மது - பழங்குடிகளின் எடுத்துக்காட்டு
கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. 27 வயதான மது, மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மதுவுக்கு ஒரு தாயும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். மதுவின் குடும்பம் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் என்றாலும், 17 வயதிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய குடும்பத்தினரை விட்டு பிரிந்து, கடந்த 9 ஆண்டுகளாக கடுகுமன்னா வனப்பகுதியில் வசித்து வந்துள்ளார் மது. அடிக்கடி கிராமத்திற்கு சென்று அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், அவ்வாறு வாங்கிச் செல்லும் உணவு பொருட்களை காட்டுப்பகுதியில் உள்ள குகையில் வைத்து சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால், அப்பகுதி மக்களிடம் அதிகம் நெருக்கம் காட்டாதவராக இருந்து வந்துள்ளார். அரிசி கிடைத்தபோது அதனை பொங்கி சாப்பிட்ட மது, அரிசி கிடைக்காத மற்ற நேரங்களில் கிழங்கு வகைகளையும், பழங்களையும் தனக்கான ஆகாரமாக எடுத்துக் கொண்டே வாழ்க்கையை கடத்தியிருக்கிறார். இப்படித்தான் இவருடைய நாட்கள் நகர்ந்து கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தவாலம், முக்காலி பகுதிகளில் கொஞ்ச நாட்களாக உணவுப்பொருட்கள் திருடு போவதாக தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மது, திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி வியாபாரிகள் பேசிக்கொண்டார்கள். மது திருட்டில் ஈடுபட்டதை ஒருவரும் கண்டிருக்கவில்லை என்றாலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் இருந்தவருக்கும், மதுவுக்குமான உருவ ஒற்றுமையை வைத்து, மதுதான் உணவு பொருட்களை திருடியிருக்கிறார் என்கிற முன் அனுமானத்திற்கு அவர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், கடந்த 22ம் தேதி, அந்த வழியாக அரிசி மூட்டையுடன் நடந்து சென்றிருக்கிறார் மது. அவரை கண்ட வியாபாரிகளும், அப்பகுதியில் இருந்தவர்களும் மதுதான் இத்தனை நாட்களாக திருட்டில் ஈடுபட்டதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கிடையே, தான் கொண்டு சென்ற அரிசியை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, ஆறவைத்துவிட்டு காத்திருந்திருக்கிறார் மது. பசிக் கொடுமையில் இருந்த மதுவுக்கு பெரும்பாலும் வேகவைத்த அரிசியே, விருந்து சாப்பிடும் திருப்தியை தந்திருக்கக் கூடும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த சமயத்தில் தான் வனத்துறையினர் சிலரின் உதவியோடு மது தங்கியிருந்த குகைப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர் அந்த கடைக்காரர்களும், ஒரு சில ஓட்டுநர்களும். வந்தவர்கள் எது குறித்தும் யோசித்திருக்கவில்லை. மது வைத்திருந்த பையை சோதனையிட்டவர்கள் அவரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். அவர் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து இரண்டு கைகளையும் கட்டி பலமாக தாக்க ஆரம்பித்துள்ளனர். பசிக்கொடுமையில் வலி தாங்க முடியாமல் அழுது துடித்திருக்கிறார் மது. பசியை போக்க எதையாவது சாப்பிட்டு தொலைக்கலாம் என யோசித்திருந்த மதுவுக்கு இத்தனை பேர் தம்மை சூழ்ந்து கொண்டு அடிப்பார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் அவர்கள், அவரை தாக்குவதை நிறுத்தவில்லை. வெறும் வயிற்றில், வலிதாங்க முடியாத வேதனையில் ரத்தம் சொட்ட சொட்ட மயக்க நிலையில் இருந்த மது, தண்ணீர் கேட்ட போதும், தரையில் தண்ணீரை கொட்டி அதனை நக்கி குடி என்று கூறி தங்களை கீழானவர்களாக காட்டிக்கொண்டது அந்த கூட்டம். அதோடு ஒரு மூட்டையில் கற்களை அள்ளி கட்டி, அதனை மதுவின் முதுகில் வைத்து தூக்கி செல்ல வைத்துள்ளனர். தூக்க முடியாமல் மரண வலியில் அவதிப்பட்ட ஒரு மனிதரை, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை, தாம் என்ன செய்கிறோம் என்பதே பெரும்பாலும் தெரியாத உயிரை,,, அடித்து உதைத்து அந்த மலைக்குகையின் உச்சியில் இருந்து கீழ் பகுதிக்கு கொண்டு சென்ற கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், உண்மை என்னவென்று தெரியாமல் மதுவை கட்டி வைத்து அடித்தவர்களில் ஒருவர், ஒரு மனிதனை