புருவகாலம்




                
எனது கிராமத்தின் கிழக்கு பகுதியில்... கரையோரத்தில் அடர்த்தியான புளியமரங்கள் சூழ படுத்துகிடக்கும் வடவாற்றுக்கு (எங்கள் கிராமத்தின் வழியே வீராணம் ஏரிக்கு நீர்செல்லும் ஆறு) கிழக்கே உள்ள பகுதியெல்லாம் கீழவெளி என்றும் வடவாற்றின் மேற்கு கரையில் உள்ள வயல் பகுதி மேலைவெளி என்றும் ஏனோ பழக்கத்தில் வழங்கப்பட்டு  இதுவே காலம் காலமாய் வாய் வார்த்தையாய் பேசப்பட  நாளடைவில் இந்த வயல்பகுதியின் பெயரே இதுவாகிபோனதுதான் ஒரு அடையாளம்.
 நாகரிகம் ஆற்றுபடுகையில் இருந்துதான தோன்றியதாய்  வரலாறு சொல்கிறது. இந்த வடவாற்றங்கரையில் இருந்துதான் எங்களின் வாழ்க்கை ஓவியம் வன்னத்தூரிகையால் வரையபட்டது. 

என் பாட்டனார்கள் பசுமையை பற்றி சொல்ல நாங்கள் கேட்டதெல்லாம் கதையாக மட்டும் போனது இதோ இந்த பகுதியில்தான்.

 சில நாட்களுக்கு முன்பு நான் ஊருக்கு சென்றபோது வடவாறு நீரில்லாமல் காய்ந்து கணவனையிழந்த கைம்பெண்ணாய் தோன்றி மறைய நெஞ்சம் விம்முவதை என்னால் நிதர்சனமாய்  உணரமுடிந்தது. 

ஒருநொடி நேரத்திற்குள் என்னால் எனது பழைய கிராமத்தின் பசுமைக்குள் நுழைய முடிந்தது. வெறும் கனவுக்குள்ளேயே பசுமையை பார்த்து சந்தோஷிக்கிற எனக்கே இவ்வளவு வருத்தமென்றால்....நீர் பாய்ச்சி...ஏரோட்டி...பயிர்செய்த என் மூதாதையனுக்கு எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும்? 

அதை எல்லாம் நான் என் கண் வழி பார்த்தபோது மீண்டும் மீண்டும் நாங்கள் வாழ்விழந்துவிட்டதாகவே நெஞ்சம் கூறியது எனக்கு.

ஆடி மாதம் ஆற்றில் நீர் வருகிறதென்றால் வீட்டுக்கு வீடு சூடம் எடுத்து சென்று இறைவனை வேண்டி வழிபடும் கலாசாரம் எங்களுடையது. என் மக்களின் உணவு பஞ்சத்தை தீர்க்க வந்த உன்னத தாயே என்று என் சமூகம் நீர் நிறைந்த ஆற்றுபடுகையை மனதார வாழ்த்தும் அற்ப்புத தருணம் அது. அது எங்கே போனது இன்று? 

ஆவணி மாதத்தின் முதல் வாரத்தில் மடைதிறந்து வயல்வெளிகள் நீர் பாய்ந்திருக்கும். உழவுபூட்டுவதர்க்கு பதமாக இருக்கும் வயலின், நீரின் ஈரப்பதத்தில் நண்டுகள் வலையைவிட்டு வெளியேற அதை பிடிக்க ஒரு கூட்டம் அங்குமிங்கும் அலைமோத நண்டு கடித்துவிட்டதாக சொல்லி யாராவது ஒருவர் காத்த அது பார்ப்பதற்கே ஒரு திருவிழா போல...மனம் முழக்க சந்தோசம் நிறைந்து கிடக்கும் அப்போது. 

அதையெல்லாம் அவ்வபோது நினைத்துப்பார்த்து திருப்திப்பட்டு கொள்வது மட்டும்தான் நம்மிடம் மிச்சமிருக்கும் ஒரு ஆதரவு. 

எங்களின் சிறுபிராயத்தில் அறுவடைக் காலங்களில் கதிர் பொறுக்கும் ஆவலில் வயலில் இறங்கி கால் முழுக்க களிவாயில் சிக்கியபடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து ஒருவாறாக பெற்றவர்களே கதிர் அள்ளி கையில் கொடுத்து அனுப்பும் சம்பவம் மறக்கமுடியாது மனதுக்குள்ளே கிடக்கிறது இன்றும். 

கொட்டும் பணியை பார்த்தால் என்னாவது கணக்கு? ஒவ்வொருவருக்கும் எதாகிலும் ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும் விடுமுறை சமயத்தில். இருக்குற ரெண்டு நாள்ல அம்மாக்கூட கீழவெளிக்கு போயி ஒரு பத்து இருபத தேத்திடுனும்னு.. இப்படித்தான் ஆளாளுக்கு ஒரு கணக்கை மனதுக்குள்ளாகவே போட்டுகொள்வோம். 

களிமண் நிறைந்த வயல்வெளியின் பிரதேசம் எங்கும் எங்களின் கால்தடங்கள் பதிந்து வயல்க்காரனுக்கு கண்கள் சிவக்க கோபம் வரும்.

"யார்ரா அது ? டேய்...கம்பரு, அது யாருன்னு பாரு".

அந்த சமயத்திலெல்லாம் அங்கே அறித்தால்களை அள்ளிக்கட்டிக் கொண்டிருக்கும் உறவுக்காரர்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவர்களை சமாளித்துக் கொண்டே நம்மிடமும் பேச்சுக் கொடுப்பார்கள். 

ம்ம்.... நீங்க ஒன்னு!

பெரிய மாமன் பையன் சின்னவன்.  "ஏண்டா சின்னவன... இன்னைக்கு பள்ளிக்கூடம் போகல?

இன்னைக்கு லீவு மாமா".

வயலுக்கு சொந்தக்காரர் அடுத்த  பக்கம் திரும்புற அதே சமயத்தில் அரைக்கட்டு அறித்தாலை அள்ளி என் கையில் திணிக்கும் படலம் நடந்து முடிந்துவிடும். 

அவர் திரும்பி எங்களை கவனிக்கும் சமயத்தில் நாங்கள் கதிர் பொறுக்கிக் கொண்டிருப்போம். இப்படித்தான் நாங்கள் கதிர் பொறுக்கும் சம்பவம் நிகழும் ஒவ்வொரு நாளும்.



வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்