அடையாளம் என்கிற அடைப்பு குறிக்குள்!




ஏதோ  ஒரு செயலில் - நாம்
மற்றவர்களில் இருந்து
வேறுபட்டிருப்பதாய் கருதினால்....

ஏதோ ஒரு சிந்தனையில்  - நாம்
மற்றவர்களை பின்னுக்கு
தள்ளியிருப்பதாய் உணர்ந்தால்....

எதாகிலும் ஒரு சமயத்தில்
மக்கள் நம்மை அங்கீகரித்திருப்பதாய் - நாம்
பிதற்றினால்.....

வாழ்வின் தொடக்கமான
அந்த தருணத்திலேயே
நமக்கான அழிவும்  ஆரம்பமாகிவிடுகிறது.

 மற்றவர்களிடமிருந்து
வேறுபடுத்துகிற, முதன்மை படுத்துகிற,
அந்த சிந்தனைதான்....

பின்னாளில்
மனிதர்களிடமிருந்தே
நம்மை தனிமை படுத்திவிடுகிறது.
பிரிக்கவும் செய்கிறது.

ஏனெனில்,
மனிதனின் மனம் ஒரு போதும்
சமாதானத்தை தன் இறுதி காலம் வரை
கேட்டதேயில்லை.

ஏனெனில்,
மனிதர்கள் ஒருபோதும் தங்களை
தோல்விகளை தாங்கும் 
திறன் படைத்தவர்களாய் .....
உணர்ந்ததேயில்லை.

இவர்கள் 
இன்னொருவரை...
தம் குழந்தைகளுக்கு அடையாளபடுத்தும் வரை
இவர்களுக்கே தெரியாது
இவர்களே ஒரு அடையாளமாய் ...
இருக்கிறார்கள் என்று.

ஏன் இதையெல்லாம்
நாம் யோசிப்பதேயில்லை....?

எப்பொழுது...
ஒருவனுக்கு
வெற்றி சுமையாக இருப்பதில்லையோ
அப்போதே - அவன்
தோல்வியின் அடையாளத்தை
மறைக்க ஆரம்பித்துவிடுகிறான்.

எல்லோரிடத்திலும்
நம்மை வேறுபடுத்தி காட்டவேண்டும்
என்கிற சிந்தனைதான்..... பின்னாளில்
நம்மை ஒட்டு மொத்தமாக
மனிதர்களிடமிருந்தே பிரித்துவிடுகிறது.

நாம் எதை
நமது அடையாளமாய்
கருதிகொண்டிருக்கிறோமோ
நிச்சயமாக
அது நமது அடையாளம் அல்ல.

ஒருமுறை ...
எதாகிலும் ஒரு செயலுக்காக
ஒருவன் முதன்மை படுத்தபட்டால்...
பிறகு,
அந்த மனிதன்
மனிதனாய்... திரும்ப
வெகுகாலம் பிடிக்கும்.

அடையாளம் என்கிற
அடைப்பு குறிக்குள் அவனை
அடைத்துவிட்ட பிறகு
அந்த அடையாளத்தை
தக்கவைக்கும் போராட்டமே
அந்த மனிதனின் வாழ்க்கையாய்
முடிந்துவிடுகிறது.

அந்த
அடையாளத்தை தக்கவைக்கும்
போராட்டத்தின் முடிவில்
தன்னையே பலியிடவும் செய்கிறான்.


இப்படியாக.......,
நமக்கு கிடைக்கிற 
பேரும் புகழும்தான்...
நம் வாழ்வின் கொண்டாட்டத்தையே
அழித்துவிடுகின்றன.
நமக்கு கிடைத்த
பணமும் பதவிகளும்தான்
நம்மை
அன்பின் ரகசியத்தை
அறியவிடாமல் செய்துவிடுகின்றன.

ஆக,
மனிதர்கள் தங்களை
அடையாள படுத்திக்கொள்ள
முனையும் போதெல்லாம்...

அவர்கள்
தங்களின் அடையாளத்தை
இழந்துகொண்டிருக்கிறார்கள்
என்பதை 
யாரும் மறுத்துவிட முடியாது.



-வேக சுகுமாரன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்