மனிதர்கள் விசித்திரமானவர்கள்

மனிதர்கள் விசித்திரமானவர்கள்,...வாழ்க்கையெனும் மிகப்பெரிய பிரயாணத்தில், அத்தனை கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு பயணிக்க தெரிந்தவர்கள். ஆனால், அந்த பயணத்தின் ஊடாக பெறுகிற அனுபவம் மிக பெரியது. அது ஒவ்வொரு பகுதியையும் வியர்வை சொட்ட சொட்ட கடந்து போக கற்றுக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

பயணங்கள் சிலருக்கு வலியற்ற ஆனந்தமானதாய் அமைந்துவிடுகிறது. ஆனால், பலருக்கு அது வலியோடும் உரக்க அழுது வடிக்கும் கண்ணீரோடும் தான் பிறந்து கொண்டிருக்கிறது. விடியலின் பொழுதுகளில் அரக்க பறக்க அன்றைய நாளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் உயிர்களைப் போல எல்லா தொடக்கத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு நம்மை தொற்றிக் கொண்டுவிடுகிறது. அதை உணரும் முன்னமே நம்மை கடந்து போய் விடுகிறது. அதை எண்ணி எண்ணியே காலத்தை விரயமாக்குகிற சிந்தனை நம்மை வியாபித்துக் கொள்கிறது. 
இவை எதுவும் இல்லாமல் எந்த குறுக்கீடுக்கும் அடிபணியாமல் அந்த நிமிடங்களை மென்மையாக கடக்கிறார்கள் சில மனிதர்கள். அவர்கள் மிக அபூர்வமானவர்கள். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதேயில்லை. அவர்கள் உலக நியதிகளை அறிந்திருக்கிறார்கள். தங்கள் என்ன ஓட்டங்களை கண்டுணர்ந்து அதை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அருகருகே கடந்து செல்கிற அத்தனை  ஆத்மாக்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் பிதற்றித் தள்ளுகிற பித்தர்கள் அல்ல அவர்கள். அவர்களை நாம் யோகிகள் என்றும் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் பண்போடு அழைக்கிறோம்.


ஆகவே, எல்லா நிமிடங்களிலும் அவர்களால் ஒன்றாகவே இருக்க முடிகிறது. நம்மை போன்ற சாதாரண பிரஜைகளால் மட்டும்தான் அது முடிவதேயில்லை. இவர்கள் யாரையும் கட்டுப் படுத்த நினைப்பதேயில்லை. நாம்தான் இவர்களின்பால் கட்டுண்டு கிடக்கிறோம். இவர்கள் சொல்வதை செய்துமுடிக்க காத்துக் கிடக்கிறோம். இவர்களின் புன்னகைக்காக ஏங்கி கிடக்கிறோம். அந்த புன்னகை ஏதோ ஒரு வலியை நம்மிடமிருந்து பிரித்து நமக்கு விடுதலையை கொடுக்கிறது. அது ஏதோ ஒரு கரையை நம்மிடமிருந்து சுத்தம் செய்கிறது. நோயால் தாக்கப்பட்டவனுக்கு மருந்திடுவதைப் போல அந்த மனிதர்களின் சந்திப்பு நமக்கான நம்மை நம்பிக்கையோடு கொஞ்சம் அடையாளம் காட்டிவிட்டுப் போகிறது. இவையெல்லாம் நம்மை அவரின்பால் கொண்டு சேர்த்துவிட விழைகிறது.
இப்படி சில மனிதர்களை சந்தித்து நம்மை கிள்ளிப் பார்த்துக் கொண்டிருக்கிற சமயத்தில், மனிதர்களிலே சில களைகளும் கலந்து இருக்கத்தானே செய்கிறது. நெல்மணிகளை கொடுக்கும் நாற்றுகளை கடந்து தலை நீட்டி நிற்கும் இந்த புற்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது உண்மையான விளைச்சலோ என்பதைப் போலபடும். ஆனால், உண்மை அது அல்லவே. நாம் தேடி தேடி அறுவடை செய்து நமக்கு தேவையானதைதானே கடவுளுக்கென்று படையல் செய்கிறோம். அப்போது வெட்க்கி தலைகுனியாது என்ன செய்யும் இந்த புற்கள். அவ்வளவுதான்  நடக்கும். இது எல்லா உயிருக்கும் பொருந்தும்.


நீரோடையின் நீளத்தை மாற்றுவதாலோ,...வயலின் அகலத்தை கூட்டுவதாலோ,...நெல்மணிகள் சொர்ணமாய் மாறிவிடுவதில்லை.பின்பு ஏன் இவர்களுக்கு இத்தனை ஆசை?  ஆசை. ஆம், ஆசைதானே நம் வாழ்வின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கிறது.ஆசைதானே பயணத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுபடுத்துகிறது.பார்க்கும் இடமெல்லாம் ஆசை வயல்கள் பூத்துகிடக்கின்றன. அவை எப்போதும் அறுவடை நிலையிலேயே இருக்கின்றன. ஆனால், என்ன செய்ய? வாழ்க்கைதான் அதற்க்கு நேர் மாறானதாய் பயனிக்கின்றதே.


நம் ஆசைகள் நம் கண்களை மறைத்து விடுகின்றன.அவை கண்ணிருந்தும் அணியப்படும் கண்ணாடி போல. கண்ணாடி அணிந்துகொண்ட கண்கள் அந்த கண்ணாடியின் ஊடாகத்தான் இவ்வுலகத்தை நோக்குகின்றன. நாம் அந்த கண்ணாடியை எறிந்துவிட்டு சுய கண்களால் காணும் வரை நமக்கு காய்ந்த பகுதிகளெல்லாம் பசுமை போலத்தான் தோன்றும். அதைத்தான் பலர் புரிந்து கொள்வதேயில்லை. அவர்கள் கண்ணாடியை நம்பி காலம் கடத்துகிறவர்கள். நாம் கண்களை நம்புகிறவர்கள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்