வீரப்பெண் குயிலி
கட்டுரை: அருள்செல்வி (செய்தியாளர்)
புராணங்கள்,
இதிகாசங்கள், மத அடிப்படை சடங்குகள்,
ஐதீகங்கள் இவைகள் அனைத்தும் பெண்களை முன்னிலைப்படுத்தி பாதுகாத்து வந்தாலும்,
சீதை, கண்ணகி போன்றவர்கள் வரலாற்றில் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே கற்புக்கரசிகளாக சித்தரிக்கப்பட்டனர்.
பெண்களை பிற்போக்குத் தனமாக சித்தரிக்கின்ற இதுபோன்ற புராணக்கதைகளை நன்கு அறிந்தவர்தான் வேலுநாச்சியார்.
இவருடைய நெருங்கிய தோழியாக இருந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரப்பெண் குயிலி.
சிவகங்கைச் சீமையின் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,
குயிலியின் தந்திரமான, தைரியமான வீரச்செயல் நமக்குப் புரியும்.
நம்மையும் வீறு கொண்டெழச் செய்யும்.
மறக்க முடியாத நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப்பெண் குயிலி அப்படி என்னதான் செய்தார்?......
18 ம் சிவகங்கைச் சீமை சீரும் சிறப்புமான சீமையாக இருந்தது.
அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல்.
ஆற்காடு நவாப் ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை.
அப்படி ஆசைப்பட்ட இடங்களில் ஒன்றுதான் சிவகங்கைச் சீமையும்.
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.
அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன.
அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்கள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு வேலுநாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதரையும் அவரது படைகளையும் தாக்கி காளையார் கோயில் கோட்டையைக் கைப்பற்றி சிவகங்கைக்குள் நுழைந்தது.
நவாப்பிடமிருந்து சிவகங்கையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று வேட்கை கொண்டு,
தனக்கு வேண்டிய பணிப்பெண்களுடனும்,
மருது சகோதரர்களுடனும் விருப்பாட்சி கோட்டை,
திண்டுக்கல் கோட்டைகளில், ஹைதர் அலியின் உதவியோடு பாதுகாப்பாகத் தங்கினார் வேலுநாச்சியார்.
ஹைதர் அலி கொடுத்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளை வீழ்த்த திட்டமிட்டார். தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும்,
இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியாரும் தலைமை வகித்தனர்.
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம் கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
வேலுநாச்சியாருடன் இருந்த பெண்கள் படைகள் ஆயுதங்களை தங்கள் ஆடைகளுக்குள்ளும்,
பூமாலைகளுக்குள்ளும் மறைத்துக் கொண்டு அரண்மனைக்குள்ளே நுழைந்து ஆங்கிலேயப் படைகள் மீது திடர் தாக்குதல் நடத்தினர்.
இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
வெட்டுண்டு வீழ்ந்தனர். சிலர் நாட்டை விட்டே ஓடினர்.
அவ்வேளையில் குயிலியின் கண்கள் கோட்டையை தன் கண்களால் அளவெடுத்தது.
ஆங்கிலேயரின் ஆயுதங்கள் கோட்டையின் நிலா முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைக்கப்பட்டிருந்தது.
ஆயுதங்களைக் கண்டதும் குயிலியின் மனதில் மகிழ்ச்சி அலை பெருக்கெடுத்து ஓடியது. ஆங்கிலேயப் படைகளை அடியோடு வீழ்த்த இதுவே சிறந்த வழி.
நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது.
இதில் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை அறிந்த குயிலி,
தன் உடம்பு முழுக்க நெய்யை ஊற்றி,
கொளுந்து விட்டெரியும் தீயோடு, வெற்றிவேல், வீரவேல் என்று முழக்கமிட்டபடி,
ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை நோக்கி சீறிப்பாய்ந்தாள்.
ஆங்கிலேயரின் ஆயுதங்களோடு தானும் கருகிச் சாம்பலாகி,
சிவகங்கைச் சீமையின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமானார் வீரப்பெண் குயிலி.
சங்க காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரைக்கும் பெண்கள் பெருமை சேர்த்துக் கொண்டிருந்தாலும்,
இன்னொரு புறம் தொலைக்காட்சியும் சினிமாவும் பெண்களை இழிவுபடுத்தித்தான் வருகிறது.
நம் அனைவரையும் சுமந்து,
பெற்றெடுத்து, பாலூட்டி, உணவூட்டி வந்த,
புனிதமாக மதிக்கப்பட வேண்டிய,
அன்னையர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சினிமாவில் கொச்சைப்படுத்தப்படுகின்றன.
வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே கண்டறியப்பட்ட தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாக மாறி வரும் அவல நிலையை எங்கே போய் சொல்வது.....?
கருத்துகள்
கருத்துரையிடுக