கருகும் பிஞ்சுகள்



பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதும், தற்கொலை செய்து கொள்வதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பரவலாக பேசப்படுவதும் வருத்தத்திற்குரியதாகவே உள்ள நிலையில், தற்கொலைக்கு தள்ளப்படும் காரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது.

கோவையில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை. வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை. தஞ்சையில் +2 மாணவர்தூக்கிட்டு தற்கொலை. மதுரையில் தனியார் பள்ளி மேல்தளத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி  என வரிசையாக தற்கொலைகள் நிகழ்வதும் தற்கொலைக்கு முயல்வதும் நடந்து  கொண்டேயிருக்கின்றன.

பிள்ளைகள் நன்கு படித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கு இது போன்ற தற்கொலைகள் பேரிடி அல்லாமல் வேறென்ன?

தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், குறைந்த ஊதியத்தில் அவசர கல்வியை திணிக்கும் ஆசிரியர்களின் படுபாதக செயல்பாடுகள் தான் தற்கொலைகளுக்கு காரணம் என கூறி ஒதுக்கிவிட முடியவில்லை.

அரசு பள்ளிகளிலும் மாணவர்களை மரணம் துரத்துகிறது என்றால் இந்த மரணங்களுக்கு பின்னால் இருக்கும் காரணிகள் எது?

ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையும் வார்த்தை பிரயோகம் என சொல்வதா?

ஆசிரியர்களின் சாதிய வன்மம் மாணவர்கள் மீது கட்டவிழ்க்கப்படுவதாக எடுத்துக்கொள்வதா?

ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பை கூட ஏற்க முடியாத மன நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள் என புரிந்து கொள்வதா?

தோல்வி பயமும், தன்னம்பிக்கை இன்மையும் தற்கொலை முடிவை எட்டுவதாக கூறுவதா?

இணைய உலகம் பிள்ளைகளை தவறாக வழிநடத்துவதாக எடுத்துக்கொள்வதா?

வீட்டுச் சூழ்நிலை தற்கொலைக்கு அடிநாதமாக அமைந்து விடுகிறது என திசை திருப்புவதா?

இப்படி  எண்ணற்ற கேள்விகள் நம் முன்னே விரிந்திருக்கிறது.

புளூவேல் போன்ற விளையாட்டு மரணங்கள் ஒருபுறம் என்றால், லட்சியத்துக்காக போராடி தோல்வி அடையும் மன நிலையில் அரியலூர் மாணவி அனிதா போன்றோரின் மரணமும் ஒரு புறம் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது.

ஆனால், இந்த மரணங்களுக்குள் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களின் தற்கொலைகளை வகைப்படுத்திவிட முடியாது. இது மிகுந்த சிக்கலுக்குபட்டது. உளவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டியது.

மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதகரிப்பதற்கான காரணிகளை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது என்பதால் இதில் அனைவருக்கும் பங்கிருக்கிறது... பொறுப்பிருக்கிறது... நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது.

ஏனென்றால் மாணவர்கள் நம் எதிர்காலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்