கிழக்கின் மகள்
காலம் சிலரைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது. காலம் சிலரைத்தான் வரலாற்றில் பதித்துச் செல்கிறது. அந்த வகையில், பயங்கரவாதத்தின் கோர கரங்களால் சிதைக்கப்பட்ட பாகிஸ்தானில், மரணத்தறுவாயிலும் மக்களுக்கு ஜனநாயகத்தை போதித்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பெனாசிர் பூட்டோவை நினைவு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல... அவசியமும் கூட....
பெனாசிர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல... சர்வதேச அளவில் ஒரு இசுலாமிய தேசத்தை ஆட்சி செய்த முதல் பெண் தலைவரும் ஆனவர் .... பழமைவாதம் பேசிய தேசத்தில் ஜனநாயக பாடம் எடுத்தவர்களில் ஒருவர்..... ஜனநாயகத்தை மலரச்செய்யும் முயற்சியில் தன் உயிரை துச்சமென கருதியவர் ... சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ராவல்பிண்டியில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் மனிதத்தை நம்பும் யாராலும் அத்தனை எளிதில் மறக்க கூடியதல்ல... தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் துரோகத்தையும், எதிரிகளையும் பார்த்து பார்த்து... பழுக்க காய்ச்சி வடிக்கப்பட்ட வாளாய் மிளிர்ந்தவர் பெனாசிர். மலாலாவை தெரிந்த அளவு பெனாசிரை நாம் தெரிந்திருக்கவில்லை என்றால் அது காலத்தின் பிழையல்ல.... பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தெரிந்த அளவு, ஜனநாயகத்தையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆகவேதான் பெனாசிரை நினைவுபடுத்துகிறது இந்த தொகுப்பு.
பெனாசிரின் சுய வாழ்க்கை குறித்து பார்ப்பதற்கு முன்பாக பயங்கரவாதத்தின் பின்னணியில் பாகிஸ்தானில் ஏற்பட்டு வரும் இழப்புகளையும் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் குறித்து உலகுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. தினம் தினம் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் அத்தனை நாடுகளுக்கும் பாகிஸ்தானின் கதைகள் அத்துப்படிதான்... ஆனால், அதுகுறித்து கொஞ்சமும் வருத்தப்படாமல் இன்னமும் பக்கத்து நாடுகளில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆறுதல் கூறும் வேலையைத்தான் பாகிஸ்தான் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்துகொண்டே இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ சென்று எளிதில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட முடியும். ஆனால் அதுகுறித்தெல்லாம் கவலைப்படாத பாகிஸ்தான் தலைவர்கள், எங்களுக்கு தெரியாது என்ற ஒற்றை வார்த்தையை கூறுவதோடு அவனைத்தான் நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம் என விளக்கமளிப்பது நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் ரகம். இந்தியாவுக்குள் நுழைந்து நாடாளுமன்றத்தை தாக்கவும், மும்பை ரயில் நிலையங்களையும், நட்சத்திர விடுதிகளையும் கண் முன்னே சிதைக்கும் காரியத்தை செய்யவும் தீவிரவாதத்துக்கு தைரியம் இருக்கிறதென்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் ஓர் அமைதிப்பிரதேசத்தில் ஊடுருவி உயிர்களின் மரண ஓலத்தை கேட்டுவிடும் வல்லமைப்படைத்ததாய் இருக்கிறது தீவிரவாதம்.
