அந்திமல்லி. 3

அந்திமல்லியுடனான உரையாடல் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருபக்கம் அது ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவள் குறித்த பின்னணியை தெரிந்துகொள்ள தயாராகவே இருந்தேன். ஆகையால் அந்த சம்பவம் குறித்து முகநூல் பதிவிலும் தெரியப்படுத்தியிருந்தேன். சொல்வதென்றால் அந்த ஒரு நாளுக்கு பின்னர் நானே கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.



எப்படியாகிலும் அந்திமல்லி கதையை எழுதவேண்டும் என்கிற ஆசை இருந்ததே ஒழிய, அதனால் வரப்போகும் பின் விளைவுகளை நான் யோசிக்கவேயில்லை. டேய் என்ன பீலா வுடுற....அப்படித்தானே உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால், கதையோ வேறு. அந்த  ஒரு நாள் நிகழ்வை எழுதிய உடனேயே ஆரம்பித்துவிட்டது எனக்கு சங்கு. அதை பின்னர் சொல்கிறேன்.

நீங்களும் நானும் மனிதர்களை சந்திப்பதற்கும், அந்திமல்லி சந்திப்பதற்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கிறதில்லையா..? கதைக்களம் அமைவது இயற்கையானது. அதை எந்த இடைஞ்சலும் இல்லாமல் எடுத்துக்கொள்வதுதானே முறை. அதைத்தான் செய்ய முயற்சித்தேன். அதற்காகவே அந்திமல்லியை ஆய்வு கட்டுரையாக்கியிருக்கிறேன் ஆய்வகத்தில்.......

சொல்லப்போனால், கற்பனைகளை எழுதுவதால் என்ன நடந்துவிட முடியும்..?  கற்பனைகள் எளிதாக கிடைத்துவிடுகின்றன. உண்மை எத்தனை கடினமானதாய் இருக்கிறது பெறுவதற்கும், அனுபவிப்பதற்கும். உண்மையை எழுதுவதால் ஒரு செய்தியை சொல்ல முடியும், ஒரு வாழ்க்கையை சொல்ல முடியும், ஒரு திருப்பத்தைக் கூட சில நேரங்களில் ஏற்படுத்திவிடவும் முடியும். இதை நினைத்துக்கொண்டு தான் அலுவலகத்தில் பொதுப்பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன் பேருந்தில்...

மப்பும் மந்தாரமுமாயிருந்தது ஆவணி மாத வானம். இன்னும் சில மணித்துளிகளில் அழுது தீர்க்கும் தீரத்தில் தேம்பிக்கொண்டிருந்தது வானம். அப்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூரல்கள் விழ கடைகளை காலிபண்ணிக் கொண்டிருந்தார்கள் சாலை ஓரங்களில். பேருந்து வடபழனி நோக்கி பயணித்தபடியே இருந்தது. புழுதிகள் பறக்கும் சென்னை என்பதால்., மழை வரட்டும் என்கிற வெளுத்த சிந்தனையோடு பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொண்டேன்.

அருகில் எங்கோ எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருந்தார். செல்லாத்தா...செல்ல மாரியாத்தா... அப்படியே காற்றில் வழிந்து, காதில் ஏறிக்கொண்டிருந்தது அந்த காந்த குரல். கலைந்த கேசத்தோடு யோசனையாய் இருந்த எனக்கு அது ஒன்றுதான் ஆதரவாயிருப்பதாய் தோன்றியது அப்போது. உடல் தளர்ந்திருந்தேன். உடல் தளரும் நேரங்களில் எல்லாம் பாடல்கள் நமக்கு எத்தனை புத்துணர்ச்சியை தந்து விடுகின்றன.

பல நேரங்களில் பாடல்கள் தான் நமக்கு ஏற்ற சூழலை உருவாக்கி தருகின்றன. அதற்காக நாம் எந்த பிரயாணத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருப்பதில்லை என்பது எத்தனை சுவாரஸ்யமானதாய் இருக்கிறது.

அப்படியே அயர்ந்து பூங்கா இருக்கை ஒன்றை ஆக்கிரமித்தேன். ஆனால், இன்னும் யோசனையில் தான் இருந்தேன். சட்டென சடசடத்து எழுந்த வானம் பொத்துக்கொண்டு ஒழுக ஆரம்பிக்க அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து தெறித்து ஓடினார்கள்.கோவிலுக்கு சென்றவர்கள் கூட குடைபிடித்தபடி வேகவேகமாய் நடைபோட்டார்கள்.

அந்த மழையிலும் அந்திமல்லி குறித்த தகவலை சகோதரி ஒருவரிடம் பேச்சு போக்கில் சொன்னதுதான் தாமதம், அண்ணா சந்தோஷமா போய்ட்டு வாங்க என்பது போல் அந்த சகோதரி எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.


விபச்சாரியை சந்திப்பதற்கு வாழ்த்து சொன்ன முதல் சகோதரி அவராகத்தான் இருப்பார் என்று நினைத்தபோது என்னையும் அறியாமல் நடுத்தெருவில் நடந்துகொண்டே சிரித்தேன் மழையில்... அந்த சிரிப்பை பார்த்த முதிய பெண்மணி ஒருவர்.. மழையில என்னத்த கண்டான் கிறுக்குப்பய சிரிச்சுக்கிட்டே போறான் என்று நினைத்திருக்கலாம்... ஆகையால், என்னை ஒரு வேடிக்கை பொருளா , அதிசயமாய் நின்று பார்த்து அவரும் சிரித்தார்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்