அந்திமல்லி.2


சாலையில் மிதமான நெரிசல் இருந்ததால் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது பேருந்து.  வெப்ப காற்றில் புகையை கக்கியபடி  கோடம்பாக்கம் பாலத்தின் மீது தடதடத்துக் கொண்டிருந்த 26 எண் கொண்ட பச்சைநிற பேருந்தில் அந்திமல்லியுடன்  ரத்தம் கக்கி கொண்டிருந்தது என் நிமிடங்கள்.

எங்களுக்கு முன்னாலிருந்த சீட்டில் இரண்டு மாமிக்கள் அமர்ந்திருந்தார்கள்...
அதில் ஒருவர் என்ன நினைத்தாரோ... என்னை பார்த்து முகம் சுளிக்கும் படியாய் முகத்தை கோனளாக்கி காட்டிவிட்டு வெடுக்கென்று திரும்பி முனுமுனுத்தார் . ”கலிகாலம், இதையெல்லாம் நான் பாக்கனும்னு என் தலையில எழுதியிருக்குன்னு”  அவர் நினைத்திருக்கலாம்.

தினமும் இந்த வழியாய்தான் வருகிறேன் இதுபோல் ஒருநாளும் நடந்ததில்லையே என தோன்றியது எனக்கு.

ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அந்திமல்லியும் நானும் பேசிக்கொண்டு வந்ததில் நான் பேசியது மட்டும் தான் அந்திமல்லி காதில் விழுந்தது.

அப்பறம் என்னன்னனு கேக்கறீங்களா..?  அந்திமல்லி பேசியது அங்கிருந்த அத்தனை பேர் காதுகளிலும் விழுந்தது. அந்த சூழலை கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்...? தொழில் ரீதியாக பலரிடம் பேசி பேசி அது பழக்கமாகியிருந்தது அவளுக்கு. ஆகையால் யார் தன்னை பார்க்கிறார்கள் என்கிற கவலை அந்திமல்லிக்கு இல்லை.

ஆனாலும் ஒரு தைரியம்,  அவற்றை பொறுத்துக்கொள்ள முற்பட்டேன். என்ன செய்ய அதையும் தாண்டி அங்கே ஒரு கதை நிகழ்ந்து கொண்டிருப்பதை நான் உள்வாங்கி கொண்டிருந்தேன் என்பதில் திடமாயிருந்தேன். நிச்சயமாய் வேறு யாரேனும் என்னிடத்தில் இருந்திருந்தால், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கியிருக்கக் கூடும் அந்திமல்லியோடு.

காரணம் அந்திமல்லி போன்றவர்கள் ஆபாசங்களை சேர்த்து வைப்பவர்கள் அல்லவே, நாம் தானே ஆபாசங்களை கூடை கூடையாக சேர்த்து மூட்டை கட்டி வைத்திருக்கிறோம் என்றொரு புரிதல் எனக்கு. மேலும், அந்திமல்லி மீது எந்த வெறுப்பும் எனக்கு தோன்றியிருக்கவில்லை.
யோசனையில் இருந்து திரும்பும் போது,

அந்திமல்லி இருமி கொண்டிருந்தாள்....  மாமிக்கள், நடத்துனர், பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் என அனைவரும் கண்களை அந்திமல்லி மீதே அழுந்த பதித்திருந்தார்கள்.

புருவங்களை சுருக்கி தலைவலி அறிகுறியை வெளிப்படுத்திய அந்திமல்லி, மூடிய கண்களை திறந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டதாக ஒரு கையால் தொண்டையை தடவி தடவி பார்த்துக்கொண்டாள். சளி பிடித்திருக்கலாம் என்றும் தோன்றியது.

சொல்வதென்றால் இப்படி ஒரு பயணம் அமையும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்திமல்லி அருகே அமர்ந்து அவளின் கடந்த காலத்தை நான் கேட்பது எதற்கு?

இரவுகளின் வெளிச்சத்தில் நாள்தோறும் அந்திமல்லி வாழ்க்கையில் ஆயிரம் மனிதர்கள் கடந்திருக்கலாம்.... அந்த கதைகள் எனக்கு வந்து சேர வேண்டும் என்பது என் விதியா? ஒரு குழுப்பமான மனநிலையில் இருந்தேன்...

ஒரு விஷயத்தை தெளிவு படுத்துவதென்றால், அங்கு அமர்ந்திருந்தவர்களின் பார்வையில் அந்திமல்லியை விட அதிக ஆபாசமானவனாக நான் தான் தோன்றியிருக்கக் கூடும்.

அந்திமல்லியின் வலது கை என் பாக்கெட்டில் நுழைந்து பணம் இருக்கிறதா என தேடிய போது, கூனி குறுகி அதை அனுமதித்துவிட்டு அமைதியாக இருந்த போது கூட எனக்குள் தோன்றியது ஒன்றுதான். ஏன் இவற்றையெல்லாம் நடக்கும் வரை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது.