பாகிஸ்தானில் இந்தாண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. காரணமேயின்றி நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்தாண்டு மட்டும் 500 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, தங்கள் உடலுறுப்புகள் சிதைந்து, வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் வலியோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். 2003ம் ஆண்டின் கணக்கின்படி 164 என இருந்த தீவிரவாத தாக்குதல் உயிரிழப்பின் எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டில் மூன்றாயிரத்து 318 ஆக அதிகரித்திருந்தது. சராசரியாக ஒரு மாதத்துக்கு 3 பெரிய குண்டுவெடிப்பு சம்பவங்களும், 10க்கும் மேற்பட்ட சிறிய தாக்குதல்களும் நடந்த வன்னம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதையே கொஞ்சம் விசாலமாக்கி பார்த்தால்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக், நைஜீரியா, அமெரிக்கா, சோமாலியா, சூடான், லிபியா இப்படி தீவிரவாத தாக்குதலில் சிதைந்த இன்னபிற நாடுகளையும் பார்க்க முடியும். ஆனால் இந்த நாடுகள் மட்டுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதாய் கருதிவிட வேண்டாம்.... எங்கெல்லாம் மனிதாபிமானம் தற்கொலை செய்து கொள்கிறதோ அங்கெல்லாம் பயங்கரவாதம் உருவெடுப்பதை காணமுடிகிறது. சர்வதேச அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, போகோ ஹாரம், தாலிபான், லஷ்கர் இ தொய்பா, அல் ஷபாப் என இயங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாத குழுக்களின் பின்னணியில் பல்வேறு நாடுகளின் தலையீடுகள் உள்ளதும் காலத்தால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதற்கும், ஆயுதங்கள் இறக்குமதி செய்து தருவதற்கும், உலகெங்கும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆகவே பயங்கரவாதம் குறித்த நாடுகளின் நடவடிக்கை என்பது பெரும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை தூக்கி பிடித்துக்கொண்டு இயங்கும் பயங்கரவாத குழுக்களாகவோ, அல்லது பழிவாங்கும் நடவடிக்கை கொண்டவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் பின்னணியில் இருப்பதும், காய்களை நகர்த்துவதும் சாதுர்யமானது.
பெனாசிருக்கு வருவோம்.....1947க்கு பிறகான இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் முளைத்திருந்தது மதத்தின் அடிப்படையில் என்றால்... மனிதத்தின் அடிப்படையில் வாழ்ந்ததாக சாட்சி சொல்ல எவருமில்லாமல் போனதுதான் ஆச்சரியம். சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெனாசிரின் தந்தை வழி தாத்தாவான ஷாநவாஸின் குடும்பத்தினர். மும்பை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சிந்து பகுதி தனி மாகாணமாக உதயமான போது அதற்காக பரிந்து பேசி அந்த கோரிக்கையை நிறைவேற்ற செய்ததோடு 1936ம் ஆண்டு சிந்துவின் முதல் ஆளுநராகவும் பதவியேற்றார் ஷா நவாஸ்... அதனைத் தொடர்ந்து அரசியலில் தீவிர ஈடுபாட்டால், 1937ம் ஆண்டு ஹாஜி அப்துல்லா ஹரூனால் உருவாக்கப்பட்ட சிந்து ஐக்கிய கட்சியின் துணை தலைவராக உருவெடுத்தார் ஷாநவாஸ்... அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் செல்வாக்கு பெற்ற தொழிலதிபராக விளங்கிய ஷாநவாஸ் பூட்டோ, தனது மகன் ஜுல்பிகர் அலி பூட்டோவின் காதலை ஏற்று ஈரானிய குர்திஷ் இனப்பெண்ணான பேகம் நஸ்ரத் இஷாஹனியை திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியரின் முதல் மகளாய் 1953ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி பிறந்தவர்தான் பெனாசிர் பூட்டோ....
பெனாசிர் என்றால் ஈடு இணையற்றவர் என்று பொருள். இளம் வயதில் அழகு பதுமையாய் திகழ்ந்த பெனாசிர் உள்ளூரில் பள்ளி கல்வியை முடித்து மேல் படிப்புக்காக அமெரிக்க பறந்தார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெனாசிர் கல்வி பயின்று கொண்டிருந்த சமயத்தில் பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுவது ஏதோ தீபாவளி சமாச்சாரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி பெனாசிரின் தந்தை அப்போது பாகிஸ்தானின் அதிக அதிகாரம் படைத்த குடியரசு தலைவர் பதவியில் இருந்தார். சீனாவுக்கு ஆதரவான செயல்களை செய்தபடியே இந்தியாவுக்கும் நட்புக்கரம் நீட்டியபடி இருந்தார் ஜூல்பிகர் அலி பூட்டோ.
அரசியல்,பொருளாதாரம், சட்டம் , தத்துவம் என மென்மேலும் தனது பட்டறிவை விசாலமாக்கி கொண்ட பெனாசிரின் திறமைக்கு மகுடமாய் ஆக்ஸ்போர்ட் சங்க தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டது அன்றைய காலத்தில் கிழக்காசிய அளவில் பெருமை மிக்க ஒன்றாக பார்க்கப்பட்டது. அதற்குள்ளாக 1973ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இருந்த பதவியேற்றார் ஜூல் பிகர் அலி பூட்டோ . ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் சிறிது காலம்தான் நீடித்தது. கல்வி முடித்து பாகிஸ்தான் திரும்பியிருந்த கொஞ்ச நாட்களிலேயே 1977ம் ஆண்டின் ஒரு மாதத்தில் அதிகாலை வேளையில் பாகிஸ்தான் ராணுவம் பெனாசிரின் வீட்டை முற்றுகையிட்டது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புள்ளதாக அறிவித்து அப்போதைய பாகிஸ்தான் முப்படை தளபதி ஜியா உல் ஹக்கின் சர்வாதிகாரத்தால் 1979ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் ஜூல் பிகர் அலி பூட்டோ. இந்த சம்பவம் தான் பெனாசிரை கடுமையாக தாக்கியது. பெனாசிரின் குடும்பத்தில் இயற்கை மரணம் நிகழாதென்பது போன்று அடுத்தடுத்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணம் இருந்தன உலகத்தின் பார்வையில்..
ஜூல் பிகர் அலியை தூக்கிலிட்டதோடு நிறுத்திவிடாமல் பெனாசிரின் குடும்பத்தினரை வீட்டுச்சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது சர்வாதிகார அரசு. அதுமட்டுமல்லாமல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் பெனாசிர். பல்வேறு நாடுகளின் வற்புறுத்தலுக்கு பிறகே 1984ம் ஆண்டு வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் பெனாசிர். இங்கிலாந்து சென்ற சில தினங்களில் பெனாசிரின் சகோதரர் ஷாநவாஸ் படுகொலை செய்யப்பட்டார். இதேபோன்று மற்றொரு சகோதரர் மிர் முதர்ஸாவும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தாம் நிற்கதியாக நிற்பதாக நினைக்க வைத்தது பெனாசிரை சர்வாதிகாரத்தின் இரும்பு கரம். இதனைத் தொடர்ந்தே பாகிஸ்தான் அரசியலில் களமிறக்கப்பட்டார் பெனாசிர். அரசியலுக்கு வரவேண்டும் என்று பெனாசிர் ஒருபோதும் விரும்பியவரல்ல. ஆனால் காலம் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் எனும் பெரும் பொறுப்பை அவர் கைகளில் ஒப்படைத்திருந்தது. இதுகுறித்து தனது கிழக்கின் மகள் புத்தகத்தில் எழுதியுள்ள பெனாசிர், அரசியலை தாம் தேர்வு செய்யவில்லை என்றும் காலம்தான் தம்மை தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவரால் முழுமையாக ஆட்சி செய்யக்கூட முடியவில்லை... இரண்டு முறையும் அவருடைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு....அதிகார பலம் பொருந்திய குடியரசு தலைவர்கள் இரண்டு முறையும் நினைத்த நேரத்தில் ஆட்சியை கலைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள் பெனாசிரை.. பாகிஸ்தானை பொருத்தவரையில் ஜனநாயக முறையில் மக்கள் ஓர் அரசை கொண்டு வந்தால் அதனை சர்வாதிகாரம் கவ்வி பிடிப்பதை தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. ஆகவேதான் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதற்கான நோக்கம் நிறைவேறவில்லை என்று அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பெனாசிர் முதல் முதலாக பதவியேற்ற போது அவருக்கு வயது 35. இளம் வயதியிலேயே பிரதமர் பதவியை அலங்கரித்தவர் என உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்... தன் பிரசாரக் கூட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்னைகள், பெண்கள் சமூக, சுகாதார பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவது தொடர்பான பிரச்னைகளைப் பற்றி அதிக அளவில் குரல்கொடுத்தார். தான் பிரதமர் ஆனதும், மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அபிவிருத்தி வங்கிகளை அதிக அளவில் நிறுவினார். கருக்கலைப்பு எதிராக குரல்கொடுத்து வந்ததுடன், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் முரண்பாடான பல சட்டங்களை நீக்கினார். 'உலக பெண் தலைவர்களின் கழகம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் உறுப்பினராகவும் இருந்தார்.
ஆனால், எல்லா நாடுகளையும் போல அங்கும் ஊழல், எல்லா அரசுகளையும் போல அங்கும் குற்றச்சாட்டுகள் ... எல்லா படத்திலும் வரும் வில்லன்கள் போல அங்கும் வில்லன்கள் இருந்தார்கள்.... அவர்கள் பழமைவாதத்துக்கும் மதவாதத்துக்குமான சறுக்கத்தில் பதுங்கியிருந்தார்கள். அடுத்த 2 ஆண்டுகளில் அவருடைய ஆட்சியை கலைத்தார் குடியரசு தலைவர். அந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 1993ல் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் பெனாசிர். இந்த முறையும் 1996ல் பெனாசிரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆகவே பெனாசிருக்கான அரசியல் பாதையில் ஜனநாயகம் நொண்டிக்குதிரையாய் பயணித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் பெண் முன்னேற்றம் தொடர்பான கொள்கைகளும் கோட்பாடுகளும் பாகிஸ்தானில் மற்ற தலைவர்களை ஒப்பிடுகையில், பெனாசிரை ஓஹோ போட வைக்கும் ரகம் என்றே அறிமுகப்படுத்தியது. பெனாசிருக்கு கிடைத்த கல்வியும், அதிகாரமும் அத்தனை பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றே மனித உரிமை ஆர்வலர்களும் கருதினார்கள்..
உலக நாடுகள் தங்கள் நாட்டின் அதிகார மையங்களாக தலைநகரைத்தான் அறிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானுக்கு இரண்டு தலைநகரங்கள்... அரசுக்கு இஸ்லாமாபாத் என்றால் ராணுவத்துக்கு பெஷாவர். அரசின் அதிகாரம் வரம்பு மீறினால் பெஷாவர் துடிதுடித்துப் போகும் காரியத்தை எளிதாக செய்துவிடும். இதை பாகிஸ்தானை தவிர வேறு எங்கும் பார்க்கவும் முடியாது. அரசின் நடவடிக்கை சரியில்லை என்றால் அடுத்த நொடியே அரசை காலி செய்து விடும் சர்வாதிகாரம். பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவம் .... அதற்கு பின்னரே பிரதமர். அத்தனை சக்தி வாய்ந்ததாய் இருந்தது சர்வாதிகாரம்.... ஆகவே தான், 1999-ல் கார்கில் தோல்வியைத் தொடர்ந்து, நவாஸ் ஷெரிப்பை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தது முஷாரப்பின் சர்வாதிகாரம் படைத்த ராணுவம்....
ஜனநாயகம் குறித்து கேட்டால்,கிலோ எத்தனை ரூபாய் என கேள்வி கேட்கும் மக்கள் நிரம்பிய தேசமாகத்தான் பாகிஸ்தானை பலருக்கும் தெரியும்... ஆனால், பழமை வாதத்துக்கும், ஆணாதிக்கத்திற்கும், எதிராக, பெனாசிர் புறப்பட்ட போது அவருக்கு ஆதரவாக அந்த தேசமே திரண்டது. மக்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள். பெனாசிரின் வருகையை ஒருபோதும் பழமைவாதமும் சர்வாதிகாரமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் தான் தன்னுடைய 3 குழந்தைகளோடு துபாயிலும் லண்டனிலுமாக வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருந்தது பெனாசிருக்கு. 8 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெனாசிரின் கணவர் ஆஸிப் அலி சர்தாரி. அப்போதுதான் கணவர், குழந்தைகளுடன் வாழ ஆரம்பித்திருந்தார் பெனாசிர். இந்த நிலையில் தான் 2008 ம் ஆண்டு தேர்தலை சந்திக்க முடிவெடுத்து மீண்டும் ஆயத்தமானார். மக்களின் பேராதரவு இருப்பதால் இந்த முறை வெற்றி நமக்கே என நண்பர்களும் கட்சி தலைமைகளும், கிடைத்த ரகசிய தகவல்களும் நம்பிக்கையை ஊட்டின. ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் பயங்கரவாதத்தின் கண்களுக்கு உறுத்தி கொண்டிருக்கும் தாம் எந்த நேரத்திலும் கொல்லப் படலாம் என்பதை தெளிவாக அறிந்திருந்தார் பெனாசிர். ஆகையால் தான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி ஒரு கை பார்த்துவிடுவது என பாகிஸ்தான் புறப்பட்டார் பெனாசிர்...
2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இதே நாளில் காலன் அருகிலிருப்பது கூட தெரியாமல் ஜனநாயகத்தை முன்னிறுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார் பெனாசிர்... ஆட்சியை கைப்பற்றி விடுவாரோ என்கிற அச்சமோ என்னவோ, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் என்கிற வகையில் கூட பெனாசிருக்கு பாதுகாப்பு தர மறுத்திருந்தது அரசு. அவரை சுற்றி லட்ச கணக்கானவர்கள் உற்சாக கோஷத்தில் திளைத்திருக்க ராவல் பிண்டி நகரமே திக்குமுக்காடி போயிருந்தது. துபாயில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய பெனாசிர் அன்று தான் அத்தனை லட்சம் மக்களை மீண்டும் சந்திக்கிறார். பெனாசிரின் கடும் உழைப்புக்கு பழமைவாதிகள் பரிசளிக்க முடிவு செய்து அவருக்கு மரணத்தை பார்சல் கட்டி அனுப்பினார்கள்.... இதையெல்லாம் கண்டுகொள்ளாத பெனாசிரின் பாதுகாவலர்கள் அவருடைய பேச்சின் தீரத்தில் கரைந்திருந்தார்கள்.... நம்முடைய லட்சியம் தோற்க போவது இல்லை. வன்முறைகளையும் அராஜகத்தையும் நம்புகிறவர்கள் வரலாற்றில் நிலைக்கப்போவதும் இல்லை. இந்த நாட்டுக்காக இனி கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது, என் உயிரைத் தவிர..... அத்தனை பேரையும் கட்டி போட்டிருந்தது பெனாசிரின் சொல் வீச்சு. தம்முடைய பேச்சால் கட்டிப்போடப்பட்டிருந்த மக்களுக்கு கையசைத்து விடை பெற்ற பெனாசிரின் வெகு அருகே சில அடி தூரத்தில் இருந்து அந்த இயந்திர துப்பாக்கி வெடித்தது. அதே நேரத்தில் அவருடைய காருக்கு அருகேயிருந்த மற்றொரு வெடிகுண்டும் வெடித்துச் சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மரண கூடாரமாக மாறியது அப்பகுதி .... ஒரே புகை மண்டலம் .... கூக்குரல்கள்..... அழும் ஓலங்கள்....உடல் பிய்ந்து உயிருக்காக தவிக்கும் தருணத்திலும் பெனாசிரின் பெயரை உச்சரித்தது மக்கள் கூட்டம்... பெனாசிர்... ஐயோ பெனாசிரை பாருங்கள்... ஆனால் பெனாசிர்தான் நினைவில் இல்லை... தலை பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட மரணத்தின் மடியிலிருந்தார் பெனாசிர். பெனாசிரின் மரணச் செய்தி உலக நாடுகளை பரபரப்பாக்கியது.
அத்தனை மக்களுக்கும் ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்த பெனாசிரின் கடைசி நிமிடங்களில் அவருக்கு என்ன கொடுப்பதென்று தெரியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர் மக்கள்... ஒரு வகையில் பெனாசிரின் இழப்பு இந்தியாவுக்குமானது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டிருந்தார் பெனாசிர். பெனாசிரின் தந்தையையும், தாத்தாவையும் போல் அல்லாமல் பெனாசிரின் வெளிப்படையான நடவடிக்கையும், அவர் இளம் வயதிலேயே அனுபவித்த வேதனைகளும் அவரை பக்குவப்படுத்தியிருந்தது. ஆகையால் சர்வதேச சமூகம் அவருடைய பல்வேறு நடவடிக்கைகளை வரவேற்றன. வெடிகுண்டுகள் சிதறும் தேசத்தில் முகல் ரோஜாவின் வருகையால் ஜனநாயகம் தழைப்பதாக உலக நாடுகள் பேசிக்கொண்டன. ஆனால் அது நீடிக்க போவதில்லை என்பதை அப்போது ஒருவரும் அறிந்திருக்கவில்லை. பெனாசிர் படுகொலையை உலக நாடுகள் கடுமையாக கண்டித்தன. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்ததோடு முஷாரப் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தன. ஐ.நா மன்றம் கூடி அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
பெனாசீர் பூட்டோவின் மறைவுக்குப் பிறகு மனித உரிமைகளுக்கான விருது வழங்கி ஐநா மன்றம் கவுரவித்தது . இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெனாசிரின் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே பெனாசிரும் படுகொலை செய்யப்பட்டார். பெனாசிரின் தந்தையும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். பெனாசிர் கொலை வழக்கை விசாரித்த அரசு தர்ப்பு வழக்கறிஞர் சவுத்ரி சுல்பிகர் அலியும் கடந்த 2013 ம் ஆண்டு தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.. சவுத்ரி கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் வழக்கிலும் பாகிஸ்தான் வழக்கறிஞராக இருந்தார்.
