பேரிடர் மேலாண்மை



இயற்கையின் கொடையாய் பெற்ற வளங்களை கடந்து அதன் முக்கியத்துவம் கருதாத மனிதன்,  எதிர்கொள்ளும் மிக முக்கியமான அபாயங்களில் ஒன்று பேரிடர்.

எந்த இடம், எந்த நேரம் எந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு அடையாளத்தோடு ஒவ்வொரு பொழுதிலும் ஏதேனும் பேரழிவு எங்கேனும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தன்னை மறந்து மனிதன் எப்போது இயற்கையை புறக்கணிக்க ஆரம்பித்தானோ அந்த தருணத்திலிருந்தே இயற்கையும் மனிதர்களை புறந்தள்ளி கொண்டிருகின்றன என்பதற்கு உதாரணம்தான்  பேரிடர் என்பது.

--------------------

நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம். பழையனவற்றை மறந்துவிட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றி நம்முடைய குழந்தைகள் கூட அறியாமல் இருக்கிறார்கள்.

--------------------

மனிதர்களின், பல்வேறு அடிப்படை தேவைக்காக இயற்கை வளங்கள் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன.

அதன் காரணத்தால் மரங்கள், காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. காடுகளிலுள்ள மரங்கள், மலைகளிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாலும், சுற்றுப்புறத்தின் பசுமை அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும், அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. வனமரங்கள் வெட்டப்படுவதாலும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாலும், காட்டுநிலங்கள் அபகரிக்கப்படுவதாலும், இந்த  உலகம் தன் அழகை மட்டுமல்ல தன் உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறது.

கடைசியில் இயற்கை பேரிழப்புகள் ஏற்ப்பட்டு உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தையும், சொல்லொன்னா சோகத்தையும்  ஏற்ப்படுத்தி விடுகின்றன.

--------------------

கடந்த 1980ஆம் ஆண்டு காடுகளுடைய பராமரிப்பு, பற்றிய பாதுகாப்புச் சட்டத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

ஆனால, அதே 1980 க்குப் பிறகு தான் காட்டுப் பகுதிகள், தொழிற்சாலைகள் அமைக்கவும், கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளவும் பெருமளவில் வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தத் தொடங்கப்பட்டன.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிற கரியமில வாயு பூமியின் மேல்மட்டத்தில் பரவிக் கொண்டு வருவதாலும், மேல்மட்டத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்துடைய செழிப்புத்தன்மையை சீரழிந்திருக்கிறது,  கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையால் உருவாகியுள்ள சத்தங்கள் புவியை அதிர வைத்திருக்கிறது. இனி வருங்காலத்தில் நதிகளும் மற்றும் ஆறுகளும் வற்றிப் போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல், பட்டினி, பஞ்சம் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு அதிகமான பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் இந்த மானுட சமூகம்.

--------------------

இவற்றை எல்லாம் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு தான் 1999 ஆம் ஆண்டு மத்திய அரசு பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை அமைத்தது. அந்த அக்குழுவின் பரிந்துரையின் பேரில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம்  தேதி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது. இந்த திட்டத்தின் பிரதான தலைவராக பிரதமர் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தேசத்தில் பேரிடர்  குறித்த  முன்னெச்சரிக்கை தகவல்கள் நேரடியாக பிரதமரிடம்தான் அளிக்கப்படுகின்றன.

புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வெடிவிபத்து, ரசாயன விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல்கள், தொற்று நோய்கள், பொருட்சேதம் போன்றவை பேரிடர்களின் குறிப்பிடதக்க வகைகளாக கருதப்படுகின்றன.

பெருமளவிலான  உயிர்சேதம், பொருட்சேதம், சுகாதாரகேடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பாதிப்பையும்  ஏற்ப்படுத்தி விடுகின்றன. என்வேதான் தேசத்தில் பேரிடர் நிகழ்வுகளின் நேரத்தில் உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் எந்நேரமும் வைக்கப்படுகின்றன.  அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

--------------------

இருப்பினும் 2008 ஆம் ஆண்டின் கணக்கீடுகளின் படி இந்தியா
இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படும் 170 நாடுகளில் 36வது இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது. இது மிகவும் ஆபத்தான இடம். எனவே இந்தியா உடனடியாக இயற்கை பேரழிவுகளை அறியும் மையங்களை அமைக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்தது.

வங்காள விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்களால் பெரும் புயல்கள் உருவாகும் ஆபத்தும், இமய மலையை ஒட்டி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தும், மழைக் காலங்களில் வட மாநிலங்களல் கடும் வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் உள்ளன என்றும்  உலக வங்கி எச்சரித்தது.

--------------------

இந்திய நிலப்பரப்பில் 54% புவி அதிர்ச்சி பகுதி என்றும் 40% மில்லியன் ஹெக்டேர் பகுதிகள் வெள்ளம் பாதிக்கும் பகுதி என்றும் புள்ளி விவரங்ககள் தெரிவிக்கின்றன.

அண்மையில் உத்தரகண்டில் மேகவெடிப்பும், அதனால் ஏற்பட்ட வெள்ளச் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான சோகச் சம்பவத்தின் பிடியில் இருந்து அம்மாநிலம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

இதுபோன்று அடிக்கடி நிகழும் பேரழிவுகள் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இதனால் இன்றும் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் பல லட்சம் மக்கள், நம்மை சுற்றிலும் பல்வேறு நாடுகளில் உயிரை  கையில் படித்துக் கொண்டு கதறிக் கொண்டிருகின்றனர்.

--------------------


கடந்த 1984 ஆம் ஆண்டு - போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டது யாருக்கும் மறந்து போயிருக்காது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படும் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவான இதில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், 5,295 பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் கூறுகிறது.

--------------------

இதே போன்று  2001ஆம் ஆண்டு - குஜராத் மாநிலத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் - 13805 பேரை பலி வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் 52 வது குடியரசு விழாவின் சுகமான தருணத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 55,000 பேர் வரை படுகாயமுற்றனர்.

--------------------

இவற்றிலெல்லாம் ஏற்படாத ஒரு வலி 2004  ஆம் ஆண்டு ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் ஆசிய ஆப்ரிக்க பிராந்தியத்தில் ஏற்ப்படுத்திய சோகம் இன்றுவரையிலும் அதன் அடையாளங்களை மாற்ற முடியாதபடிக்கு சக்கையாய் பிழிந்துபோட்டது கடற்கரை ஒர கிராமங்களை.

கிட்டத்தட்ட 2,50,000 உயிர்களை பலிகொண்ட கடல்கோளின் கோரபசிக்கு இந்தியாவில் மட்டும் 10749 பலியானார்கள். இது மிகப்பெரிய மனித பேரழிவாக கருதப்படுகிறது.

--------------------

2005 ஆம் ஆண்டு மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5000 க்கும் அதிகமானோர் பலியானார்கள். அதே ஆண்டில்  இந்தியா பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டு மிகப்பெரிய உயிர் இழப்புகளை ஏற்ப்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தில் மூன்று நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 74,500 பேர் பலியாயினர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

--------------------

2008 ஆம் ஆடு பீகார் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்  250 பேர் பலி. 30 லட்சம் பேர் வீடிழந்தனர். அதே சமயத்தில் அமெரிக்காவில் 24 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட புயலில் மொத்தம் 147 பலிகள் மட்டும்தான். வீடிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 30000 மட்டும்தான். இதன் ஒப்பீடுகள் ஒன்றைத்தான் நமக்கு திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருகின்றன. அது நாம் இயற்கையின் விதிகளை மீறிவிட்டோம் என்பது.

--------------------

இதேபோல் கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளபெருக்கும், நிலச்சரிவும் அந்த மாநிலத்தை மட்டுமல்லாமல் தேசத்தையே நிலைகுலைய செய்தது. இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.

--------------------

கடந்த 50 ஆண்டுகளில் பல மாநிலங்களின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக மாறியுள்ள காரணத்தினால் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் கடும் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது.  1984 முதல் 2003ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைச் சேதங்களைக் கணக்கிட்டால், 85 வெள்ளப் பெருக்கும், 51 புயலும், அளவு கோலில் 5 ரிக்டருக்கும் மேலாக 10 நிலநடுக்கங்களும், 8 வறட்சியும் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகளால 10,000ம் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.

2007ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் 3,339 பேர் உயிரிழந்துள்ளனர், 57 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1963 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவுகளில் இருந்து முக்கியமான பாதிப்புகளில் 84 % வெள்ளம், வறட்சி, வெப்பமண்டல சூறாவளியால் ஏற்பட்டவை.

--------------------

நிலநடுக்கத்தையும், கடற்கோளையும் தடுக்கமுடியாது. பூகம்பத்தையும், புயலையும் தடுக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் சேதத்தை முன்னெச்சரிக்கை நடவ்டிக்கையை சரியாக செய்வதன் மூலம் குறைக்கலாம்.

இதெல்லாம் கடந்து விழிப்புணர்வற்ற நிலையில் மனிதன் தொடர்ந்து இருப்பானேயானால் முதலில் தவிர்க்க வேண்டியது இயற்கைப் பேரிடர்களை அல்ல. மனிதர்களின் மத்தியில் விளையும் அச்சத்தைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்