வாடகைப் புத்தக நிலையம்




கட்டுரை சந்திரபால் - ஆம்ஸ்ட்ராங் 

வாடகைப் புத்தக நிலையம். வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக்கொண்டு இயங்கும் புத்தக வாசிப்பின் புகலிடம் ஆகும். தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கவும் படித்த பின்பு திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு எளிய வர்த்தக முறையை வாடகைப் புத்தக நிலையங்கள் செய்து வருகின்றன.

என்னதான் வாசகரின் விருப்பபடி புத்தக நிலையங்கள் மூலம் புத்தகங்களை எளிதாக தேடி படிக்கும் வாயப்புகள் அமைந்திருந்தாலும், தேடிக் கிடைக்காத புத்தகங்களும், அதிக விலையுள்ள புத்தகங்களும்,  வாசகர்களிடம் எளிதாக சென்றடைய ஆரம்பிக்கப் பட்ட வாடகைப் புத்தக நிலையங்களைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது புத்தக வாசிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஊடகங்களின் ஆதிக்கம், நடைமுறையில் புத்தக வாசிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது. இணையங்கள் போன்றவற்றின் மூலம் இன்றைய வாசிப்பின் தளம் மாறியிருப்பதால், புத்தகம் வாசிக்கும் தன்மை மக்களிடையே வேறுபட்டிருப்பதை நம்மால் உணரவும் முடிகிறது.

Blog என்றழைக்கப்படும் வலைச்சரத்தில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள், தாங்கள் எழுதிய படைப்புகளின் ஈரம் காய்வதற்குள் வாககர்களிடம் வரவேற்பைப் பெற்றுவிடுகிறார்கள். என்னதான் இணையத்தின் மூலமாக படிக்கும் பழக்கம் நமக்கு இருந்தாலும், ஒரு புத்தகத்தின் பக்கத்தை புரட்டி வாசிப்பதற்கு இணையாக வேறெந்த வாசிப்பும் இருக்க முடியாதென்பதே உண்மை. 

அதே வேளையில் இணையத் தளத்தில் அதிக நேரம் படிக்க முடியாத சூழ்நிலையும், அதனால் ஏற்படும் கண் எரிச்சலும் உண்மையில் புத்தக வாசிப்பின் அருமையை நமக்கு இப்போது உணர செய்கிறது எனலாம். வாடகைப் புத்தக நிலையத்தை ஒரு சேவையாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பத்துக்காகவோ நடத்த முடிகிறதே ஒழிய, ஒரு சமூக வர்த்தகமாக நடத்த முடிவதில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாகவும் இருக்கிறது..
                  
 வாழ்க்கையின் பெரும் பரப்பில் காட்சி ஊடகங்கள் நிறைந்து விடுவதால், இன்றைய சூழலில் வளரும் தலைமுறைகளிடம் வாசிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய இளைய தலைமுறைகளிடம் வாசிப்பிற்கான தனிப்பட்ட முறையில் பயிற்சி ஏதும் இருப்பதும் இல்லை.
                    
பள்ளி கல்லூரிகளை கடந்து வந்த பிறகுதான் பெரும்பாலும் நாம் புத்தக வாசிப்பையே தொடங்குவது வருத்தமிக்க ஒரு செய்தியாகும். அதே வேளையில், தங்களுடைய பாடத்திட்டங்களை மட்டுமே போதிக்க கவனம் செலுத்தும் பள்ளி கல்லூரிகளில் பாடபுத்தகங்களை கடந்து வாசிப்பின் தன்மையை அதிகபடுத்தினால்,அது மாணவர்களிடம் புத்தக வாசிப்பை அதிகபடுத்தவும் ஒரு வழியாய் இருக்கும்.
                 
 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில், ஒரு படைப்பாளன் தன் படைப்பை 1000 பிரதிகள் கூட அச்சிட முடியாத பரிதாபம் நிலவி வருகிறது. அதிலும், ஒரு படைப்பாளனின் முதல் பிரதியின் வெளியீடும், விற்பனையும், வாசகர்களிடம் சென்றடைவது என்பது, அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதும் இல்லை. ஆனால்,
                   
கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், நாவல்களையும், படைக்க மட்டுமே முழுக்க முழுக்க படைப்பாளர்கள் ஆழ்ந்திருக்கும் போது, புத்தகங்களை வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் பதிப்பகங்களும், அரசும் பெரும் நடவடிக்கை எடுத்தால் நல்ல புத்தகங்கள் வெளிவருவதற்கு உறுதுணையாய் இருக்கும்.

தமிழ் நாட்டில் மொத்தம் 5000 க்கும் மேலான நூலகங்கள் இருந்தும் புத்தக வாசிப்பிற்கான வரவேற்பு கிடைக்காமல் போனதை ஆராய வேண்டியிருக்கிறது. புத்தகங்களை அதிகமான எண்ணிக்கையில் பதிப்பிப்பதாலும், ஊர் ஊருக்கு நூலகங்கள் அமைப்பதாலும் மட்டும் புத்தக வாசிப்பு என்பது ஆதிகரித்து விடுவதில்லை.

எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமும், எழுதிய படைப்புகளின் கதை - மையம் - பின்புலம் குறித்தான அனைத்து தகவல்களையும் ஊடகங்கள் வெளியிட்டால் அது வாசிப்பின் தன்மையை அதிகபடுத்தும் என நம்பலாம். விளையாட்டிலோ அல்லது பிற துறைகளிலோ வெற்றி பெரும் சாதனையாளர்களுக்கு, கோடிக் கணக்கில் கொட்டி கொடுத்து கௌரவிக்கும் அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ அந்த அளவுக்கு ஒரு எழுத்தாளனை அங்கீகரிப்பது இல்லை.
                
ஏதேதோ வரவுகளுக்காக விளம்பரங்களை அள்ளி எறியும் தொலைக்காட்சிகள், ஒரு புத்தகத்தின் அருமையை மக்களிடம் எடுத்துச் சொல்ல யோசிக்கிறது. வெகு விரைவாக எடுத்துச் செல்லும் இன்றைய காட்சி ஊடகங்கள் இதை முழுமையாகச் செய்தால் மட்டுமே எழுத்தாளர்களின் பிழைப்புக்கும் தொடர்ந்து எழுதுவதற்கும் வழி பிறக்கும்.
                
புத்தக வாசிப்பில் கிடைக்கும் தனக்கான சொந்தக் கற்பனையை, இன்றைய ஊடகங்களின் காட்சிப் பிம்பங்கள் பெரிய அளவிற்கு ஏற்படுத்தி விட முடியாது. சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும் என்கிற வசனத்தை உண்மையாக்கும் இன்றைய சமூகப் போக்கை நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
  
பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மாபெரும் படைப்பாளர்களுக்கு, நம் தமிழ் சமூகம் அளித்த மரியாதையில் பட்டினிச் சாவும் அடங்கும். சீத்தலைச் சாத்தனார் எனும் தமிழ்சங்கப் புலவன்கூட, தானிய வணிகம் செய்து கொண்டு தான் தமிழ் வளர்த்திருக்கிறான். பெருந்தலைச் சாத்தான் என்கிற புலவன், குமணன் காலடியில் பசியால் அழுது புலம்பிய காட்சியைப் சங்க இலக்கியங்களில் இன்றும் பார்க்க முடிகிறது.

புலவர்களைப் பாதுகாப்பதற்காகவே புலவராற்றுப்படை என்ற தேற்றுதல் முறை நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிருக்கிறது. இதனால் தான் எழுத்தைப் புத்தக வடிவில் கொடுத்துப் பிழைக்க முடியாதென்பதை உணர்ந்த எழுத்தாளர்கள், குறும்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

எழுத்துலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்று சாகித்ய அகாதமி விருது. இப்படி உயர்ந்த விருதாக கருதப்படும் சாகித்ய அகாதமி விருது எந்தளவிற்கு அந்த எழுத்தாளனின் வாழ்க்கையை முன்னேற்ற உதவுகிறது? ஆனால், ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதன் மூலம் ஓரளவிற்கு பொருளாதார ரீதியில் திருப்தியடைகிறார்கள் இன்றைய ஊடக மொழி எழுத்தாளர்கள்.
                 
