அந்திமல்லி.1


வடபழனியில் இருந்து வள்ளுவர் கோட்டம் வருவதற்கே பெரும்பாடு என்பது போல....நீண்ட நேரமாய் நிற்க முடியாமல் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டேன் நான். அந்த இருக்கை அந்திமல்லியின் இருக்கைக்கு அடுத்த இருக்கை என்பதுதான் கதையின் கதை. அந்த இருக்கையும் பேருந்தின் கடைசி இருக்கை என்பது மையக்கரு....

அந்திமல்லி யார் என்கிறீர்களா...?


ஒரு மாலை வேலையில், வியர்த்து ஒழுகும் பயணத்திற்கிடையே எனக்கு அறிமுகமான உடல் விற்கும் தொழிலாளி. 


நிமிடத்துக்கு நிமிடம் மனதை விற்றுக்கொண்டிருக்கும் நமக்கு உடல் விற்பது கேவலமானதாகத்தான் தோன்றுகிறது...

இங்குதான் எனக்குள் கதை ஆரம்பமானது. 


நான் அந்திமல்லியை அப்பொழுதுதான் உற்று கவனித்தேன். பழுப்பு நிறத்தில் ஒரு பட்டுப்புடவை அவ்வபோது காற்றில் அலைந்து கொண்டிருந்தது. காலையில் இருக்கி கட்டிய தலைமயிர் கட்டு தளர்ந்து காற்றில் அவள் கண்களையும் கன்னத்தையும் மறைத்தபடி இருந்தது. இடது கையால் தலைமயிரை ஒதுக்கியபடி யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்துவிட்டு என் பக்கம் திரும்பி நிதானமாக புன்னகைத்தாள்.  கூடவே என்கையை பிடித்து ஏதோ ஒரு அழுத்தத்தை எனக்குள் திணித்தாள். அவள் கண்கள் என்னை உற்று நோக்கிய வன்னம் இருந்தது.

பேருந்தில் இருந்தவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். இந்த முறை அந்திமல்லியிடம் நான் சிக்கிவிட்டேன் என்று. எல்லோரும் ஒரு மாதிரி நெளிந்தார்கள்... குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள், இவையனைத்தும் பேருந்தில் நடந்தது. இதையும் கவனித்தபடிதான் பயணித்தேன் அன்று. ஏனென்றால் எனக்கு கதை தேவையாயிருந்தது. ஆம், அந்திமல்லியின் கதை.


நானும் புன்னகைத்தேன். அவள் அடுத்து என்ன பேசப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம்... அப்படித்தான் நடந்தது. நிதானமாக  என்ன பன்ற....? என்றாள்.


அவசரத்தில் பொய் சொல்ல தெரியாமல் டிவில வேலை பார்க்கிறேன் என்றேன்.


விஜய் டிவியா...? என உதட்டு சாயத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டே வாய் பிளந்தாள்


இல்ல இல்ல... 


அப்ப..  ஆல் இண்டியோ ரேடியோவா.... ம்ம்ம் என்பதாய் தலையாட்டினேன்.... 


அப்ப நெறைய அலைய வேண்டியிருக்கும் இல்லவென்று என்னை ஒரு சிறுவனைப்போல பாவமாய் பார்த்தாள்...

அவளுக்கு 38 வயது ஆகிறதாம். ஏன் சொல்கிறாள் என்று நான் யோசிக்கவேயில்லை. யோசிப்பதை விட அவள் சொல்வதை கேட்ப்பது எனக்கு பிடித்திருந்தது. அதனால் கேட்டபடியிருந்தேன்..


அவள் பெங்களூருவில் வசித்தாளாம். கணவன் வேறொரு பெண்ணுடன் சென்று விட்டப்பிறகு கிட்டதட்ட 5 ஆண்டுகளாய் இந்த தொழிலில் இருப்பதாக சொன்னாள். அதற்கு இன்னொரு காரணமும் சொன்னாள். அது அந்திமல்லியின் தீரா மோகம்.


நான் கதையை தேடிக்கொண்டிருப்பவன், புதிய கதைகளை கேட்பதில் அதிகம் விருப்பம் கொண்டிருப்பவன். சில கதைகளை மற்றவர்கள் சொல்லி கேட்கும் சுவையை அறிந்துகொள்ள  ஆவலோடு காத்திருப்பவன். அதனால், அந்திமல்லியின் கதையை தெரிந்துகொள்ள மேலும் பேசவேண்டியதாயிருந்தது அவளிடம்.

தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்