நாகரிக ஏகாதிபத்தியம்!
மனித சமூகத்தின் நாகரிக ஏகாதிபத்தியத்தை இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. அம்பேத்கர் எனும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவனை நாம் இழிவு படுத்தியிருக்கிறோம் என்பதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்? நேருவையோ..காந்தியையோ ..வேறு ஒருவர் சாட்டையால் அடிப்பதை போல் இப்படி ஒரு செய்தி இந்தியாவில் வெளிவருமா? வராது. ஏனென்றால் இந்தியா நாகரிக ஏகாதிபத்தியத்தின் இலக்கணமாய் திகழ்கிற நாடு. உயிர்மை பத்திரிகையில் சகோதரர் மனுஷ்யபுத்திரன் தலையங்கத்தில் பகிர்ந்துகொண்ட வார்த்தைகளை உங்களுக்கும் பகிர்கிறேன்......படித்து பாருங்கள் ......
-வேக சுகுமாரன்

சி.பி.எஸ்.ஈ. அரசியல் பாட நூலில் இடம் பெற்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒரு கார்ட்டூன் இன்று அடையாள அரசியல் பற்றிய பெரும் விவாதங்களை
உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. 1949ல் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கர் பிள்ளையால்
வரையப்பட்ட இந்தக் கார்ட்டூன் அரசியல் சாசனத்தை இயற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தை விமர்சிக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் ஒரு ஆமை
மேல் அமர்ந்து பயணம் செய்கிறார். இந்தியப் பிரதமர் நேரு சவுக்கை ஓங்கி அந்தப் பயணத்தை விரைவுபடுத்த முயற்சிக்கிறார். தலித் அமைப்புகள் நாடாளுமன்றத்தில்
இந்தக் கார்ட்டூன் குறித்து பிரச்சினை எழுப்பியபின் அரசு குறிப்பிட்ட கார்ட்டூனை மட்டுமல்ல, எல்லா அரசியல் கருத்துப் படங்களையும் பாடத்திட்டத்திலிருந்து நீக்க முடிவு
செய்துள்ளது. இந்த விவகாரத்தை ஒட்டிக் கேட்கப்படும் கேள்விகள் ஆழமான அரசியல் விவாதங்களுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடியவை.
அந்தக் கார்ட்டூனில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் அம்சம் எதுவுமே இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை இல்லையா?
கார்ட்டூன் என்ற கலை வடிவம் முழுக்க முழுக்க ஒரு காலகட்டத்தோடு சம்பந்தப்பட்டது. அந்தக் காலகட்டம் பற்றிய பல்வேறு மறைமுகக் குறிப்புகள் கொண்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களில் வெளிவந்த கார்ட்டூன்களை இன்றைக்கு ஒரு வாசகர் பார்த்தால் பெரும்பான்மையான கார்ட்டூன்கள் என்ன சொல்ல
வருகின்றன என்றே புரியாது. செய்திகள் நினைவிலிருந்து மறையும்போது அவை தொடர்பான கார்ட்டூன்கள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன. மேலும் கார்ட்டூன் என்ற வடிவம்
மிகைப்படுத்தலையும் தீவிரமான எதிர்மறைகளையும் உள்ளடக்கியது. அதை நாம் எதிர்வினைகள் என்று கருதலாமே தவிர, நேரடியான அரசியல் ஆவணங்களாகக் கருத
இயலாது. அது எந்த அளவிற்கு வலிமையானதோ அந்த அளவிற்கு தற்காலிக தன்மைகொண்டது. சங்கர் பிள்ளையின் கார்ட்டூன் அது வரையப்பட்ட காலத்தில்
அம்பேத்கருக்கு எதிரானதல்ல, அதன் அரசியல் உள்ளடக்கம் மிகவும் எளிமையானது. ஆனால் இன்று அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் என்பது அவர் ஒரு சட்ட மேதை
என்பதல்ல, தலித்துகளின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் அவரே மீட்பராகவும் அடையாளமாகவும் இருக்கிறார். காலம் காலமாக சாட்டையால் அடிக்கப்பட்டவர்களின்
அடையாளம் அவர். அவரை ஒருவர் சாட்டையால் அடிப்பது போன்ற சித்திரம் ஏற்படுத்தக்கூடிய உளவியல் காயத்தை நாம் புரிந்து கொள்ளாததுபோல் எவ்வளவு காலம்
நடிக்கப்போகிறோம்? அந்தக் கார்ட்டூன் அது வரையப்பட்ட காலத்தின் அரசியல் உள்ளடக்கத்தை இழந்து இன்று புதிய அரசியல் உள்ளடக்கத்தால் நிரப்பப்படுகிறது. எண்ணற்ற
பழைய பிரதிகள் இன்று அவ்வாறுதான் வாசிக்கப்படுகின்றன. அந்தக் கார்ட்டூன் எதைச் சொல்ல வந்தது என்பதல்ல, இன்று அது எத்தகைய மனப்பதிவை உடனடியாக
ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியமானது. தலித்துகள் குறித்த வரலாற்று பிம்பத்தை, கலாச்சார பிம்பத்தை அந்தப் படம் மீள் உருவாக்கம் செய்கிறது.
அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக மட்டும் சுருக்குவது சரியா? அவர் ஒரு தேசியத் தலைவர் இல்லையா?
இதைச் சொல்பவர்கள் தலித்துகளிடம் பெருந்தன்மையாக நடந்துகொள்ள விரும்புகிறார்கள் அல்லது இன்றைய அம்பேத்கரின் அரசியல் சாராம்சத்தை நீர்த்துப் போகச் செய்ய
முயற்சிக்கிறார்கள். சென்னையில் சட்டக் கல்லூரியின் பெயரில் அம்பேத்கர் பெயரை ஏற்க மறுத்ததை ஒட்டி நடந்த மோதல்கள் இன்னும் மறக்கவில்லை. இன்றளவும்
இந்தியா முழுக்க சாதி வெறியர்களால் அம்பேத்கர் சிலைகள் தாக்கப்பட்டு சாதிய மோதல்கள் தூண்டப்படுகின்றன. நேரு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசியத்
தலைவர்கள் யாருடைய அடையாளமாவது இவ்வாறு அவமதிப்பிற்கும் சமூக மோதல்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றனவா? இன்னும் இதை எளிமையாக
யோசிப்போம். நேருவை அம்பேத்கர் சவுக்கால் அடிப்பது போன்ற ஒரு கார்ட்டூன் ஒரு பாடத்திட்டத்தில் இடம் பெறுமா? இடம்பெறாது. நேருவின் அடையாளம் இன்றளவும்
அரசியல் அதிகாரம் உள்ளது. தலித்துகளுக்கு எப்போதும் அந்த அதிகாரம் இல்லை.
இந்தக் கார்ட்டூனை அகற்றச் சொல்வது சகிப்புத்தன்மை இன்மையின் வெளிப்பாடு மட்டுமல்ல, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இல்லையா?
தலித்துகளுக்கு அரசியல் சகிப்புத் தன்மையைக் கற்றுக் கொடுப்பது போன்ற குரூரம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு தலித்தினுடைய வாழ்க்கையில் இருக்கும்
சகிப்புத்தன்மை இந்த உலகில் எந்த அஹிம்சைத் தத்துவமும் உறைபோடக் காணாது. இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினையே இல்லை. மாறாக, வரலாற்றை
எழுதுபவர்களுக்கும் வரலாற்றில் இடம் கேட்பவர்களுக்குமான பிரச்சினை இது. பாடத் திட்டங்கள் அதிகாரபூர்வமான வரலாறுகளாகக் கருதப்படுகின்றன. தலித்துகள் அதில்
தங்களுடைய நியாயமான வரலாற்று உரிமையைக் கோருகிறார்கள். தங்கள் மேல் சுமத்தப்பட்ட இழிவுகள் அதில் எந்தக் கோணத்திலும் நினைவுபடுத்தப்படக்கூடாது என்று
விரும்புகிறார்கள்.
ஏ.கே.ராமானுஜத்தின் 'முன்னூறு ராமாயணங்கள்’ கட்டுரை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டபோதோ, எம்.எஃப். ஹுசைன் நாட்டைவிட்டே
துரத்தப்பட்டபோதோ, மாட்டுக்கறி திருவிழா நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக தலித் மாணவர்கள் தாக்கப்பட்டபோதோ யாரும் வகுப்புவாதிகளுக்கு சகிப்புத்
தன்மையைப் போதிக்க முன்வரவில்லை.