எல்லாவற்றையும் நடக்கும் வரை பார்த்துவிடுவது என்றா தீர்மானித்தேன். தெரியவில்லை. நடக்கிறபடி நடக்கட்டும் என எனக்குள்ளாகவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். அப்பொழுதுதான் பேச்சு என்பக்கம் திரும்பியது.

கழுத்தை சுற்றிக்கிடந்த தங்க செயினை லேசாக தளர்த்தி விட்டுக்கொண்டே  மெல்லிய புன்னைகையோடு

ஆமா....எங்கேர்ந்து வர்ற...? என்றாள்.

நான்: இங்கதான் மேடம் கோடம்பாக்கம்....

அந்திமல்லி: வீட்ல எல்லாம் இருக்காங்களா...?

நான்: இல்ல... ரூம்ல இருக்கன்....

அந்திமல்லி: தனியாவா..?

நான்: ஆமா..

அந்திமல்லி: சாப்பாடுலாம்..?

நான்: என்ன சொன்னீங்க...?

அந்திமல்லி: எப்டி சாப்பிட்ற...வீட்ல தான..?
 என்ன முழுங்குற...

நான்: அப்பப்போ வீட்ல, கடைல.. புடிச்ச எடத்துல நீங்க... சென்னைல எங்க இருக்கீங்க..?


இங்கதான் அண்ணா நகர்ல ... சரி  வீட்டுக்கு வர்றீயா.....என்  காதில் வந்து சொன்னது தான் தாமதம் ( கதை கேட்க ஆசைபடடவனின் கதை முடிந்தது என நினைத்தேன் அப்போது )

அந்திமல்லி என்கிற அந்த பெண்மணியின்  பேச்சு, சிரிப்பு, நடத்தை, உடல்மொழி இவற்றையெல்லாம் வைத்து ஒரு அனுமானத்துக்கு நான் வந்திருந்தாலும், மன்னிக்கவும், அங்கிருந்த எல்லோருமே ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும்... அந்த நடுக்கத்திலும் இன்னொரு கேள்வியை கேட்டேன்

நான்: அவரு எங்கருக்காரு?

அந்திமல்லி: யாரு..?

நான்: அதான் உங்க வீட்டுக்காரர்...  பசங்க இல்லையா...? என பழைய கதைகளை நினைவு படுத்தி பேசினாலும்,   கேள்வி என்னிடமே திரும்பியது,

அந்திமல்லி: எப்போ வேலை முடியும்,...?

நான்: ராத்திரி 9, 10 ஆயிடும் மேடம்..

அந்திமல்லி: பணம் வெச்சிருக்கியா....?

நான்: என்னது ..?

அந்திமல்லி: பணம் வெச்சிருக்கியா...
எவ்ளோ இருக்கு...?

( கிட்டதட்ட வியர்த்துவிடும் நிலைமைதான்  )

அய்யோ பணம் எடுத்திட்டு வரலையே.... ) இன்னைக்குதான் சம்பளம் கெடைக்கும்...என்றேன் (அன்று மாத கடைசி,)

அந்திமல்லி:  அய்ய, ஒரு 200 ரூவா இருக்குமா...?

நான்: அய்யோ இல்லையே...

அந்திமல்லி: நுறுவா...?

என்னிடம் 20 ரூபாயை தவிர வேறெதுவும் இல்லையென்று சொல்வதற்கு,
வெக்கமாய் இருந்தது. இல்லை என்பதை வெளிப்படுத்த முடியாமல்... ஏதோ மறந்து வீட்ல வச்சிட்டு வந்த மாதிரி.. முகபாவனையை காட்டிட முயற்சித்தேன். முடியல

அந்திமல்லி: அவளுக்கு பொறுக்கவில்லை போலும்.., சரி எவ்ளோதான் இருக்கு..? என்று பட்டென்று என் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு இருந்த 20 ரூபாயை வெளியே எடுத்தவள் அதை மேலும் கீழும் பார்த்துவிட்டு...

சரி பரவால்ல... தண்ணி பாட்டில் வாங்கணும் என்றபடியே அந்த வாய் சிரித்து தொலைத்தது.

அந்த சிரிப்பின் பின்னிருக்கும் வலியை உணர்ந்தாலும், ஏன் அந்திமல்லி போன்றவர்கள்  அதிலிருந்து மீள முயற்சிப்பதேயில்லை என்று எனக்கு நானே கேட்டு பார்த்துக்கொள்ள முடிகிறதே ஒழிய எதுவும் செய்வதற்கில்லை.

அந்திமல்லி: ஆமா ஒன் பெரு என்ன சொன்ன...?

நான்: குமாரு

அந்திமல்லி: குமாரு இந்தா இந்த நம்பரை வச்சிக்க.. சனி கிழமை வா. வரும் போது, போன் பண்ண மறக்காத.  அப்போதே மனதுக்குள் எழுதிக்கொண்டேன் இந்த கதையை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்