புருவகாலம்
என்தெருவில் மச்சு வீடுகளே இல்லாத அப்போதெல்லாம் பெரும்பாலும் வானத்து நட்சத்திரங்களை பார்த்தபடி உறங்காத இரவுகள் எங்களுக்கு வாய்க்கவேயில்லை.
மேற்கு நோக்கி கிழித்த கோடுபோல எங்களின் தெரு யதார்த்த மக்களை சுமந்து அத்தனை இன்பத்தோடு மங்கலான வண்ணத்தில் பார்வைக்கு மறைந்துகிடக்கும்.
இரவுநேரம் ஆனதோ என்னவோ என் மக்களின் வீடுகளில் பலர் தெருவில் வந்து உட்காந்து விடுவார்கள். அன்றைய வேலை தலையில் ந்ட்னடந்தவற்றை மனம் விட்டு பேசும்போது சில நேரங்களில் சண்டைகூட நடக்கும்.
கேநியாங்கரையிளிருந்து வரும் காற்று மேலத்தெருவுக்குள் நுழையும்போதே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவு உணவு தயாராய் இருக்கும்.
வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய களைப்பில் ஆங்காங்கே போடப்பட்ட காயிற்று கட்டிலில் குடித்துவிட்டு படுத்திருக்கும் ஆம்பிளைகளை எழுப்பியே என் கிராமத்து பெண்களின் தூக்கம் போய்விடும்.
தெற்கு முகம் பார்த்த என் வீட்டுதிண்ணையில் உதிர்ந்து கொண்டிருக்கும் மண் சுவற்றுக்கு அருகே உருவம் இழந்துகிடக்கும் கோரை பாயின் மத்தியில் நாங்கள் விழித்துக் கிடக்கையில்...ஏதாவது ஒரு கதையை சொல்லி எங்களை உறங்க செய்வது எனது பாட்டிக்கு கைவந்தகலை.
என் பாட்டியின் உருவத்தை மறக்காமல் இருப்பதற்காய் அவ்வையாரையும் மறக்காமல் இருக்கிறேன். ஆம், என் பாட்டி நான் சிறுவயதில் படித்த புத்தகத்தில் இருந்த அவ்வையாரை ஒத்து காணப்படுவாள்.
அதனால் என் நண்பர்கள் கூட அவள் நடந்து வருவதை தூரத்திலிருந்து பாத்துவிட்டால் என்னிடம் வந்து உங்க அவ்வையார் பாட்டி வர்றாங்க என்றுதான் சொல்வது வழக்ககம்.
அவ்வையாரின் படத்தை எங்காவது நான் பார்த்துவிட்டால் எனக்கு என் பாட்டியின் ஞாபகம் வந்துவிடும். ஆனால், அவள் இல்லாத இந்த உலகில் நான் யாரிடம் சொல்வேன் இதை.
அவள் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் கையில் ஒரு மஞ்சள் பை நிறைய தின்பண்டம் ஏதாகிலும் கொண்டுவருவாள். அது அதிரசமாகவோ அல்லது முறுக்கு வகையாகவோ இருக்கும்.
அப்படி அவள் எங்களை பார்க்க வந்திருந்த பொழுது நிலவொளியில் ஒரு நாள் அவள் சொன்ன கதைகளை கேட்டபடியே உணவு உண்ட தருணம் மறக்கவே முடியாதது.
அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பிள்ளைகளும் பெற்றவர்களும் சேர்ந்து உணவுஉண்ணும் நிகழ்வு மிக சாதாரணமாக நடக்கிற ஒன்று. ஆனால், இன்றைய நவீன காலத்தில் பெற்றவர்களை பார்க்க முடியாமல் சரியான நேரத்துக்கு உணவு கிடைக்காம தவிக்கிற எத்தனையோ மனிதர்களில் நானும் ஒருவனாகி போனேன்.
இன்னும் மறக்கவேயில்லை எனக்கு. எங்கள் தெருவின் ஆரம்பமே முருகன் கோயிலில் இருந்துதான் ஆரம்பிக்கும். இன்னும் கட்டி முடிக்கப்படாத அந்த கோயிலின் தாழ்வாரத்தில் என் கிராமத்தின் இளைஞரணி உறக்கத்தில் உளற ஆரம்பித்திருக்கும்.
அந்த மங்கலான நிலவொளியில் தெருவின் கிழக்கு பகுதியில் ஏதோ ஒரு வீட்டு வாசலில் யார் யார் பேசிக் கொள்கிறார்கள் என்பதை நம்மால் சில நேரத்தில் கண்டுபிடித்து சொல்லிவிட முடியும்.
வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக