சந்தை...

இந்த உலகம் பல்வேறு உயிரின சூழல்களால் நிறைந்தது. தொன்மையான மொழிகளையும் நாகரிகங்களையும் தன்னகத்தே கொண்டு  காலம் காலமாய் சர்வ கணங்களிலும் பரிணாமத்தின் புள்ளியில் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கின்றது. அப்படி, பரிணாமத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் கடந்து உயிகளின் வரலாற்றில் ஓர் அடையாளமாய் இருப்பவன் மனிதன்.

அவன் மாறுவதற்கும், அவனால்  உலகில் மாற்றங்கள் நிகழ்ந்ததற்கும்  ஒரு வியாபார அமைப்பு முறை மிகப்பெரிய காரணமாயிருந்தது.

ஆதிமனித காலம் கடந்த நிலையில், மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு வியாபார முறை சந்தை என்பது.

நெல்லை கொடுத்து பருப்பு வாங்கியதும், மீனை கொடுத்து தயிர் வாங்கியதும், உப்பு கொடுத்து அரிசி வாங்கியதும் சந்தைப் பாரம்பரியத்தின் ஒரு பகுதி.

நம்முடைய கிராமத்து  முடுக்குகளில் எங்கும் சுட்ட கிழங்கும், சோளமும், கள்ளும், கருவாட்டின் மனமும் பரிமாறிக் கொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.



எல்லா உயிரினங்களையும் போல மனிதர்களுக்கும் பசி என்பது இயற்கையான ஒன்றாகவே இருந்தது. அப்படி வாழ்ந்தபோதுதான்,  கிடைத்தவற்றை உண்டு வாழ்ந்து காலப்போக்கில் உணவை உற்ப்பத்தி செய்யும் மகத்தான நிலைக்கு தள்ளப்பட்டான் மனிதன்.

அந்த தருணத்தில் தான் கைத்தறியும் உலோகமும் கண்டுபிடிக்கப்பட்டன. நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்டது போல உலோகத்தின் கண்டுபிடிப்பு மனிதனின் அறிவுப்புரட்சிக்கு அடுத்த மைல்கல்லாய் விளங்கியது.

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு முருக்கேறிகிடந்த மனிதன் முதன் முதலாய் உணவு வகைகளை பயிரிட தொடங்கினான். பலவித கருவிகளை உருவாக்கினான். உற்பத்தி செய்ததை சேமித்தான். கொஞ்சத்தை ஏதோ ஒரு கடவுளுக்கு நன்றி செலுத்தி படையலிட்டான்.

சேமித்ததை விற்பனை செய்தான். சந்தை உருவானது. சந்தைப் படுத்தலை மிகைப்படுத்தினான், வாணிபம் செய்தான். வாணிபத்தின் அளவை அதிகரித்தான். ஏற்றுமதி செய்தான்.  நாடு கண்டான். நாடு பிடித்தான். நாடு பிடிக்கும் வெறியில் மனிதன் மீண்டும் மிருகம் ஆனான்.. கடல் வாணிகம் செய்வதற்காய் காற்றின் திசையில் புறப்பட்டவன் இரண்டு உலகப் போர்களை நிகழ்த்தி மானுடத்தை சிதைத்த போது வாணிபம் வெட்கப்பட்டத்தான் செய்தது.

14 ஆம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்த பிறகு வாணிபம் வளர்ச்சிப் பெறத்தொடங்கியது.

அப்படி வாணிபம் செய்வதற்காய் 17ஆம் நூற்றாண்டுகளில் வந்து இந்திய தேசத்தையே கைகளுக்குள் சுருட்டிக் கொண்டவர்கள்தான் கிழக்கிந்திய கம்பெனியினர்.கடல் கடந்து உலகாண்ட தமிழன் ராஜேந்திர சோழனுக்கு பிறகு இந்திய வரலாற்றை சுத்தமாய் அடித்து திருத்தி மாற்றி எழுதிவிட்டு சென்றார்கள் பிரித்தானியர்கள்.


அப்போதெல்லாம் இந்தியர்கள் யாரும் சுயமாய் வாணிபம் செய்ய முடியாது. சந்தையிலுள்ள அத்தனை கடைகளும் வரி செலுத்த வேண்டும். பயந்து பயந்து தங்களின் பொருட்களை பாதுகாத்தது இந்திய மனித இனம்.

இப்படி உலகெங்கும் சந்தை பாரம்பரியத்தின் தடங்களை பார்த்து கொண்டிருக்கிற வேளையில்… 177 ஆண்டுகளுக்கும் மேலான சந்தை கலாச்சாரத்தை கொண்ட ஒரு பகுதி இன்னும் நமது மண்ணில் எளிய மனிதர்களால் நிரம்பிய தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய ஒரு கட்டாயம் நம் ஓவ்வொருவருக்கும் உண்டு.

18ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டெறிந்த  காலத்தில், சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் துவங்கப்பட்டதுதான் வாரச்சந்தை. 

சென்னையின் புறநகரில் ஒரு சேமிப்புக்கிடங்கு போல, இந்த பல்லாவரம் சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சூரியனோடு சேர்ந்தே சோம்பல் முறிக்கிறது.

பல்லாவரம் மலையடிவாரத்தில் ஜி எஸ் டி சாலையில் அமைந்திருக்கும் சந்தையில் குண்டூசி முதல் குளிர்சாதன பெட்டி வரையிலும், கருவாடு முதல் கணினி வரையிலும், ப்ரிட்ஜ் முதல் பெண்ட்ரைவ் வரையிலும்  அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுகின்றன என்பது எத்தனை ஆச்சர்யம்.

வாரந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் 3,00,000 பேர் வரை கூடுகிறார்கள்.

காலை 6 மணிக்கே ஆரம்பித்துவிடுகிற சந்தையில் அதிகாலையில் இருந்தே வியாபாரிகள் தங்கள் பொருட்களை கொண்டு வந்து,  தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டி வியாபாரத்தை தொடங்கி விடுகிறார்கள்.



துணி கடைகள், பழக் கடை, சாப்பாட்டுக்கடை, மரபென்ச், பூச்செடி, பூந்தொட்டி விற்பனை, மரக்கன்று,  சோளம்,கடலை, மூக்குபொடி, முளைகட்டிய பயிர் என்று அனைத்தும் ஒரே கிடைப்பது அதிசயம்தான். இதுமட்டுமா உணவு பொருட்களான காய்கள், அரிசி, பருப்பில் இருந்து, புளி, உப்பு, வத்தல், பட்டை, லவங்கம், மஞ்சள்,  மிளகு, முந்திரி, பாதாம், பூண்டு, கோதுமை என மூட்டை மூட்டையாக வைத்து விற்பனை செய்கிறது ஒரு கூட்டம்

நகரத்தின் வீதிகளில் வாரம் ஒருநாள் கிராமத்து வாசம் வீசுவதாக படுகிறது பல்லாவரம் சந்தை. வண்டி மையிலிருந்து மாடுகட்டும் சலங்கை, மணி, தாம்புகயிறு, அறிவாள், சுத்தி, கோடாறி,  வானல், மண்வெட்டி, பாரை, இது ஒரு வகை…

பெண்களின் கூட்டம் ஒரு பக்கம் கேஸ் அடுப்பு, மின்சார அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, ஸ்டவ், விலை பேசி குறைத்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே கலை வேளைப்பாடுடன் கூடிய விளக்கு, பொருட்களும் காலம் கடந்தும் கிடைப்பது ஆச்சர்யம். இதற்காகவெல்லாம் இவர்கள் எத்தனை சிரமப் பட்டிருப்பார்கள் எனபதை யோசிக்கும் நமக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது.


