பூங்காக்கள்..!

                             பூங்காக்கள்
                                              

                      பூங்காக்கள்... நம்மை சில நேரம் நமக்கே அடையாளம் காட்டும் உலகின் அற்ப்புத பிரதேசமாய் திகழும் ஒரு நவீன இயற்க்கை.  நவீனத்தை தாங்கி நிற்கும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பூங்காக்கள்தான் இயற்கையின் அனுபவத்தை ஒவ்வொருநாளும் சொல்லி தந்தபடி இருக்கின்றன. 

                  
                      கிராமங்களை போல இங்கு மரங்களின் எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும் கூட பிரதான சாலைகளில் நடப்பட்டு வரும் பசுமை மரங்களால் சுற்று சுழலில் கார்பன் டை ஆக்சைடின் அளவை  குறைத்து சுத்தமான காற்றை பொது மக்கள் சுவாசிக்க வழி வகுக்கிறது பூங்காக்கள்.
                
                      பிரதான நகரத்தின் சாலைகளிலும், தெருக்களிலும் காலை நேர தூக்கத்தை கலைத்து போட்ட எத்தனையோ மனிதர்கள் இது போன்ற பூங்காக்களின் சுற்றுவட்ட பாதையில் தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  சிறுவர்கள் பெரியவர்கள் என ஒரு நாளைக்கு காலையில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேர் வரை பயன்படுத்தும் ஒரு இடமாக மாறி போயிருக்கின்றன பூங்காக்கள்.   

                      நகரை அழகுபடுத்துவதற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும்  சென்னை மாநகராட்சியில் மட்டும்  230 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இது போன்ற பூங்காக்களை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மேலும், பூங்காக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒரு பகுதியாகவும் மாறி வருவதை நாம் பார்க்கவும் முடிகிறது.

                      ராயபுரத்தில் உள்ள அண்ணா பார்க், பெரம்பூரில் உள்ள காந்தி பூங்கா, அண்ணா நகரில் உள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா, செம்மொழி பூங்கா  போன்றவை பெரிய அளவிலான பூங்காக்களாகும். சில பூங்காக்களில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருவது கண்களுக்கு நிச்சயம் விருந்துதான்.

                      அறுவடைக்கு பிறகு சிறுவர்களின் விளையாட்டு திடலாக காட்சியளிக்கும் கிராமத்து வயல் வெளிகள் நகரத்தின் குழந்தைகளுக்கு சினிமாவில் மட்டும்தான் பரிச்சயம்.  நகரத்தின் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டினம் போன்றவை மட்டுமே அமைத்திருக்கிறார்கள். இருப்பினும் சில பூங்காக்களில் இவை சரியாக பராமரிக்க படாமலேயே இருக்கின்றன.

                      விடுமுறை நாட்களில் இது போன்ற பூங்காக்கள் ஒரு சிறந்த பொழுது போக்கும் இடமாக செயல்படுகின்றன. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளுடன் வந்து பொழுதை இன்பத்துடன் கழிக்கின்றனர் பெரியோர்கள். நடைபயிற்சி செய்பவர்களுக்காக நடைபாதைகளும், யோகா தியானம் போன்ற ஆசன பயிற்சிகளுக்காக தனியாக சிமென்ட் தளங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
       
                      ரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோயாளிகளும் நடை பயிற்சி செய்வதற்கென்றே தனியாக நடை பாதைகள் அமைக்கப் பட்டிருகின்றன. 

                     பெற்றோர்களோடு ஆங்காங்கே சில குழந்தைகளும் போட்டி போட்டுகொண்டு நடையில் வேகம் காட்டுவது நம்மை  சிரிக்க வைத்துவிடுகிறது. வயது முதிர்ந்தவர்களையும் அதிக அளவில் பூங்காக்களில் பார்க்க முடிகிறது. நகரத்தின் சூழலில் இது போல் மக்களுக்கு நடைபயிற்சி செய்யவேண்டும் என்கிற சிந்தனை இருப்பதே ஆச்சர்யம்தான்.

