குருகுலம்



அம்மாவிடமோ அப்பாவிடமோ இதுபற்றி நான் சொல்லிக் கொள்ள வேயில்லை.  யாரிடம் இதுபற்றி பேசுவது என்பதில் கூட எனக்கு சிக்கல் இருந்தது. அண்ணனிடம் கேட்டால் போடா போய் வேலையை பாரு என்று அடிக்க வருவான். நான் ஏன் மற்றவர்களிடம் இது பற்றி கேட்டு உதை வாங்க வேண்டும்? எனக்குள்ளாகவே கேட்டுக்கொள்வதோடு சரி...மற்றபடி அதை அப்படியே மறைக்கக் முயற்சித்தேன். அனாலும், உள்ளுக்குள் கிடந்த ஆசை உருண்டை கண்ட இடத்திற்கும் உருண்டு என்னை துவம்சம் செய்து கொண்டிருந்தது.

உறக்கமும் நேரத்தில் வந்து தொலைய மறுத்தது. அப்போதெல்லாம், எனது கிராமத்தின் மேற்கு பகுதியில், விழுதுகள் படரும் ஆலங்குலக்கரை பக்கம் வேலு கடையில் மிட்டாய் வாங்கிய எனது நண்பர்களோடு அந்திம நேரத்தில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தும் சமயங்களில் இப்படி எதிர்கால திட்டம் பற்றி ஆளுக்கொரு கருத்தை முன்வைப்பதும் அதை கிண்டலடிப்பதும் நடக்கும். மிட்டாய் சப்பி சிவந்து போன நாக்கோடு நான் கிண்டலடிக்கப்பட்ட பெரும்பாலான இரவுகளில் சரியாக சாப்பிட தோணுவதில்லை எனக்கு.

மனம் முழுவதுமாக அந்த வார்த்தைகள் வந்து என்னை அலைகழித்துப் போடும். எப்படியாகிலும் சொல்வதை சாதித்து காட்டவேண்டும் என்கிற உணர்வு மேலெழும்பி என்னை வெறிபிடித்தவனாய் அலையவிடும். அதன் பொருட்டு ஏற்ப்படும் இயலாமை என்னை சூழ்ந்துகொள்ள அழுகை பீரிட்டு வரும்.


என்னை சில காலமாய் குடைதெடுத்து கொண்டிருந்த அந்த விஷயமானது  என்னவென்றால், நானும் ரமேஷும் சங்கரும் ஒன்றாக குருகுலத்தில் சேரவேண்டும் என்று ஒரு ஆறுமாத காலமாக பலவித திட்டங்களை வகுத்துப் பார்த்துவிட்டோம். இன்னும் இரண்டு தேர்வுகள்தான் மிச்சமிருக்கின்றன. அதுவும் முடிந்துவிட்டால் நிச்சயம் வேறொரு பள்ளிக்கூடம் நோக்கி நான் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், நாங்கள் குருகுலத்தில் சேர்வது பற்றித்தான் யோசித்து வைத்திருந்தோமே ஒழிய மற்ற அரசு பள்ளிகளைப் பற்றி யோசிக்கவில்லை. அதனால், மிச்சமிருக்கிற இரண்டு தேர்வுகளையும் ஒழுங்காக முடித்துவிட்டால் அந்த பள்ளியில் சேருவது சுலபமாகிவிடும் என்று கணக்கு போட்டு தீர்மானம் இயற்றி கொண்டேன்.

வெப்பக்காற்றின் நெடி பறக்கும் ஏப்ரல் மாதத்தின் வெயிலுக்கு நடுவேயும் ராமகிருஷ்ணன் வாத்தியார் எல்லோரிடமும் இப்படி கேட்டு வைப்பார். அடுத்து யாரெல்லாம் எந்தெந்த ஸ்கூல்ல போய் சேரப் போறீங்க? அவருடைய இந்த கேள்வியை அன்றைய நாளுக்கான மிகச்சிறந்த கேள்வியாக கருதி ஆவலோடு வழியும் எங்கள் பதில்கள்.

என் முறை வரும் போது சந்தோஷமாகவும், கொஞ்சம் திமிர்த்தனத்தோடும் நான் குருகுலம் சார் என்பேன். ரமேஷும் அதையே சொல்வான். எங்களுக்கு மற்றவர்கள் அரசு பள்ளிகளை குறிப்பிடும் போது நாங்கள் தனியார் பள்ளியை சுட்டுவதால் ஒருவித கௌரவம் வந்து உட்கார்ந்துகொள்ளும் மனதுக்குள். இதையெல்லாம் தாண்டி குருகுலத்தில் சேர்ந்து படித்துவிட வேண்டும் என்கிற சிந்தனை என்னை ஒவ்வொரு நொடியிலும் இயக்கிக் கொண்டேயிருந்தது.



ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் இருந்த ஒரு பாடத்தில் வரும் சமூக சேவகர்களாக நான் என்னை கற்பனை செய்து பார்ப்பேன். மருத்துவர், காவல் அதிகாரி, சட்டவாதி, விவசாயி, விமான ஓட்டுனர், ராணுவ அதிகாரி இன்னும் என்னென்னவோ கற்பனை என்னை கடந்து வட்டமிடும். நானே காவல்துறை அதிகாரியாகி நிற்ப்பேன். கழுத்தில் ஸ்டேத்தாஸ்கோப்போடு மருத்துவராகி பூனைக்கும் நாய்க்கும் வைத்தியம் பார்ப்பேன். காற்றில் விமானங்களை மிதக்கவிடுவேன். இமயமலை பிரதேசங்களிலும் இன்னபிற பணிக்காடு களிலும் துப்பாக்கியோடு போர் புரிந்திருக்கிறேன். இவை எல்லாம் அந்த புத்தகத்தோடு விளைந்தவை.

நம்மில் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு பாடம் நிச்சயம் இருந்திருக்கும். இவையெல்லாம் அந்த பக்கங்களை புரட்டுகிறவரையில் தான் நிகழும். பின் வரும் காலங்களில் இரவின் மடியில் மறையும் சூரியன் போல எங்கு போய் மறையுமென்று தெரியாது இந்த கனவு. இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியில் நான் மட்டும் நிர்க்கதியாய் நிர்ப்பது போல உணருவேன்.

அரசின் மதிய உணவு திட்டம் தந்த சொற்ப்ப தைரியத்தில் சோர்ந்து போய் சுவற்றோரமாய் சாய்ந்திருக்க அந்த சமயத்தில் கணக்கு புத்தகத்தையோ, அறிவியலையோ மேசைமேலே ஆசிரியர் விரித்துப் போட்டுவிட்டு எங்களை பார்த்து மெல்லிய குரலெடுத்து இருமும்போது என்னுடைய கற்பனை உலகம் மறைந்து மீண்டும் வாசிப்பு தொடங்கும்.

வழக்கம் போல அந்தி சாயும், பள்ளிமுடியும், மீண்டும் எங்கள் பேச்சு தொடரும், இரவு உணவருந்திவிட்டு அம்மாவுக்கருகே படுத்துறங்கும் தருவாயிலும் குருகுலம் ஒருமுறை  வருத்ததோடு கனவில் வந்துவிட்டு போகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்