தலித்துகள் இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது, அவர்களுடைய சாதிய அவமானங்கள் துடைக்கப்படும்போது இந்தக் கார்ட்டூன் பாடத் திட்டத்தில்
இடம்பெறுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.
இது அம்பேத்கரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதராக்கும் முயற்சி இல்லையா?
இந்தியா எண்ணற்ற புனிதக் கடவுள்களும் புனித தூதர்களும் நிறைந்த நாடு. இந்தப் புனிதங்களின்மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் இந்த நாட்டில்
எவ்வளவோ பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம்மால் இன்று தேசியக் கொடியை அவமதிக்க முடியுமா? ஒரு உள்ளூர் மதத்
தலைவரையோ, ஜாதித் தலைவரையோ, கட்சித் தலைவரையோகூட கடுமையாக விமர்சிக்க முடியுமா? மம்தா பானர்ஜியை கேலிச் சித்திரம் வரைந்து தனிச் சுற்றுக்கு
அனுப்பிய கார்ட்டூனிஸ்ட் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் பற்றி ஒரு சிறுவன் எழுதிய சுவரெழுத்து வாசகம் பரமக்குடி துப்பாக்கிச்
சூட்டில் முடிந்தது.
இவ்வளவு கடவுள்கள் இருக்கும் நாட்டில் தலித்துகளுக்கென்று ஒரு புனிதர் இருந்தால்தான் என்ன? கறுப்பர்களின் விடுதலையினுடைய இலக்கணம் மார்ட்டின் லூதர் கிங்
என்றால் தலித்துகளினுடைய விடுதலையின் அடையாளம் அம்பேத்கர். இவர்களின் இடம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, அதைத் தாண்டிய ஒரு புனித அடையாளமாக
நவீன வரலாற்றில் உருவெடுத்திருக்கிறது. அவர்கள் கடவுளற்றவர்களின் கடவுள்கள். அவர்கள் அடையாளமற்றவர்களின் அடையாளங்கள்.
காஞ்சா இலையா போன்ற வரலாற்று அறிஞர்கள் கிறிஸ்து, முகமது நபி போன்றவர்கள் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்திற்கு நிகராக அம்பேத்கரின் இடத்தை
வரையறுக்கின்றனர். அவர் தலித்துகளை அவர்களது வரலாற்று அவமானத்திலிருந்தும் பண்பாட்டு இழிவிலிருந்தும் மீட்டார். புத்த மதத்தின் மூலம் புதிய கலாசார,
ஆன்மீகத் தளத்தை அவர்களுக்கு உருவாக்கினார். சட்ட ரீதியாக அவர்களது உரிமைகளை வென்றெடுத்தார். அவர்களை ஒரு அரசியல் சக்தியாக ஒருங்கிணைத்தார். ஒரு
மீட்பர் ஒரு காலகட்டத்தில் மக்கள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய அத்தனை பணிகளையும் அம்பேத்கர் ஆற்றியிருக்கிறார். அவருடைய அரசியல் கருத்துக்கள் இன்று
கோடிக்கணக்கான தலித்துகளிடம் செல்வாக்கு செலுத்துகின்றன. அந்த வகையில் அவர் இன்றைய காலகட்டத்தில் காந்தியைவிடவும் நேருவைவிடவும் வலிமையான
தலைவராகக் கருதப்படுகிறார். காந்தியும் நேருவும் இன்று அதிகாரபூர்வமான அடையாளங்களாக மாற்றப்பட்டு விட்டனர். ஆனால் அம்பேத்கரின் அடையாளம் இன்று ஒரு
புரட்சிகர அரசியல் சக்தியாக செல்வாக்கு செலுத்தி வருகிறது. அம்பேத்கரின் உருவம் என்பது ஒரு அரசியல் தலைவரின் உருவம் என்ற இடத்தைக் கடந்து எவ்வளவோ
காலமாகிவிட்டது. அது தலித்துகளினுடைய புனித வரலாற்று பிம்பம்.
அம்பேத்கர் ஒரு சுதந்திர சிந்தனையாளர். இதுபோன்ற சென்சார்ஷிப் நடவடிக்கைகள் அம்பேத்கருக்கு எதிரானது. அவர் உருவாக்கிய அரசியல் சாசனம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்திருக்கிறது என்பதுதானே உண்மை?