                     குடும்பத்தின் வறுமை சூழலை மறந்து பலர் இது போன்ற பூங்காக்களில்  சில நிமிட நேரமாவது திருப்தியுடன் இருக்கிறார்கள். எத்தனையோ மனிதர்கள் தங்களின் பிரச்சினைகளை இந்த மரங்களின் அசைவிலும் குளிர்ச்சியான காற்றிலும் தூக்கி தூர போட்டு விடுகிறார்கள்.

                      வாழ்க்கை பயணத்தின் அவசரத்தில் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்காத எத்தனையோ தம்பதிகள் காலம் போன பிறகு இங்கு நாளும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பறவைகளின் சத்தத்தில் இன்பத்தை அறியும் இசை அரசர்கள் பெரும்பாலும் இந்த காற்றில் தான் தங்களின் முதல் பாடலை உருவாக்குகிறார்கள்.

                       சென்னை போன்ற நகரங்களுக்கு வந்துவிட்டு முகவரி கிடைக்காமல் அல்லல் படுகிறவர்களுக்கு பூங்காக்கள் தான் தாய்மடி.  இது போன்ற பூங்காக்கள் தான் வைரமுத்துவையும் வாலியையும்  உருவாக்கியிருக்கும். கலையுலகின் எத்தனையோ பிதாமகன்கள் இங்குதான் தங்களின் கற்பனை சிறகுகளை விரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

                       அதிகாலையிலேயே இளைஞர்களும் சிறுவர்களும்  இது போன்ற இடங்களில் செய்யும் பயிற்சிதான் பின்னாளில் நமக்கு பல வெளிநாட்டு வெற்றிகளை பெற்று தருகிறது.  இது பார்ப்பதற்கே ஒருவித ஆனந்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.

                        மருத்துவம் பொய்த்துப்போன எத்தனையோ வியாதிகள் இங்கு இலவச யோஹாவால் சரி செய்யபடுகின்றன. சுத்தமான காற்றை சுவாசிக்கும் போதே உடல் புத்துணர்ச்சியில் திளைக்க ஆரம்பித்துவிடுகிறது. குடும்ப பெண்கள் தங்களின் இடுப்பு சதையை பெரும்பாலும் இந்த பூங்காவிலேயே குறைத்துவிடுகிறார்கள். இளமையில் கவனிக்கப்படாமல் கிடந்த உடலமைப்பு இங்கே ஒவ்வொரு நிமிடமும் கவனிக்க படுகிறதை நாம் காணலாம்.

                        வாரத்தின் ஏதாவொரு நாட்களில் இலக்கிய கூட்டங்களுக்காக தம்மை தயார் செய்து கொள்கிறது பூங்காக்கள். இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மனிதர்கள் மனம் விட்டு பேச சிறந்த இடம் பூங்காக்கல்தான்.

                        ஆனால், பெரும்பாலான பூங்காக்களில் கழிவறைகள்,  நீர்தேக்கதொட்டிகள், குப்பை தொட்டிகள் போன்றவை முறையாக பராமரிக்கப் படுவதில்லை என்கிற குற்றசாட்டும் பொது மக்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
                     
                         மின் விளக்குகள் பராமரிக்கப்படாத பூங்காக்களை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பயன்படுத்துவதை தடுக்க முடிவதில்லை. இது போன்று சமுதாயத்துக்கு தேவையான பூங்காக்களையும் சில நேரங்களில் மெரினா பீச் என நினைத்துக் கொண்டு காதலர்கள் வந்து உட்கார்ந்துவிடுகின்றனர். இதனால், சில நிமிடம் கூடுதலாக நடைபயிற்சி செய்யலாம் என நினைப்பவர்கள் கூட முகம் சுளிக்கும் இடமாக மாறி போய்விடுகிறது பூங்காக்கள்.

                         பூங்காக்கள் சமுதாய மலர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதை அரசும் பொது மக்களும் உணர்ந்தால்...அடுத்த சந்ததிக்கு கொஞ்சமாவது சுத்தமான காற்றையும், மனித நேயத்தையும் நாம் விட்டு விட்டு செல்லலாம்...


வேக சுகுமாரன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்