பாரிஸின் மாசிலான்சாவடி!

    

                             
கட்டுரை :ஆம்ஸ்ட்ராங் (குறும்பட இயக்குனர் ) 
 
வளர்ப்பு பிராணிகளின் அணிவகுப்பு....  விலங்குகளின் விற்பனை தளம்... பாசப் பறவைகளின் வியாபார திருவிழா   என ஒவ்வொரு ஞாயிறு அன்றும் குதூகலமாகிறது பாரிஸின் மாசிலான்சாவடி.                              
       
சென்னையில் பல்லாவரத்தை  போல மிகப்பெரிய  வளர்ப்பு பிராணிகளின் சந்தையாக உருவெடுத்து வருகிறது  பாரிஸின் மாசிலான்சாவடி  சந்தை.  வீட்டில் செல்லமாக வளர்க்க விரும்பும் பிராணிகளான கோழி வகைகள், புறா, முயல், நாய், வாத்து, வெள்ளை  எலி, பேன்சி பறவைகள் மற்றும் வண்ண வண்ண மீன் போன்றவைகள் அணிவகுத்து நிற்கும் தோரணை  நம்மை வியங்க செய்கிறது. 
 
விரும்பும்  பிராணிகளை விற்பனை செய்பவரிடம் பேரம் பேசி விற்பனையாளர் மடிந்தால் வீட்டிற்கு வாங்கி வந்து விடலாம்... வாரத்தில் ஞாயிறு அன்று உருவாகும் இந்த  இந்த சந்தை விடிகாலை 5.30 மணிக்கே கலை கட்டிவிடுகிறது.  தெருவின் இருபுறமும் வரிசை கட்டி  நின்று தங்களுக்கான விற்பனை  இடங்களை பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
 
 
பந்தைய புறாக்கள், சண்டை கோழிகள், உயர்ரக நாய்கள் இவற்றின் விற்பனை ஒரே நாளில் பல லட்ச ரூபாய் வரை சென்றாலும், இதில் ஏமாற்றுவேலைகளும், தில்லு  முல்லுகளும் நடக்க தான் செய்கிறது. படு சூடாக நடக்கும் வியாபாரத்தில் நம் தலையை நுழைத்துவிட்டால்  போதும் நமது தலையில் எப்படியும் நல்ல லாபத்தில் ஒரு உருப்படியை கட்டி  விடுவார்கள்.

உள்ளே நுழையும் போதே கூட்டத்தினை கண்டதும் இனம்புரியாத  சந்தோஷம் ஏற்ப் படுவதை நம்மால் உணரவும் முடிகிறது.  பறவைகள் சரணாலயத்தில் மட்டுமே பார்க்க கொடுத்து  வைத்த இந்த கூண்டு பறவைகளை நம் கைகளில் ஏந்தி அதனுடன் சில நிமிடம் பேசி கொஞ்சிவிட்டு பிடித்ததை வாங்கி கொள்ளலாம். இதை மட்டுமே தொழிலாக  நடத்துகிற பெரும் வியாபாரிகள் தங்கள் ஆட்களை தனி தனி இடங்களில் பிரித்து  வியாபாரத்தினை நடத்துகின்றனர். 
 
தனி ஒரு பறவையையோ, விலங்கையோ கொண்டு சென்று விற்பனை செய்வோரை, பெரு வியாபாரிகள் மடக்கி போட்டு தங்களின் உருப்படிகளுடன் சேர்த்து  விடுகின்றனர். தொழில் விருத்திக்காகவும், போட்டியாளரை வளர்க்கவிரும்பாத  வியாபார நுணுக்கத்துடன்  செயல்படுவதில் முதலாளிகள் கருத்தாய் இருக்கின்றனர்.

 பறவைகள், நாய்கள் உட்பட பிராணிகள் வளர்ப்பதற்காக  வாங்க பட்டாலும் கூட, முயல், நாட்டு கோழிகள், வாத்து, காடை போன்ற கறிக்கு பயன்படுபவையை வாங்கவே அதிக அளவில்  மக்கள் கூட்டம் கூடுகிறது. 
 
 ஆசையாய் பல வருடமாய் வளர்த்திட்ட செல்ல நாய்களை பண தேவை காரணமாய் விற்று விடும்  சமயத்தில் அதை வளர்த்தவர்கள் கடைசியாய் ஒருமுறை தடவி கொடுத்து கொஞ்சும்போது ஏனோ அவர்களை கலங்க செய்துவிடுகிறது அந்த சூழல்.  இதயத்தினை கொய்திடும் உணர்வுகளின் வெளிப்பாடு இச்சந்தையில்  நிறையவே சாத்தியமாகிறது. 

காலையிலேயே பிரியாணியை விற்று கொண்டிருக்கும் தள்ளு வண்டிகள், பறவை தீவனங்களுக்காக ஒதுக்க பட்டிருக்கும் கூரைவேய்ந்த முட்டு கடைகள், கிராமத்தில் இருந்து கொண்டுவந்ததாக கூறி எடை என்றி பேரம் பேசி விற்கப்படும் நாட்டு கோழிகள், குருவி அடிக்க கவட்டைகள், சண்டைக்கு விடும் பந்தைய கோழிகள், 10,000 க்கும் அதிகமாக விற்கப்படும்  ராணி புறாக்கள், பேன்சி குருவிகள், வேடந்தாங்களிலும் பார்க்க முடியாத அழகிய அமெரிக்கா பறவை இனங்கள், புது புது ரகங்களில் கூண்டுகள் என விரியும் இந்த சந்தை மனிதர்கள் அதிகமாய் புழங்கும் தெருவினை ஆக்கிரமித்து கொண்டுவிட்டது.

இப்படியாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் சந்தை முடிந்ததும் அங்கே விட்டு செல்ல படும் கழிவுகளால் அருகே வசிக்கும் மக்களுக்கு சிரமமாகி போய்விடுகிறது.  இதனால்,  இந்த பகுதி மக்களிடையே இச்சந்தைக்கு எதிர்ப்பு கூடி கொண்டே போகிறது. 
 
போலிஸ் பாதுகாப்புடன் தற்போது நடத்த படும் இந்த சந்தையை முற்றிலும் தடை செய்து விடுவது நல்லது அல்ல எனபது மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது. மேலும் இப்படி மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இந்த சந்தையை நடத்துவதற்கு வேறொரு இடத்தை அரசு தேர்வு செய்து கொடுத்தால் அது எல்லோருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை.
 
 
வேகசுகுமரன்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்