சுருக்கு பை..!

                      






கிராமத்து பாட்டிகளின் சேவிங் பேங்க். அங்குதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி சில்லறை நாணயங்களை சேமித்து வைக்கிறார்கள். அதனால்தான் பாட்டிகள் அதை பாதுகாப்பாக தங்களின் இடுப்பு பகுதியில் பத்திரப்படுத்துகின்றனர்.
இடுப்பின் ஓரம் இருக்கும் இடம் தெரியாமல் தொங்கும் சுருக்கு பைகளின் உள்ளே  என்னென்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

ஒவ்வொரு சுருக்கு பைகளுக்குள்ளும் பொருளோ.. பணமோ..- இருக்கிறதோ.. இல்லையோ.. ஆனால், நிச்சயம் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.
 கி மு., கி பி யை போல் சுருக்குபைக்கும் காலம் பிரிக்கலாம். ஆம், சுருக்கு பைகள் ஒவ்வொன்றும் நாளைய நாட்களை நமக்கு ஞாபகபடுத்திக் கொண்டே இருக்கின்றன. சுருக்குபைகள் பல வண்ணங்களில் இருக்கும்.  அந்த கயிறுமுனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து  இருப்பார்கள்..
                                     
அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள்.
கால் கவுலி வெற்றிலை, இரண்டு ரூபாய்க்கு பாக்கு என வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் வைத்து இருப்பது பாட்டிகளின் தலையாய கடமை. கிராமபுரங்களில் திருவிழாக்கள் என்றால் பாட்டிகள் உடனே புது புது சுருக்கு பைகளை வாங்க புரபட்டுவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கான தீபாவளி போல.

இரண்டு மூன்று பைகளை வாங்கி வைத்துகொண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பா, புகையிலை, சில்லரைகாசு என இஷ்ட்டத்துக்கு அழுத்தி வைத்து விடுவார்கள்.
சுருக்கு பை கிழிந்தபிறகு இன்னொன்றை மாற்றி அழகு பார்ப்பது பாட்டிகளின் வழக்கம். எதாகிலும் ஒரு பாட்டி சுருக்குப்பையை ஒரு பட்டு நூல் இழைய வாங்கிவிட்டால் அவரின் சந்தோஷத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. சில பாட்டிகளால் இந்த சுருக்கு பையை  கூட வாங்க முடியாமல் போகும் வறுமையும் உண்டு.
ஓர பற்களில் ஒட்டியிருக்கும் வெற்றிலை காரையை சுண்டு விரலால் தட்டி எடுத்தபடி உட்கார்ந்திருக்கும் சமயமெல்லாம் அதை தடவி தடவி பார்ப்பாள் பாட்டி. அத்தனை விருப்பம் சுருக்குபை மேல் அவளுக்கு.
அதுவும் கண்போன பின்பு சில பாட்டிகள் சுருக்குப்பையை திறந்து அதிலிருக்கும் பொருளை தொட்டு பார்த்து எடுத்து தருவது ஆச்சர்யம்தான். சில வயதான தாத்தாக்களும் சுருக்கு பை வைத்திருப்பார்கள். அதிகமானவர்களுக்கு இந்த சுருக்கு பைகள் ஒரு பாதுகாப்பு பெட்டகமாகவே பயன்படுகின்றன கிராமங்களில்.

பாட்டிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத பொருள்களில் சுருக்கு பை கண்டிப்பாய் இடம்பெறும். ரோட்டோரங்களில் வியாபாரம் செய்யும் எண்ணற்ற பாட்டிகளுக்கு  தங்களின் இடுப்பில் தொங்கி கொண்டிருக்கும் சுருக்குபைதான் கஜானாவாகின்றன.
இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் வசதி படைத்த வீட்டு பாட்டிகள் தங்களின் நகைகளை கூட சுருக்குபையிலேயே வைத்துக்கொள்வதுண்டு.
சிறு பிள்ளைகள் தெருவில் வந்து போகும் ஐஸ் வண்டியை பார்த்து ஐஸ் கேட்டு அழும் போதெல்லாம் பாட்டியின் சுருக்குபைதான் அவர்களின் அழுகையை தேற்றி ஆறுதல் படுத்த ஆதரவாய் வந்து நிற்கும் அவ்வபோது அதனுள் பதுங்கியிருக்கும் சில்லறையோடு.
 மேலும், தன் பேர பிள்ளைகளுக்காக வாங்கி வைத்திருந்த தின் பண்டங்களை... பாட்டி அங்குதான் பாதுகாத்து வைத்திருந்து கொடுக்கிறாள். எண்ணற்ற குடும்பங்களில் வயதானவர்களை யாரும் மதிப்பதேயில்லை.
சில நேரங்களில் அவர்கள் மனம் புண்படும் படியாக பேசிவிடுவதும் நடக்கிறது. இந்த சமயங்களில் எல்லாம் மனம் வருந்துகிற பாட்டிகளுக்கு ஆதரவாய் இருப்பது அவர்களின் சுருக்குப்பை மட்டும்தான்.
அந்த கூன்விழுந்த உடம்பின் இடுப்பு பகுதியில் தொங்கி கொண்டிருக்கும் சுருக்குப்பையும் பாட்டியை போலத்தான் சில நேரம் சுருக்கமாகவே தென்படும் நம் கண்களுக்கு.

இப்படி வயதானவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத பினைப்பாகிப் போன சுருக்கு பையின் காலம் முடிந்து போய்விட்டது என்றே கூறலாம். இருப்பினும், இன்றைய சூழலுக்கு ஏற்ப விதவிதமான நிறத்தில் புதிய வகையிலான "pouch " கள் பயன்படுத்தபடுகின்றன. இவையெல்லாம் சுருக்கு பையின் மறு வடிவம் என்றே சொல்லலாம்.
இருப்பினும் பேருந்து நடத்துனரிடம் சில்லறை கொடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் ஜாக்கெட்டில் கையை விட்டு பர்சை எடுத்து சில்லறை கொடுக்கும் கலாச்சாரத்துக்கு சுருக்கு பை எவ்வளவோ தேவலாம் என்றுதான் சொல்ல  வேண்டும். 

 பாட்டியின் சுருக்கு பைகளில் இருந்துதான் திருடும் பழக்கம் சிலருக்கு ஆரம்பம் ஆகிறது. நம்முடைய  ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படியான ஏதாவொரு சம்பவம் நிச்சயம் நடந்திருக்கும்.

இப்போதும்  சுருக்குபையை  பற்றி நினைக்கும போதெல்லாம்  அந்த ஆள் காட்டி விரலில் அப்பியிருக்கும் சுண்ணாம்போடு வெற்றிலை பாக்கை குதப்பியபடி பாட்டி ஒரு முறை நம் கண் முன்னே வருவது உண்மைதான்......



வேக சுகுமாரன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்