நாம் புத்திசாலிகள். நம்மால் தலித்துகளை அம்பேத்கருக்கு எதிரானவர்களாக மட்டுமல்ல, அம்பேத்கரையே அம்பேத்கருக்கு எதிரானவராக நிறுத்த முடியும். நம்முடைய
தேசத் தந்தை என்று காந்தியை அழைக்கிறோம். ஆனால் காந்தி கனவுகண்ட சமூக, பொருளாதார அமைப்பிற்கு நேர் எதிரான ஒரு அமைப்பை நேரு உருவாக்கினார்.
இன்று காந்தி முன்வைத்த அத்தனை கருத்தாக்கங்களையும் இலட்சியவாதங்களையும் நாம் குரூரமாகத் தோற்கடித்துவிட்டு அவரைத் தொடர்ந்து தேசப்பிதா என்று
கூச்சமில்லாமல் அழைக்கவில்லையா?
வெளிப்பாட்டு சுதந்திரம் என்பதை ஏதோ ஒரு புனிதக் கருத்தாக்கமாக நாம் நம்ப விரும்புகிறோம். ஆனால் நமது ஊடகங்களும் சரி, நமது கருத்தியல் போராளிகளும் சரி
எத்தனை சந்தர்ப்பங்களில் பயத்தின் காரணமாகவோ வேறு ஆதாயங்களின் காரணமாகவோ தங்கள் குரல்களை மௌனமாக்கிக்கொள்கின்றனர்? மேலும் இந்தப் பிரச்சினைக்காக குரல்
கொடுக்கும் தலித் பிரதி நிதிகள் அனைவரும் இந்தக் கார்ட்டூன் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை மட்டுமே எதிர்க்கின்றனர். பாடத் திட்டங்கள் எல்லோரையும் சுதந்திரமாக பாகுபாடு
இல்லாமல் விமர்சிக்கக்கூடியவையாக இருக்கும் ஒரு காலத்தில் இந்த விவாதங்களுக்கான தேவை இல்லாமல் போய்விடும்.
இந்த விவகாரம் வெறும் அரசியல் மட்டுமே. இதில் வேறு எந்தக் கருத்தியல் உள்ளடக்கமும் இருப்பதாகத் தெரியவில்லையே?
உண்மைதான். ஆனால் இப்படி இரு அரசியல் ஏன் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். 80களுக்குப் பிறகு வலிமைபெற்ற அடையாள அரசியல்
என்பது இரண்டு தளங்களில் உருவானது. முதலாவதாக, இந்து வகுப்புவாதிகள் பிற சமூகங்களுக்கு எதிராக உருவாக்கிய மதவாத அரசியல். அது இந்தியாவை,
பிரிவினையின்போது இருந்ததைவிடவும் ஆழமான கசப்புகளுக்கும் காயங்களுக்கும் இட்டுச் சென்றது. இரண்டாவதாக, ஒடுக்கப்பட்டோரால் முன்வைக்கப்பட்ட எதிர்
அரசியல். இதை நாடு முழுக்க தலித்துகள் முன்னெடுத்தனர். தங்களுடைய மறுக்கப்பட்ட. இழிவுபடுத்தப்பட்ட அடையாளங்களுக்காக அவர்கள் அரசியல் தளத்திலும்
பண்பாட்டுத் தளத்திலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியே இந்தக் கார்ட்டூன் விவகாரம். இது அரசியலா என்றால் அது
அரசியல்தான். அரசியல் அற்றவர்களாக இருந்தவர்களின் அரசியல். நம்முடைய பொத்தாம் பொதுவான ஜனநாயக கருத்துக்களால் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள
முடியாது.
இந்தக் கார்ட்டூன் விவகாரம் நாம் தலித் அரசியலோடு ஒரு நியாயமான விவாதத்தைத் தொடங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தக்
கார்ட்டூனைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தவர்களுக்கு உள்நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய சமகால அரசியல் உணர்வுகளை அவர்கள் கணக்கில்
எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டனர் என்பதுதான் உண்மை. பிரதிநிதித்துவ அடையாள அரசியல் என்பதுதான் இன்றைய இந்திய அரசியலின் முகமாக இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக