ராஜீவ்காந்தியை விட பெரிய மனிதர்
தரங்கம்பாடியில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி சிலையருகே ஒரு மனிதரை சந்தித்தேன். பெரும்பாலும் அங்கேயே தான் இருக்கிறார். மனிதர் சிறிய பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இலேசான வெந்நிற தாடியில் வறுமை மறைக்கும் வயோதிகம்.
பெயர் என்னவென்று தெரியவில்லை என்றாலும், பார்த்த உடனே சிரித்து பேசும் முகம். பற்கள் உள்ளடங்கியிருந்ததால் சிரிக்கும் போது கண்ணத்தில் குழிவிழுந்தது. ரஜினியை நிறைய பிடிக்கும் என்றார். கபாலியை போல் போஸ் போட்டோவுக்கு போஸ் வேறு கொடுத்தார்.
ஒரு 3 ஆயிரம் ரூபாய்க்கு பெட்டிக்கடை வைத்துவிட்டார் போலும். மரசட்டங்களால் தைக்கப்பட்ட அந்த பெட்டிக்கடையில் ஒரு மனிதனுக்கு தேவையான கடைசி வாழ்க்கையை எளிதாக கடந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை தந்தது பார்வைக்கு. வெயிலும், மழையும் எப்போதும் கடையின் உள்ளே வந்து செல்லும் உப்பு காற்றி எளிய வாழ்க்கை. வாழ்ந்துதானே ஆகவேண்டும்.....
இரண்டு மூன்று பிளாஸ்டிக் போத்தல்களில் முறுக்கு, தேன் மிட்டாய், கமருக்கட்டு இன்னபிற தின்பண்டங்கள்...அப்புறம் அவர். பெரும்பாலும் தொங்கிகொண்டிருக்கும் தின்பண்டங்களோடு அவரும் தொங்கியபடியே இருந்திருப்பதாகவே பட்டது அப்போது. ஆம், வயிறொட்டிப்போன அந்த மனிதரின் வறுமை குறித்து யாரும் தெரிந்துகொள்ளாமல் இருக்க வாரி சுருட்டி கட்டியிருந்தார் இடுப்புக்கு மேலே ஒரு லுங்கியை...
ஒரு நாளைக்கு 100 ரூபாய் தேறுவதே கடினம் தான் என்பது நமக்கு தெரிந்துவிடாமலா இருக்கிறது.
சாலைக்கு தெற்கே ராஜீவ்காந்தி சிலையையொட்டி பெரியவரின் பெட்டிகடை என்றால்... சாலைக்கு தெற்கே ஒத்தையடி பாதையை கடந்து 5ம் வகுப்பு வரையுள்ள ஒரு பள்ளி..... எப்போதும் காக்கையின் எச்சத்தோடே காணப்படும் சிலை போல...
இருசக்கர வாகனத்தில் வந்து தெனாவட்டாய் தம் இருக்கா என கேட்டார்கள் இளைஞர்கள்... எங்களிடம் பேசிக்கொண்டிருந்த பெரியவர் அவர்கள் பக்கம் திரும்பி இருக்கு என்றார்... அவர் பெட்டியை எடுத்து நீட்ட அதிலிருந்து ஒரு தங்க வடிகட்டியை உருவியவன் பெரியவரிடம் ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்...
சில்லறையை கண்கள் சுருக்கி எண்ணி பார்த்தவர் அவனிடம் நீட்டினார்... என்ன 9 ரூபாதான் இருக்கு? சிகரெட்டு 11 ரூவாய்யா என்றார் பெரியார்...
அட எல்லா கடைலயும் 10 ரூவா..ஓன் கடைல மட்டும் 11 ரூவாயா....நல்லா ஏமாத்துற....என்றான் டிப்டாப் ஆசாமி
பெரியவர் மரியாதையாக பேசினார்...வேவாத வெய்யல்ல போயி வாங்ட்டு வந்து தரேன்ல்ல...ஏன்பா கேக்க மாட்டீங்க....
பெரியவரே....ஒருவான்றது சாதாரணம்ல...ஒவ்வொண்ணும் ஒழைச்சி சம்பாதிக்கற்றது...ஈசியா எடுத்துக்கலாம்னு பாக்கிற, என்று முடிப்பதற்குள்ளாகவே அவன் முகத்திற்கு நேரா அந்த ஒரு ரூபாயை எடுத்து நீட்டினார் பெரியவர்.
கோபத்தில் கைகள் தடதடத்தது பெரியவருக்கு.
இத்தனை நேரமாய் உழைத்த ஒரு ரூபாய்க்காக கணக்கு பார்த்தவன், பெரியவரிடம் வேண்டா வெறுப்பாக வெச்சுக்க வெச்சுக்க....என சொல்லிக்கொண்டிருக்கும் போதே பேசினான்..
இவங்கள்லாம் இப்படித்தான் பாஸ் ஒரு ரூவாய்க்கே எப்டி ஏமாத்ராங்க பாத்தீங்களா... ( யாரும் எதிர்பார்க்கவில்லை....)
அந்த ஒரு ரூபாய் வெளியில் வந்து விழுந்தது...யோவ் எடுத்திட்டு போயா ஓன் ஒத்த ரூவாய....இத வச்சித்தான் நான் நாலு நாளு ஒக்காந்துசோறு திங்க போறென்... செறுப்பாலடித்தது போன்று இருந்தது எனக்கு.
வறுமை எப்போதும் நமக்கு இளக்காரமானதாகவே தென்படுகிறது. அதட்டும் தொனி மிக்க மனிதர்களின் நடுவே கோழையாய் கொடுப்பதை வாங்கி கொண்டு நடையை கட்டும் நாம், எளியவர்களை பந்தாடிவிடுகிறோம். பேருந்தில் ஏறி ஊருக்கு திரும்பிய பின்னும் அவர் ஞாபகம் வந்துக்கொண்டிருக்கிறது.
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தியுங்கள் அவரை... ராஜீவ்காந்தியை விட பெரிய மனிதர்
கருத்துகள்
கருத்துரையிடுக