பூக்காம்பிலிருந்து வழியும் பால்போல்!


  



 
என்
நினைவு பகுதியில்
நிறைந்திருப்பவை
நிற்க முடியாமல்
திணறுகிறது.

ஓர்
ஆயிரம்
ஆண்டுகளாயினும்
உனக்கு நான்
உடன்படமாட்டேன்...

எதற்க்காக நீ உறங்குகிறாயோ..
உயில் எழுதி வைத்துவிடு

வரப்போகும் வாழ்க்கைக்கும்
உனக்கும்
சம்பந்தம் இல்லை என்று.

புலம் பெயர்ந்து விழுந்திருப்பவை
புல்வெளிகள் என நினைத்தேன்...

அவை,
புதை குழிகளாய் இருக்க

இன்னும்... நீ உறங்குவது
அயற்சியாலா? அல்லது
தளர்ச்சியாலா?

தயவு செய்து
தவற விடு உன் உறக்கத்தை.

ஒரு சமுதாயம்
சத்தமில்லாமல்
சிதையிடப் பட்டிருக்கிறது.

உன்
காதுகளுக்கு இன்னும் வராத
அந்த அவலங்களை நான்
சபிக்கிறேன்.

உண்மையில்..
மனிதர்களால்...
முலாம் பூசப்பட்டிருக்கிறது
உலகு.

பாத்திரங்களுக்கு
பூசப்படுவதை போல.

அடக்கு முறைகள்,
அடிமைத்தனங்கள்,
ஆதிக்கசிந்தனைகள்...

போதும் போதும் என
சொல்லும்படி வாழ்வு.

ஆனாலும்,
எதையோ தேடும் அவசரத்திலும்
மனது துக்கப்படும்போது...

நீ
இன்னும் உறங்கி கழிப்பது
நியாயமா? 

செத்தமரத்தின்
சிசுக்களில் கூட - இனிய ராகம்
சிறகு விரிகிறது.

பூக்காம்பிலிருந்து
வழியும் பால்போல்...

என் மனக் கண்ணிலிருந்து
குருதி தரை பார்க்கிறது.

அடக்கி வைக்கப்படும்
காட்டாறு
கவலை கொள்ளாதபோது...

அவிழ்த்து விடப்பட்ட நீ
உறங்கி கழிப்பது
நியாயமா? 

புலம் பெயர்ந்து விழுந்திருப்பவை
புல்வெளிகள் என நினைத்தேன்...

அவை,
புதை குழிகளாய் இருக்க

இன்னும்... நீ உறங்குவது
அயற்சியாலா? அல்லது
தளர்ச்சியாலா?



வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்