புருவகாலம்




                          குருவிகளின் எச்சத்திலிருந்து முளைத்த ஆலஞ்ச்செடிகளின் விழுதுகள் அந்த காரைபடிந்த பழைய காலத்து செங்கல் சுவற்றோரமாய் படர்ந்து படுத்திருக்க கருவறை வெடித்து விகாரமாய் வெளியே பார்த்து சிரிக்கிற,...

                          முருகன் கோயிலின் நான்கு பக்க சுவற்றையும் எப்படியாவது கட்டி எழுப்பி முடித்துவிடவேண்டும் என கனவு கண்ட என் கிராமத்து தாத்தாக்களின் கனவையெல்லாம் இன்னமும் பூசி மெழுகியபடிதான் பயணிக்கிறது என் கிராமம்.

                          ஆண்டுதோறும் பங்குனியில் தலைக்கு மொட்டையடித்து குடும்பத்தோடு விருந்தினரை உபசரித்து சொந்தம்பந்தங்களை கூப்பிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துகொண்ட அந்த இனிய தருணத்தை வழங்கிய பஞ்சாங்க பக்கம் ஒன்று சொல்லும் ஓவ்வொரு ஆண்டும் வந்துவிட்டு செல்லும் உத்திரத் திருவிழாவை... 

                         பழமையின் சின்னமாய் மரத்துக் கிடக்கிற எங்களுக்கெல்லாம்... முருகன் தான் கடவுள் என மூலையில் பதிவேற்றம் செய்யபட்டிருக்க பணம் எனும் பித்து பிடித்த சிலர் முருகன் கோயிலுக்கே மொட்டை போட்டது பின்னாளில் வருத்தமாகத்தான் இருந்தது.

                          கிட்டத்தட்ட 60  ஆண்டுகால கனவு அது. காடுகளால் சூழ்ந்திருந்த ஒரு பகுதி. மேற்க்கே ஏரியும் கிழக்கே ஆறும் அடையாளத்தின் மிச்சங்களாய் தனித்து கிடக்க விவசாயத்தின் படிப்பினைகளால் பரம்பரை பரம்பரையாக இந்த பகுதிகளிலேயே தங்கி தங்களின் நாகரிகத்தை வளர்த்துக் கொண்டவர்களும்,... 

                          ஆநிரை மேய்ப்பதற்காய் மூட்டை முடிசுகளோடு தங்களின் ரத்த பிஞ்சுகளையும் சுமந்துகொண்டு பசுமையை தேடி பயணப்பட்டவர்களும் சேர்ந்து காவல் தெய்வமாக வழிபட நினைத்து உருவாக்க முயற்சித்ததுதான் இந்த முருகன் கோயில். ஆனால், கடைசிவரை அது முழுமையை அடையவேயில்லை.

                           மேலத்தெருவில் முருகன் கோயில் கட்டுவதர்க்காய் ஒதுக்கப்பட்ட என் கிராமத்தின் முச்சந்தியில் இத்தனை ஆண்டுகாலமாய் மக்களால் வழிபாட்டுத்தலமாய் மதிக்கப்பட்ட கீற்று கொட்டகை கோயிலுக்கு அருகே கிழக்கு பக்கமாய் மக்கள் நத்தகாவளி தெருவுக்கு செல்ல வசதியாக கொஞ்சம் வழிவிட்டு ஒதுங்கி சில ஆண்டுகள் வரை மூடப்படாமல் இருந்த ஆழமான கிணறு ஒன்றும் இருந்தது.

                            அதை எல்லோரும் கேணி என்று அழைப்பதுதான் எங்கள் ஊரில் வழக்கம். முன்பொரு ஆண்டில் அந்த கிணற்றில் யாரோ தவறி விழுந்ததாகவும் சொல்லி வைத்திருந்தார்கள் நாங்கள் சிறுவயதில் அந்த கிணற்றின் அருகே விளையாட செல்லும்பொழுது.

                            இந்த பக்கத்திலெல்லாம் எழுதிவைத்துவிட்டு போகிற என் சிந்தனையை யார் வந்து கேட்க்க கூடும் என் மக்களிடம்?

                      

   வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்