எல்லாம் விதியின் வசம்











ஏதேனும் ஒரு பக்கத்தை வாசிக்கிறபோது
நமக்கும்..
இந்த பக்கத்துக்கும்... -ஏதோ
தொடர்பு இருப்பதாக நாம் உணர்ந்தால்...

நம்மையும்
நம் வாழ்க்கை சூழலையும்...
எங்கிருந்தோ இது கவனிக்கிறது என்று
நாம் நினைத்தால்...

அவமானங்களையும்...
அசிங்கங்களையும்...
சுமந்துகிடக்கிற
வாழ்க்கையின் நெடிய பயணத்தில்...

சில நேரம் திருப்தியும்,
சில நேரம் அதிருப்தியும்
ஏற்படுகிறது நமக்கு.

உப்பில்லாத உணவு
உண்டபிறகு...
எப்படி நம்மால்
சுவையை ருசித்ததாய் சொல்லமுடியும்?

எத்தனையோ பேரில்...
யாரேனும் ஒருவருக்காகவாவது
நாம் இதை செய்யவேண்டியிருக்கிறதே.

அவசர கதியில்
அறிவு சில நேரம்
மங்கி போவது உண்டு.

வரலாறு
வலியையும்,
தோல்விகளையுமே
அதிகம் பேசுகிறது.

அப்படியென்றால்...
வரலாறு 
வெற்றிகளின் கதையில்லையா?
 ஆம், 
 






வரலாறு தோல்விகளின் கதை.

வரலாற்றின் நெடிய பயணத்தில்
சில முற்றுக்கள்
முட்டாள்தனமாய்
முடிந்திருக்கும்.

அதை தூசு தட்டும் உரிமை
இயல்பாகவே நமக்கு கிடைத்த
ஒரு வரம்.

எந்த ஒரு நிகழ்வாக இருக்கட்டும்
தவறுகளை திரும்ப திரும்ப செய்வதால்...
அது எப்படி சரியாக முடியும்?

ஒரு
குறிப்பிட்ட எல்லையை
வகுத்துக்கொண்ட மனம் தான்...
அந்த  எல்லையை அடைந்தவுடன்
மரணத்துக்கான வாசலைதேடுகிறது.

மரணம்
யாரையும்...
அத்தனை சீக்கிரமாய்
நெருங்குவதேயில்லை.

மரணம் என்பது
ராகத்தின் உச்ச சுருதி.

அங்குதான்.. நாம்
இந்த உலகை
இன்னொரு கண்ணால் 
பார்க்கிறோம்.

ஆனால்,
அந்த கண்கள்
நம்மிடம் இருக்கிறவை அல்ல,

காலம் நமக்கு கொடுக்கிறவை.

"எல்லாம் விதியின் வசம்"
நம்மால் எத்தனை சுலபமாய்
சொல்லிவிடமுடிகிறது
இந்த வார்த்தையை.

நாம் எப்பொழுது
நடைமுறை வாழ்க்கைக்கு
திரும்புகிறோமோ...
அந்த தருணம் - நம்மை
மரணத்தின் அருகிலேயே
இருக்க வைத்துவிடுகிறது
வாழ்க்கை.

குற்ற உணர்வுகளால்
குதறப்பட்ட எத்தனையோ இதயங்கள்
இரவுகளை தொலைத்துவிட்டு
தூக்கத்துக்காக அலைந்து திரிகின்றன.

ஏன்
நாம் குற்றங்களை
உணர மறுக்கிறோம்?

சில நேரங்களில்
சமுதாய கோட்பாடுகளை
முட்டால்தனமாககூட
கருதுகிறோம்...

அதுவே
அடுத்த நொடியில்
நம்மையே முட்டாளாக
பார்க்க வைக்கிறது.

ஆனால், அதற்க்கான
அர்த்தத்தை
வாழ்ந்து உணரும்போதுதான்
அறியமுடியும்.

ஒரு முட்டாள் தனத்துகுள்ளும்
அறிவே மூலமாய் இருக்கிறது என்பதை
உணர வைக்கிறது அந்த நொடிகள்.

மனித சமுதாயம் என்பது
வாழ்வியலுக்கான சில
வரைமுறைகளை
காலம் காலமாய்...
தொன்று தொட்டு
கடைப்பிடித்து வருகிறது.

இருப்பினும்

சில நேரம்
விதிகளுக்கு முரணாய்...
கோட்பாடுகளுக்கு எதிராய்...

சில செயல்கள்
நம்மை துச்சபடுத்தும் போதுதான்...

சமுதாயம் விழித்துக்கொள்ள
ஆரம்பிக்கிறது..
காரி உமிழ்கிறது.

கேவலமான வார்த்தைகளை
பிரயோகிக்கிறது.

"என்ன வாழ்க்கை இது'
என்கிற சிந்தனையெல்லாம்...
அந்த சமயத்தில்தான்
நமக்கு தெரிகிறது.



பாதை மாறிவிட்ட ஒரு
பயணத்தில் இருந்து
நாமே நம்மை மீட்டு எடுப்பது
எப்படி என்று யோசிப்போம்.....

மிகவும் கடினமான ஒன்றுதான்.

வரலாறு என்பது
தோல்விகளின் கதையும்தான்..
ஆனால், ஒரு போதும் அது
முட்டாள்களின் கதையாய் இருக்காது.

முட்டாள்கள் தான் செய்த ஒன்றையே
திரும்ப திரும்ப செய்கிறார்கள்.

செய்கிற ஒன்றை திரும்ப
செய்வதென்பது ஒரு விஷயமல்ல..
ஆனால், அதனால்
எத்தனை பேர் திருப்தியடைந்தார்கள்
என்பதுதான் வரலாற்றின் கேள்வி

உலகம் ஒருபோதும்
அசிங்கமான செயல்களை
ஊக்கபடுத்துவதே இல்லை.

ஏனெனில்,
அந்த நிகழ்வு
ஒரு தவறான சமுதாயத்தை
உருவாக்கிவிடும் என்பதில்
தெளிவாயிருக்கிறது.

ஆகவேதான்,
வரலாற்றில்
வெற்றியே பிரதானமாய்
பேசப்படுகிறது. 


-வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்