தூங்காதே, எழுந்தென்னைப் பார்.
இரவுகளை கட்டியணைக்க
நான் -
காதலிக்கவும் இல்லை...
இமைகளை மூடிவைக்க
எனக்கு -
உறக்கமும் இல்லை...
ரத்த பக்கங்களில்
உணர்சிகளும்,
உரிமைகளும்...
இறந்து போகும் சமயத்தில்
அழுதுவிடுகிறேன்.
யுத்தத்தின் பின்புலத்தில்
எமது சிறுவர்கள்
கத்திபிடிக்க கற்றுக்கொண்டிருப்பதை
கண்கெட்டா தூரத்திலிருந்து
காணும் நான்...
எழுதுவிட்டேன்...
இனி
நான் எங்கே தூங்க?
கடவுளுக்காய்...
கை கூப்பி வணங்கும் முன்
பாக்கெட்டை பார்த்து
சரி செய்துகொள்கிறார்கள்...
சரியா இருக்கிறதா
சயனைடு குப்பி என.
சமுத்திரத்தின் நடுவே
சுறாக்களுக்கு முன்பு கிடக்கிறது
இவர்களின் வாழ்க்கை.
அங்கே...
அக்கிரமங்களுக்கு
சிம்மாசனம்...
அநியாயங்களுக்கு
மரியாதை...
நியாயங்கள் என்ன தீங்கிழைத்தன?
கை கட்டி நிற்கிறதைய்யா வீதியில்.
கண்ணிவெடி தேசத்தில்
வேர்களின் போராட்டத்தில்
வெட்டுபட்டவைகளில்
இன்னொன்றும் உண்டு...
அது தமிழ்.
இந்த
கொடுமைகளையெல்லாம்
இம்மியும் பிசகாமல்
பார்த்துகொண்டிருகிறேன்...
நீங்களும் தான்.
பொய்கள்
பிழைத்துக் கொள்ளும்
ஓர் இரவில் - என்
கண்களின் ஓரம் வழியும்
கண்ணீரில்...- ஒரு
கடிதம் வரைகிறேன்...
தூங்காதே,
எழுந்தென்னைப் பார்.
காலத்தில் காதல் வரும்
காதல் நெஞ்சத்தை கொன்றுவிடுங்கள்...
உறவு விலங்குகளை
உடைத்துவிடுங்கள்...
உங்களுக்கு
உறக்கம் வந்தால்...
அதை எடுத்து இரவில் போடுங்கள்..
உங்களுக்கு பசிவந்தால்...
அதை பிய்த்து பிஞ்சுகளிடம்
கொடுங்கள் பாவம்
விளையாடி தொலைக்கட்டும்.
சுதந்திரம் மட்டுமே
உங்கள் எண்ணம்...
சுதந்திரம் மட்டுமே
உங்களின் அங்கீகாரம்...
சுதந்திரம் மட்டுமே
உங்கள் வசந்தம்...
சுதந்திரம் மட்டுமே
உங்களின் நிம்மதி...
வேக சுகுமாரன்
கருத்துகள்
கருத்துரையிடுக