ஆடைகள்..!

                                            
                          

                           ஆடைகள் ஒவ்வொரு தேசத்தையும் அதன் பண்பாட்டையும் பிரதி பலிப்பவையாக இருந்திருக்கின்றன. உலக கலாசாரம்  ஒன்றி போய்விட்ட நிலையில் இதுதான் நம் தேசத்தின் பாரம்பர்யம் என்பதையெல்லாம் மூத்தோர்கள் யாரேனும் சொன்னால் மட்டுமே உண்டு.

                            யதார்த்த வாழ்வின் தனிமனித தேவையில் ஆடைகள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன.     உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும்  தேவை என்பதில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

                           இளையவர்களின் சிந்தனை பெரும்பாலும் ஆடைகளை சுற்றியே இருக்கும்.  அந்த அளவிற்கு ஆடைகளின் அழகும் விளம்பரமும் மக்களை ஈர்த்து வைத்திருக்கின்றன என்பதையும் ஆடைகள் உடலின் அத்தியாவிசிய தேவை என்பதெல்லாம் மறைந்து போய் அது கௌரவத்தின் சின்னமாய் வளம் வந்து கொண்டிருக்கிறது உலகத்தில் என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.

                           என்னதான் பியூட்டி பார்லருக்குச் சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தைத் தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகளே. அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார்.

                          ஆண்களுக்கு முன்பெல்லாம் இரண்டு வேஷ்டி, இரண்டு சட்டை இருந்தாலே போதும், ஒரு வருட காலத்தை தாராளமாக ஓட்டி விடுவார்கள். அதே போல், பெண்களுக்கு முழங்கை வரை நீளும் ரவிக்கையையும் 8 கஜம் புடவையைம்  மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் அதிலும் தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

                         பீரோ நிறைந்தாலும்கூட மனது நிறைவதில்லை! பண்டிகை காலத்தில் மட்டுமே துணி எடுப்பது என்பதும் பழங்கதையாகி விட்டது.

                        குடும்பத்தோடு வீட்டை விட்டு கீழே இறங்கினால் திரும்பும்போது இரண்டு டிரஸ்ஸாவது எடுத்துவிட்டுதான் வருவது என்ற நிலை இன்றைக்கு. மொத்தத்தில் இன்றைக்கு ரெடிமேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

                        பண்டிகைக்காலம் நெருங்கி விட்டதென்றால் எல்லோருடைய மனதிலும் எழுகிற ஒரு ஆசை இந்த பண்டிகைக்கு எந்த விதமான ஆடையை வாங்கலாம் என்பதாகத்தான் இருக்கும். குழந்தைகளின் குதூகலத்தில் பங்கு பெறுவது பெரும்பாலும் முதலில் ஆடைதான்.

                        ஆனால், பண்டிகை காலம் நெருங்கினால்தான் இந்த தொழிலில் இவர்களுக்கான சந்தோஷமும் துள்ளி குதித்தபடி ஓட ஆரம்பிக்கும்...அது தையல் தொழில்.

                        முன்பெல்லாம் காலால் மிதித்து ஆடையை உற்பத்தி செய்து கொடுத்தவர்கள் நாகரிக உலகின் அவசரத்தில் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் பொய் விட்டது.

                        அந்தளவிற்கு இப்போது எந்திர மயமாகிவிட்ட உலகத்தில் ஒவ்வொரு தொழிலும் வளர்ச்சியடைந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

                         நமக்கு பிடித்த துணிகளை நம் இஷ்டப்படி வாங்கி கொள்ளுவது பிடிக்காதவற்றை ஓதுக்கி தள்ளுவதும் நாம் வழக்கமாய் செய்வது. ஆனால், நமக்கு பின்னால இந்த துணிகளின் உற்பத்தியில் எத்தனை குடும்பங்கள் பயணித்திருக்கிறது தெரியுமா?

                         ஓரிடத்தில் இருந்து துணிகள் மொத்தமாக தருவிக்கப்பட்டு பின்பு அது பிரித்து சிறிய நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டு பிறகு அதை ஆடைகளாக திரும்ப எடுத்துகொள்ளும் சிறிய முதலீட்டில் இயங்கும் இது போன்ற ஆடை தயாரிக்கு நிறுவங்கள் தங்களின் முதலாளிகளைதான் நம்பியிருக்கின்றன.

                        ஒரு சாதாரண சிறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலை செய்கிறவர்கள் ஒரு நாளைக்கு 100  லிருந்து 200  ஆடைகளுக்கான வேலைகளையே செய்யமுடிகிறது. இதில் நாம் மின்சாரத்தில் இயங்கும் மெஷின்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.

                       ஒருநாளைக்கு அதிகபட்சமாய் பெரிய கட்டிங் மெஷினாய் இருந்தால் 500 துணிகளும் சிறிய கட்டிங் மெஷினாய் இருந்தால் 350 துணிகள் வரை இவர்கள் அளவு பார்த்து வெட்டி வைத்துவிடுகிறார்கள். 

                       அந்த அளவிற்கு அவர்களுக்கு மின்சாரமும் பணியாளர்களின் எண்ணிக்கையும் இட வசதியும் குறைவாக இருப்பதனால் அவர்களால் குறைந்த அளவிலான ஆடைகளையே தைத்து தர முடிகிறது.

                       எந்த ஒரு நிறுவனத்திலிருந்தும் நாம் நேரடியாக ஆடைகளை குறைந்த விலையில் வாங்கிவிடமுடியாது. ஏனென்றால் இந்த ஆயத்த ஆடை தயாரிப்பு என்பது பல சிறு முதலாளிகளை உள்ளடக்கியே இயங்கிவருகிறது.

                       எனவே ஓரிடத்தில் தயார் செய்யப்பட்ட ஆடையை அவர்களோடு இணைந்து தொழில் செய்யும் இன்னொரு சிறு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

                       ஓரிடத்தில் வெட்டி வைக்கப்பட்ட துணிகள் மற்றொரு இடத்தில் தையலுக்காக அனுப்ப படுகிறது. அந்த பணி முடிவடைந்ததும்  அடுத்ததாய் பட்டன் கட்டுவதற்கும், பின்பு அதை அழகாக அயன் செய்து மடித்து பாக்கிங் செய்வதற்கும் இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

                       இப்படியாக, அல்லல் பட்டு கடைசியாக அந்த துணி வந்து சேரும் இடம் நம்மிடம்தான். ஆனால், அப்போது அது கண்ணை கவரும் ஆடையாக மாறியிருக்கிறது.
 

         தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளி நிறுவங்கள் இயங்கி வந்தாலும், சென்னை,ஈரோடு,சேலம்,கோவை போன்ற பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

                      இந்த தொழிலில் நமக்கு இப்போது மிகப் பெரிய போட்டியாக இருப்பது சீனாதான். ஆனால், சில விஷயங்களில் நாம் கொடுக்கும் தரத்தை அவர்களால் தர முடிவதில்லை என்பது ஒரு சிறு சந்தோஷம்தான்.

                        அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ஆயத்த ஆடைகளை வாங்காத நாடுகளே உலகில் இல்லை.

                       ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் இந்த துறையில் அதே நேரத்தில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன.

                       அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


 வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்