரே சமயத்தில் பல ஸ்வரங்களை இசைக்க முடியும். அம்மாதிரி இணைந்து வெளிப்படும் இசைதான் Cord என மேற்கத்திய இசையில் அழைக்கப்படுகிறது. தற்போதய நவீன கீ போர்டில் கூட இது முழுவதுமாகச் சாத்தியமில்லை என்பது இங்குக் குறிப்பிடத் தகுந்தது.

ஹார்மோனியத்தில் ஸ்வரங்களை வாசிப்பது மிகவும் சுலபம். இதன் ஸ்வரஸ் தானங்கள் தீர்க்கமானவை. இசை ஞானம் இல்லாத ஒரு பாமரனும் “பா” ஸ்வரத்தை எளிதாக எந்தப் பயிற்சியும் இல்லாமல் வாசிக்க முடியும். வீணை, வயலின் போன்ற வாத்தியங்களில் நினைத்துக்கூட பார்க்க இயலாத நீண்ட கனவு இது. மேலும் இதன் ஸ்ருதி 4 கட்டை 8 கட்டை என்று இருப்பதால் எழுப்பும் ஒலி மிகவும் அதிகமாக இருக்கும். அதனாலும் இவை காலபோக்கில் ஓரங்கட்ட பட்டிருக்கின்றன.

இந்த ஆர்மோனியத்தின் இசைதான் புகழ்பெற்ற பல இசைகலைஞர்களை உலகறிய செய்தது. 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசை, பார்சி, மராட்டிய இசைகள் போன்ற பல்வேறு இந்திய  இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. இருப்பினும் கர்நாடக, இந்துஸ்தானி இசைகளுக்கு  இன்றியமையாத  கமகங்களை ஆர்மோனியத்தில் வாசிப்பது மிகவும் கடினமாக இருந்தது.  இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. கனராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிப்பதும் கஷ்ட்டம்.

ஆனால், பல்லடம் வெங்கட்டராம ராவ், ஹரி ஐயர், G. ராமனாதன், காசி ஐயர் போன்ற ஹார்மோனிய வித்துவான்கள் தங்களின் தனித்திறமையினால் இவ்வாத்தியத்தைத் தமிழ்நாட்டின் ரசிக்கப்பட்ட வாத்தியமாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் கால போக்கில் ஓரங்கட்டப்பட்ட ஆர்மோனியம் இன்று கீ போர்ட்  என்று சொல்லகூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதோ இங்கிருக்கிற கோடம்பாக்கத்தின் வீதிகளில் ஆயிரம் ஆயிரம் இசை கலைஞர்கள் தினமும் இசையமைப்பாளராகும்  கனவில் அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால், அவர்களெல்லாம் ஆர்மோனியம் எனும் இசைக்கருவியை ஒரு முறையாவது இசைத்திருப்பார்களா என்பது கேள்விதான். ஆர்மோனியத்தை மட்டுமே கற்றுக்கொண்டு இசையை மக்களிடம் கொண்டு சேர்த்த இசையமைப்பாளர்கள் தெனிந்தியாவில் புகழின் உச்சியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது. வெறும் மின்சாரத்தில் இயங்கும் கீ போர்ட்களை  கற்றுக்கொண்டு இசை அமைப்பாளர் கனவில் திரிபவர்கள் ஒரு முறையாவது காற்றிசைக் கருவியான ஆர்மோனியத்தை வாசித்து பார்க்கட்டும். அப்போது அதன் ஆழத்தை உணர்ந்துகொள்வார்கள்.



வேகசுகுமாரன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்