சாதி இல்லாத வானம்
ஆசை ஆசையாய்... வாழுகிற எண்ணத்தோடு காதல் திருமணமாகி மனதுக்கு பிடித்தவனோடு வாழ்க்கையை அனுபவிக்கும் தருணத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளம் பதை பதைக்கும் கொடூரத்தை நிகழ்த்தி விடுகிறார்கள் ஆணவக்காரர்கள்.
காதல் பறவைகள் இனிமை ததும்ப புண்ணகைக்கும் வெளிகளில் எங்கிருந்தோ விரியன்கள் வெளிப்பட்டு விஷம் கக்கிவிடுகின்ற மனசாட்சியற்ற மனிதர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமி அழியத்தான் வேண்டுமென தோன்றுகிறது.
முருகேசன், இளவரசன், கோகுள்ராஜ், சங்கர் இதெல்லாம் வாழும் ஆசையில் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் உடல்கள். வாழ வேண்டிய வயதில் வரலாற்றின் எடுத்துக்காட்டுகளுக்காக உரமிடப்பட்ட விதைகள்.
வாழ்வதற்கே உரிமையில்லாத போது எப்படி காதலித்து திருமணம் புரிந்து, பெற்றவர்களின் முன்பு சந்தோஷமாக வாழலாம்? அது எத்தனை பெரிய தவறு. அதற்கு என்ன செய்யலாம்..? கொலையை தவிர. ஆணவக் கொலை செய்வது புனிதம் அதனால் அதையே செய்யலாம்.
அண்ணனே தங்கையை வெட்டலாம். தந்தையே மகளை நிர்வாணம் ஆக்கி ஓடவிட்டு பழி தீர்க்கலாம். உறவுக்காரர்களே விஷம் கொடுக்கும் பாக்கியத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒருவரும் அவர்களை வாழவைத்துவிடக்கூடாது. அதைத்தான் தவறு என்கிறது இரத்தம் குடிக்கும் ஒரு கூட்டம்.
சாதியின் கோரத்தால் ஒடுக்கப்பட்ட சமூகம்.. மனமில்லாத ஜடங்களுக்கு எப்போதும் புளிக்கத்தான் செய்கிறது. எப்போது விடியும் சாதி இல்லாத வானம்.
கருத்துகள்
கருத்துரையிடுக