ஒரு மூளையில் ஆடு, கோழி, சண்டக்கோழி, புறா, பந்தயபுறா, கிளி, பஞ்சவர்ண்கிளி,  வெளிநாட்டு பறவைகள், கூண்டில் அடைக்கப்பட்ட குருவிகளோடு

அதற்கடுத்த கடையில் முயள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மீன், கருவாடு, நெத்திலி,நெத்திலி என்றவாறு ராகம் போட்டவாறு ஆண்களையும் பெண்களையும் கடையருகே பார்க்கவும் முடிகிறது. 

கட்டிலும், பீரோவும், கம்பீரமாய் இருகின்றன. இதில் புதியது உண்டு, பழையதும் உண்டு, இந்த சந்தையின் ஒரு சிறப்பு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விளைளும் இங்கு பொருட்கள் கிடைக்கும் என்பது.

சோஃபா செட், ஷோகேஸ், செறுப்பு, உடற் பயிற்சி கருவி, நார்காலி,
முதல்... சைக்கிள்,  டிவி, ரேடியோ, செல்போன், சார்ஜர், டிவிடி, கொசுவலை, குடை, கணினி, மடிகணினி, டேபிள்,  கிராமஃபோன், இசைக்கருவிகள், ஃபேன், சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், கலைநயத்துடன் கூடிய சிற்ப்பங்கள், வெளிநாட்டு வாசனை திரவியங்கள், கேமராக்கள், பொம்மைகள், என பட்டியல் நீள்கின்றன.

டூவீலர், கார், லாரி, பஸ், வேன் போன்றவைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் இங்கு மலிவான விலையில் கிடைக்கிறது. பழங்காலத்து இரு சக்கர வாகனங்களை ஞாபகார்த்தமாக சிலர் பராமரித்து வருகிறார்கள். 

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பழைய காலத்து நாணயங்கள் பெருமளவில் இங்கு கிடைக்கின்றன. நாணயங்களைக் கொண்டுதான் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களையும் ஆட்சி செய்த மன்னனையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். மேலும், தொல்பொருள் ஆராய்சிக்கு நாணயங்கள் தான் பெரும்பங்கு வகிக்கின்ற்ன.

தென்னிந்தியாவில் ரோமானியர்களின் வருகையையும் வாணிபம் நடந்ததையும் இங்கு கிடைக்கும் ரோமானிய நாணயங்களை கொண்டு நம்மால் அறிந்துகொள்ள முடியும் .

பிரித்தானி கிழக்கிந்திய கம்பெனியின் மன்னர் ஏழாம் எட்வர்ட் இவருடைய உருவம் பொறித்த நாணயங்களும் சேகரிக்கப்பட்டிருக்கிண்ட்றன.

அதேபோல், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்றபிறகு பிரித்தானிய இந்தியாவின் பேரரசியாக தன்னை அறிவித்துக் கொண்ட விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த நாணயமும் கிடைக்கிறது. அதேபோல் கலை நயத்துடன் வடிவமைக்க்பட்ட தொலை நோக்கிகளும் கிடைக்கின்றன.

இதையெல்லாம் இவர்கள் எங்கிருந்து சேகரிக்கிறார்கள். அதற்க்கு எங்கெல்லாம் இவர்கள் பயனப்பட வேண்டியிருக்கிறது என்பதை யோசிக்கும் பொது நமக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிடுகிறது.

பல்வேறு விதமான  நாணயங்களை சேகரிப்பவர்களுக்கும் ஆராச்சியாளர்களுகும் பல்லாவரம் சந்தை ஒரு திறந்தவெளி புத்தகமாய் விளங்குகிறது. இங்கே வரலாற்று சான்றுகள் என்னற்றவை பழைய பொருட்களாய் குவிக்கபட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதன் முக்கியத்துவம் அறிந்தவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வாங்கி செல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் ஊர்ந்து செல்லும் எறும்புகள் போல சந்தை மக்களும் ஏதேனும் ஒரு கடைக்காரரிடம் ஒரு பொருளைப் பற்றி கேட்டுக்கொண்டும், வெற்றிலை வாங்கிகொண்டே தேங்காய் வியாபாரியிடம் விலை பேசிகொண்டும், பழைய மிக்ஸியின் விலையை குறைத்து தர சொல்லி அங்கலாய்த்துக் கொண்டும் தன் போக்கில் அடுத்தடுத்த கடைகளை தேடி சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த சந்தை மனிதர்கள்.

வயது வித்தியாசமின்றி ஆங்காங்கே கூவிக்கொண்டிருக்கும் மக்களின் இரைச்சல்களுக்கு மத்தியிலும் பல்லாவரத்தின் மனிதர்களும் அவர்களுக்கே உரிய தோரணையோடு இந்த சந்தையை ஒவ்வொரு வாரமும் கடந்து போகிறார்கள்.

சாதாரன ஏழை மனிதர்கள் முதல் சமூகத்தின் முக்கியமானவர்கள் வரை எல்லா மனிதர்களும் இந்த சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர். எல்லாவிதமான பொருட்களும் இங்கே கிடைப்பதால் இந்த சந்தையை ஒரு குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடமாக சுருக்கிவிடமுடியாது.

நகரத்தின் மோசமான கட்டமைப்புகளில் சிக்கிகிடக்கும் மக்கள் பல்லாவரம்  சந்தை போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்தால் தேவையானவற்றை வாங்கி கொள்ளவும் முடியும். மனதுக்கும் ஒரு கிராமத்து அனுபவம் கிடைகும்.

கரும்பு பிழியும் எந்திரத்தின் ஊடாக இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையும் ஒவ்வொரு நாளும் பிழியப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர்களின் ஒரே பிரதான நோக்கம் வாராந்திர சந்தை மட்டுமே. அது ஒரு பெரிய வரப்பிரசாதம் இவர்களுக்கு.

பெரும்பாலான பொருட்களின் விலை 100 லிருந்து 1000 ரூபாய் குள்ளாகவே முடிந்து விடுகிறது. சாதாரணமாக அரசு டிவி 800 ரூ/ கிடைக்கிறது.  இங்கு மிக மலிவான விலையில் டிவி களும் ரேடியோவும் கிடைப்பதை கண்டால் மார்க்கோனி நிச்சயம் மயக்கம் அடையலாம்.

இதையெல்லாம் கவனித்துவிட்டு கைநிறைய பொருட்களோடு திரும்புகிற பொழுது அழுக்கு நிறத்தில்  நின்றுகொண்டு பாசிமணி விற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு வரிடமும் ஓடிசென்று சாமி மணி வாங்கிட்டு போ சாமி என்று உரத்த குரல் எடுத்து கேட்க்கிறார்கள்.

நரிக்குறவர் என்கிற ஒற்றை வார்த்தையை அடையாளமாய் சுமந்து கொண்டிருப்பதாலோ என்னவோ ஊர் ஊராய் இடம் பெயர்ந்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்…

இவர்கள் எங்கு சென்றாலும் குழந்தைகளும் சேர்ந்தே சென்றுவிடுவதால் கல்வியில் இன்னும் அக்கறை செலுத்தாமலேயே இருக்கிறார்கள்.

காடுகளில் விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாட்டுவது தடை செய்யப் பட்டிருப்பதால் இவர்கள் இதுபோன்ற பாசிமணி, ஊசி, வியாபாரம் செய்து காலத்தை கடத்துகிறார்கள்.

பல்லாவரம் சந்தையில் குடும்பத்தோடு உச்சி வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்கிற இவர்களின் கோரிக்கை குடும்ப அட்டையும், வாக்களர் அட்டை, ஆதார் அட்டையும் வழங்கிய அரசு எங்களுக்கு  கேஸ் இணப்பு வழங்கவேண்டும் என்பது தான் என்கிறார்கள்.

இங்கு உழைப்பே மூலதனம்…அதை தவிர வேறெதையும் நம்மால் காணமுடிவதும் இல்லை.

"பொதுவாகவே ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் குடும்ப வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது. உயிர்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகத்தை கட்டமைக்கின்றன. இந்த பல்லாவரம் சந்தையும் உயிர்ப்புள்ள குடும்பங்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை".


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்