உலக நாடுகள் தமக்கு எதிராக திரளுவதை கண்ட பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்.. இந்த படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் பெனாசிர் மரணத்தை தொடர்ந்து அரசு சார்பில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் பெனாசிரின் மரணம் குறித்து அறிவிப்பதில் அரசின் குளறுபடிகளால் முஷாரப் மீதான சந்தேகம் வலுத்ததேயன்றி குறைந்ததாக தெரியவில்லை.... குறிப்பாக ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கய்தா அமைப்பு பெனாசிரை தீர்த்து கட்டியதாக அரசிடம் இருந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், இதனையெல்லாம் மறுத்து பாகிஸ்தான் அரசின் பொய் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக அந்த அமைப்பு ஊடகங்களுக்கு பகிரங்க பேட்டியளிக்க இங்குதான் முஷாரப் அரசு தப்பிக்க முடியாமல் சிக்கி கொண்டது. இந்நிலையில் தான் சரியாக 10 ஆண்டுகளுக்கு பின்னர் பெனாசிர் கொலை குறித்த தீர்ப்பு வெளியானது. 8 நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி ஆஸ்கர் கான் தீர்ப்பு வழங்கினார். அதில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. முன்னாள் டிஐஜி உள்ளிட்ட இரண்டு காவல் அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், தாம், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மிகப்பெரிய ஆதரவாளர் என சில மாதங்களுக்கு முன்பு, பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பர்வேஸ் முஷாரப், மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சையத்தை தமக்கு பிடிக்கும் என்றும் அவரை சந்தித்ததாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலேயே கருத்து தெரிவித்துள்ளார்.
பெனாசிரின் மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், பாகிஸ்தானில் இனி ஜனநாயகம் மலர்வதற்கான வழியை யார் செய்வதுஎன்கிற கேள்வி மக்கள் முன் இருக்கிறது. துப்பாக்கி முனைக்கு பயந்து சர்வாதிகாரத்துக்கு துணை போகும் வரை அமைதி திரும்பாது என்பதை மக்கள் உணர்ந்துதான் ஆகவேண்டும் என்பதை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. பழமைவாத, மதவாத சித்தாந்தங்கள், உயிர்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தானின் ஒவ்வொரு பக்கங்களும் உலகுக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை முடக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களுக்குள்ளாகவே பயங்கரவாதம் குறித்து கணக்கிட்டு கொண்டிருக்கின்றன.
இதோ அடுத்தாண்டு ஜனநாயகத்திற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது காலம். அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் தலைமைகள் காய்களை நகர்த்த தொடங்கி விட்டன. அந்த பந்தயத்தில் இப்போது பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவும் இருக்கிறார். பாகிஸ்தனை பொருத்தவரை பெனாசிர் ஒவ்வொரு பெண்ணுக்குமான எடுத்துக்காட்டாகியிருக்கிறார். தன்னுடைய இறுதி மணித்துளி வரை ஜனநாயகத்தை காப்பது என்பதன் மீது, பெரும் நம்பிக்கை கொண்டு, துப்பாக்கித் தோட்டாக்களுக்கு சவால் விட்ட பெனாசீரின் வாழ்க்கையும், துணிச்சலும் நினைவுக்கு வந்து போகிறது. பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய பெண் அரசியல் ஆளுமையாக இருந்த பெனாசிரின் வெற்றிடத்தை, வேறு எந்த ஒரு பெண்ணாலும் இதுவரை நிரப்ப முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக