மெரினா கடற்கரை
(இதில் குறிப்பிடப்படாத எத்தனையோ சிறப்புகள் மெரினாவை சுற்றி இருக்கத்தான் செய்கின்றன விவேகானந்தர் மண்டபம், செம்மொழி தமிழாய்வு மையத்தைப் போல...இருப்பினும் நிகழ்ச்சியை தொகுக்கவேண்டிய அவசரத்திலும் நண்பன் ஆம்ஸ்ட்ராங் எழுதி கொடுத்ததற்கு நன்றிகள்.)
வங்காள விரிகுடா கடலின் சென்னை கரை பகுதி தான் மெரினா கடற்கரையானது. இக் கடற்கரை கிட்டத்தட்ட 12 கி.மீ நீளம் உடையது. இதே போன்று நீளமான கடற்கரைகள் உலகில் பல இருந்தாலும், உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமை நமது மெரினாவுக்கு மட்டும் தான். சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் இக்கடலில் கால்கள் நனைக்காமல் செல்வதென்பது இதுவரையில் இருந்ததில்லை என்று தைரியமாக கூறும் அளவிற்கு பெயர்போனது.
சென்னை துறைமுகம் உருவாகுவதற்கு முன் மெரினா கடற்கரையானது வெறும் களிமண் நிறைந்த பகுதியாக இருந்து வந்தது. இக்கடற்கரையை 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப் தான் முதன் முதலில் அழகாக வடிவமைத்தார். இந்த பராமரிப்பின் தொடர்ச்சி தான் நவீன படுத்தப்பட்ட இன்றைய மெரினா கடற்கரை.
இந்திய சுதந்திர போராட்ட தலைவர்கள் பலர் சிலைகளாக இந்த கடற்கரையில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இரண்டாம் உலக தமிழ் மாநாடுக்கு பின் தமிழுக்கு தொண்டாற்றிய புலவர்களின் சிலைகளையும் அரசு நிறுவி, இக்கடற்கரைக்கு சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமல்லாமல் உலக தொழிலாளர்களை பெருமை படுத்தும் தொழிலாளர் சிலைகளும் இங்கு அமைந்திருக்கின்றன.
முன்னால் முதல்வர்களும், திராவிட இயக்க தலைவர்களுமான மதிப்பிற்குரிய எம் ஜி ஆர் , அறிஞர் அண்ணா போன்றோரின் சமாதி இக்கடற்கரையில் அமைந்து இக்கடற்கரையின் மதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தந்தை பெரியார், காமராஜர், மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் உட்பட பல்வேறு தலைவர்களின் சிலைகள் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. உலக தமிழர்களால் பெரிதும் வணங்கப்படும் கண்ணகி சிலை இங்குதான் அமைந்திருக்கிறது.
கல்வியில் புகழ்பெற்ற சென்னை பல்கலை கழகமும், தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகமும், இந்திய அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் இங்குதான் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தான் இங்கு வருடம் தவறாமல் நடைபெறும். சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.
நடைமுறையில் இக்கடற்கரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் கூவம் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கடற்கரையைக் காண தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகின்றனர். காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், காதலர்கள், பெரியவர் முதல் சிறியவர் வரை பல பேர் இங்கு வந்து செல்கின்றனர். தென்னிந்தியாவின் காலச்சார நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் இக்கடற்கரை இருப்பது கூடுதல் சிறப்பு. நகர மக்களுக்கும், சென்னையை சுற்றிப் பார்க்க வரும் பிற மக்களுக்கும் இக்கடற்கரை ஓர் வேடந்தாங்கல்.
இந்த கடற்கரை தண்ணீருக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி, பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். தற்போது துரித உணவகங்களையும், கடல் காற்றுடன் சுவைத்து மகிழலாம். கடல் நீரில் கால் நனைத்து விட்டு பொறித்த மீன் துண்டை சுவைக்கும் அனுபவம் இங்கே வரும் பலருக்கும் கிடைத்து இருக்க கூடும். இப்படியாக ஆயிரக்கணக்கான வியாபார குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கும் இதே மெரினா தான் குழந்தை தொழிலாளர்களையும் ஊக்குவிக்க காரணமாகி விடுகிறது. மாலை நேரத்தில் சுண்டல் விற்கும் பலர் பள்ளி படிக்க வேண்டிய சிறுவர்கள் என்பது மறுக்க முடியாத அவல செயல் தான்.
சிறிய அளவிலான இலக்கிய கூட்டங்கள், நல் சமுக நோக்கத்தோடு இயங்கும் அமைப்புகளின் கூட்டங்கள், சமுக தொண்டு நிறுவனத்தின் குழு அமர்வு நிகழ்வுகள், நண்பர்கள் சந்திப்பு என இந்த மெரினாவை வாடகை இல்லாத நல்ல meeting ஸ்பாட் ஆக மாற்றி பயன்படுத்துவோரும் இருக்க தான் செய்கிறார்கள். இப்படி இக்கடற்கரை ஓர் அற்புதமான இடமாக திகழ்கிறது. தனியாக இங்கு வந்து அமர்ந்தால் வாழ்க்கையில் ஏதோ ஓர் நிம்மதியை இந்த கடலும், மணலும், கடற்கரையும் நமக்கு கொடுக்கும். அதனால் தான் இக்கடற்கரை சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக கலந்து விட்டது.
குதிரைகளில் அமர்ந்த படி வலம் வரும் குதிரைக்காரர்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் மனது சந்தோசத்துக்கு போகிறது. நாமே குதிரையில் பயணித்து இறங்கியது போன்ற அனுபவம் சில வினாடிகளில் வந்து போவது இயற்கைதான். குடும்பத்துடன் வந்து விளையாடிவிட்டு, கொண்டு வந்த இரவு உணவை பிரித்து சாப்பிட்டுவிட்டு செல்வோர் எண்ணிக்கை பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் மற்ற விடுமுறை நாட்களைவிட பன்மடங்கு அதிகரிக்க தான் செய்கிறது.
வேக சுகுமாரன்

கருத்துகள்
கருத்துரையிடுக