பொழுது போக்கிற்காகவும், தூக்கம் வராத நேரத்திலும், பயணங்களிலும் மட்டும் புத்தகம் வாசிக்கப் பழகியவர்கள், சினிமாக்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் மூழ்கி விடுவதால், படிக்க நேரம் இல்லை என்கிறார்கள். வாழ்வின் அர்த்தத்தையும், அதன் புரிதலையும் ஒரு புத்தகத்தின் வழி தெரிந்து கொளள முடியும்.
  
உறவுகளின் நேயமும் கற்பனை வளர்ச்சியும் வற்றிப் போனதற்கு காரணம் புத்தக வாசிப்பு குறைந்து போனது தான் எனலாம். இதனால் - மனஅழுத்தமும், விரக்தியும், குற்ற உணர்ச்சியுமே மனிதர்களிடம் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு கொலையோ, பெரும் விபத்துக்களோ நமக்கு பக்கத்திலே எளிதில் நடந்து விடுகின்றது. புத்தக வாசிப்பின் மகத்துவம்தான் மனதைத் தூய்மை ஆக்கும். உறவுகளையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிய வைக்கும்.
               
வெளிநாடுகளில் இரண்டு மூன்று படைப்புகளை உருவாக்கியவர்கள் கூட உலக அளவில் பாராட்டப்பட்டு விடுகிறார்கள். தனி அங்கிகாரத்துடன் உலக நாடுகளில் வலம் வருகிறார்கள். அதே போல், கேரளாவில் ஆண்டுக்கொரு முறை எழுத்தாளர் தினவிழ கொண்டாடுகிறார்கள்.
               
 சென்ற ஆண்டு கேரளாவில் வீதியில் இறந்து கிடந்த ஒருவன், எழுத்தாளன் என்று தெரிந்தவுடன் அவன் அரசாங்க மரியாதையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனால், தமிழகத்தில் அந்த நிலையில்லை. தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் காக்கப் படவேண்டும். வாசிப்பிற்கான புரிதலை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.
                
 வெறும் பாடத்திட்டங்களை மட்டும் வாசித்து சலிப்பு தட்டும் சூழலில், தத்ததுவம் - கலை - அறிவியல் - இலக்கியம் - பொது அறிவு என, புத்தகங்களை நூலகங்களுக்கு அளிக்கும் 45% சதவீத கழிவு விலையில் மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வாசிப்பு பழகத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.
                  
வேளை நேரம் முடிந்ததும் பிற வேளைகளில் ஈடுபடும்  பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு வாசிப்பிற்கான தகுந்த பயிற்சி முறைகளைக் கொண்டு வர வேண்டும்.
                
அரசின் தலையீடு இல்லாமல் தனியார் நடத்தி வரும் புத்தகத் திருவிழாக்களைப் பாராட்டும்  இந்நிலையில், சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் வாசிப்பின் விழிப்புணர்வு கூட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட வேண்டும். அதோடு, எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் பாலமாக விளங்கும் புத்தக நிலையங்களில் முதன்மையானதாக நூலகங்கள் இருந்தாலும்,பழைய புத்தகக் கடையும், வாடகை புத்தக நிலையங்களும் சமூதாயத்துக்காக முக்கியமான தேவையாக இருக்கின்றன.
               
தொழில் நுட்பத்தின் நெருக்கடியில், வாசிப்பு என்பது வாழ்க்கையின் அவசியம் என்பதை உணர்ந்து வாடகைப் புத்தக நிலையங்கள் காக்கப்பட வேண்டும். இதன் மூலம் வாசிப்பு வாழ்க்கையின் பேரழகை உணர்த்தும் என நம்பலாம்.


வேகசுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்