அலையாத்திகாடுகள்
நீரும் நிலமும் சேர்ந்ததே நாம் வாழும் உலகம் .இதில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நீரின் ஆதிக்கமே அதிகம் காணப் படுகிறது. நிலபரப்பும் , நீர்பரப்பும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்று அறிவியலும் சொல்கிறது. நீர் பரப்பில்தான் அதிக உயிரினங்கள் காணப்படுகின்றனவாம். அப்படியிருக்க, உயிர்களின் ஆதாரமாய் திகழும் நீரே சில சமயங்களில் உயிரினங்களுக்கு ஆபத்தானவையாக மாறி போவது விந்தைதான்.
ஆம், கடலால் ஒட்டுமொத்த மனித சமூகத்தை அழிக்க இயலும் என்பதை அவ்வபோது தாண்டவமாடும் "ஆழிப் பேரலைகள்" நிருபித்துவிடுகின்றன. இயற்க்கைக்கு பொதுவாகவே அழிக்கும் மனப்பாங்கு இருப்பது இல்லை. கவனிக்கபடாத மனிதனின் தவறுகள்தான் இயற்கையை சினம்கொள்ள வைக்கின்றன. அதில் ஒன்று தான் ...சுனாமி எனும் ஆழிப்பேரலை.
இந்தியாவை பொறுத்தவரை நிலத்தோற்றம், மண்வகை, தட்பவப்பநிலை ஆகியவற்றை பொறுத்துதான் காடுகளில் தாவரங்கள் வளரும் நிலை மாறுபட்டிருக்கிறது. இவற்றின் தோற்றத்தை பொறுத்து மலை காடு, கலப்பு காடு, ஊசியிலை காடு என்று சொன்னாலும் கூட நம்மை சுனாமிஎனும் பேராபத்திலிருந்து காப்பவை அவ்வபோது சதுப்பு நில காடுகளே. இவை கடல் அலைகளை தடுத்து திருப்பி அனுப்புவதால் "அலையாத்திகாடுகள்" என்றும் அழைக்கப் படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள் பெரும்பாலும் நதிகள் கடலில் கலக்கும் கழிமுக பகுதிகளிலேயே அதிகம் காணபடுகின்றன. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவான நீரையே கொண்ட உயிர் வளம் நிறைந்த குழைவான பகுதியாகும். தில்லை, நரிகத்தல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுப்புன்னை, வெண்கடல், அலையாத்தி போன்ற பார்வைக்கு அடர்த்தியான வேற்பகுதிகளை கொண்டிருக்கும் இந்த மரங்கள் அலைகளின் ஒச்சலை கட்டுபடுத்தி அமைதியாக்கிவிடுகின்றன.
அதிகமான இரைச்சல் இல்லாத நீரோட்டம் கொண்ட வேர்ப் பகுதியில்தான் எண்ணற்ற மீன் இனங்களும் ஆமைகளும் நண்டினங்களும் தங்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக மேற்கொள்கின்றன. இதன் வேற்பகுதி சிக்கல் மிகுந்ததாய் இருப்பதால், மற்ற உயிரிடமிருந்து மீன் இனம் தம்மை காத்துக்கொள்ள முடிகிறது.
இப்படி நீர்வாழ் உயிர்களின் பெருக்கத்திற்கு துணையாய் இருக்கும் இந்த காட்டின் மேற்பகுதியில் கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, சோழகுருவி, பவளகொத்தி என பல்வேறு நாட்டு பறவை இனங்களும் தங்களின் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கிறது . இதனால், இயற்கையின் பரிமாணத்தில் உணவு சங்கிலி சமநிலையில் பராமரிக்கப் படுவதாக ஆய்வாளர்கள் கருதினர். கடலையே நம்பியிருக்கும் மீனவர்களுக்கு சுந்தரவன காடுகள் ஒரு வரபிரசாதம்.
மீன் இனபெருக்கத்திர்க்கு உதவும் அலையாத்திக்காடுகள் மீனவர்களுக்கு மருவாழ்வளிப்பதொடு மட்டுமல்லாமல் அவ்வபோது கடலுக்கும் நிலத்துக்கும் இடையே பாதுகாப்பு அரணாய் நிற்கிறது. இந்தியாவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ...கோதாவரி ,மகாநதி ,கிருஷ்ணா போன்ற நதியின் கழிமுகபகுதிகளிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும், கர்நாடகாவில் உள்ள கூந்தர்பூரிலும், மகாராஷ்டிராவில் ரத்னகிரியிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா போன்ற பகுதியிலும் பெருமளவில் காணப்படுகிறது இந்த காடுகள்.
கங்கை ஆற்று படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடாகும். இதற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய அலையாத்திக் காடு என அழைக்கப் படுவது தமிழ்நாட்டில் உள்ள பிச்சாவரம் காடுகளே. இது கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கர் நிலபரப்பில் பறந்து விரிந்து இயற்க்கைக்கு அழகு சேர்ப்பதோடு மட்டும் அல்லாமல் அவ்வபோது உயிர்களுக்கு அரணாய் இருந்து காத்தும் வருகிறது.
வங்காள தேசத்தில் இந்த வகை மரங்களை வெட்டியதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டை தாக்கிய சுனாமியை தடுக்கமுடியாமல் கிட்டத்தட்ட ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் பலியானதை நாம் இப்போது நினைத்து பார்க்கத்தான் வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையினை மறைக்கும் அளவுக்கு தோன்றிய சுனாமி அலைகள் முத்துப்பேட்டைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இப்படி இயற்கையே அரணாய் நின்று காக்கும் அதிசயத்தை ஏன் நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம்?....இப்போது, ஒரு கன்று மூலம் ஓராயிரம் மரங்களை உருவாக்கும் இந்த திட்டம் ராமநாதபுரத்திலும், சிதம்பரத்திலும் அதன் அழகை பிரதி பலிக்கத்தான் செய்கிறது. சுனாமியின் தாக்குதல்களால் மாங்க்ரோவ் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த கியுபா, பிலிப்பைன்ஸ், ஜாவா போன்ற நாடுகள் மாங்க்ரோவ்களை மீட்டுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது நமக்கும் ஒரு பாடமே.
இவையெல்லாம் வைத்து பார்க்கும்போது நமக்கு கிடைத்த அறிவியல் பாடம் ஒன்றுதான். "எங்கெல்லாம் பவழப் பாறைகளும், சதுப்பு நிலக்காடுகளும் அழிக்கபட்டனவோ அங்கெல்லாம் பூமியின் நிலபரப்பு குறைந்திருக்கிறது"என்பது. "இயற்க்கை தரும் தடுப்புசுவர் சதுப்பு நிலக்காடுகளே"...
இன்று செயற்கையாக கட்டும் சுவர்களுக்கு என்னதான் வலிமை இருந்தாலும் கூட இயற்கையின் பேரலைக்கு முன் அது எம்மாத்திரம்? தமிழக கடற்கரையோரம் கோடிக்கணக்கான பணம் விரையம் செய்து சுற்றுசுவர் கட்டுவதைவிட சுந்தரவனகாடுகளை கரையோரங்களில் அமைக்கும் முயற்சியை ஊக்குவித்தால் ... ஆபத்துகளையும், அழிவையும் ஆரம்பத்திலேயே அடக்க முயற்சிக்கலாம் அரசு .
வேக சுகுமாரன்
this is link for end of the mangrove forest story-
பதிலளிநீக்குclick this url
http://www.youtube.com/watch?v=6Emo7RqaDs0