சித்ரவதை செய்யும் காட்சியை செல்ஃபி புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிடும் அளவுக்கு கொடுமை அரங்கேறியதுதான். இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அட்டப்பாடி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மதுவை மீட்டு ஜீப்பில் ஏற்றியுள்ளனர். ஜீப்பில் ஏற்றியதும் போலீசாரிடம் மது பேசிய வார்த்தைகள் தான் அவருடைய கடைசி வார்த்தை. ஆம் அதற்கு பிறகு பேசுவதற்கு அவர் உயிரோடிருக்கவில்லை. ”இங்கிருந்த அனைவரும் என்னை கொடூரமாக தாக்கியும் அடித்தும் சித்ரவதை செய்தார்கள். திருடன்.. திருடன்... என்று பழித்து கூறியதோடு தகாத வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் அவதூறாக பேசினார்கள்... நான் எந்த தவறும் செய்யவில்லை.. என்று கூறி மயங்கி விழுந்த பிறகு எழுதிருக்கவேயில்லை. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உணவுக்காக ஒரு மனிதன் அடித்துக் கொள்ளப்படுவது அவமானகரமானது என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மதுவின் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு நடைபெற்றது. உடற்கூறாய்வின் முடிவில் மதுவின் உடல் உறுப்புகள் சிதைந்துள்ளதாகவும், தலையின் பின்பக்கத்தில் பலத்த அடி பட்டிருப்பதால் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பிறகே, இதில் தொடர்புடைய 16 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர் போலீசார். இந்த தாக்குதலுக்கு வனத்துறையினர் சிலரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் கேரள தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, போலீசார் எஸ்சி.எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து வலைத்தளவாசிகள் மீம்ஸ்கள் வெளியிட்டனர். ஃபேஸ்புக், ட்விட்டர் என மதுவுக்கு ஆதரவான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலிக்கத் தொடங்கியது. இந்த தருணத்தில் நடிகர் மமுட்டியின் ஃபேஸ்புக் பதிவு இந்த செய்தி பலருக்கும் தெரியவர ஒரு காரணமாய் அமைந்தது. இளைஞர் மதுவை எனது சகோதரனாக கருதுகிறேன். எனது சகோதரனை கொன்று விட்டார்கள். நீங்கள் மனிதநேயம் மிக்கவர்களாக இருந்தால், நீங்களும் சகோதரனாகவோ அல்லது மகனாகவோ பாவித்திருப்பீர்கள். நம்மைப் போன்ற சக மனிதர்களுக்கு உலகில் அனைத்து உரிமையும் உண்டு. பசியின் காரணமாக திருடியவரை திருடனாக பார்க்கக் கூடாது. வறுமைக்கு நமது சமூகமே காரணம். வன்முறை கும்பலுக்கு அதிகாரம் வழங்கிய நமது சமூகத்திற்கும் இந்த படுகொலையில் பங்குண்டு. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும் மனிதனை மனிதன் கொல்வதை ஏற்க முடியாதது. பசியும் வறுமையும் சூழ்ந்திருக்கும் உலகில், நாகரீகம் அடைந்தவர்களாக நம்மை எப்படி நாம் கூறிக்கொள்ள முடியும்....? எங்களை மன்னித்துவிடு மது.. இதன்பிறகே இதுதொடர்பாக செய்தி வெளியில் வர ஆரம்பித்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அரசியல் கட்சிகள் தாங்களும், தங்கள் பங்குக்கு கண்டனத்தை பதிவு செய்ய ஆரம்பித்தனர். கேரள எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்தார். இதேபோன்று, மதுவின் கொலையை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பழங்குடியினத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டது கவலை அளிப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் டனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக கம்யூனிஸ்ட்களின் மோதல்கள் அதிகரித்துள்ள சூழலில், இந்த செயலால் கேரள மாநிலத்துக்கு இழுக்கு நேர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். உடனடியாக குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். பெரியாரின் கனவை நிறைவேற்றுவதில் முன்னோடி மாநிலமாக கேரளா திகழ்வதாக முன்பொருமுறை கருத்து தெரிவித்திருந்த பினராயி விஜயன், தமது ஆட்சியில், பழங்குடி மக்களுக்கான சுதந்திரமும் அங்கீகாரமும் உறுதிசெய்யப்படும் என உறுதி தெரிவித்தார்.
உண்மையில், பழங்குடி மக்களுக்காக தங்களது கரிசனத்தை பதிவு செய்பவர்களால் அவர்களுக்கான வாழ்க்கையை ஒருபோதும் கொடுத்துவிட முடியாது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவின் 30 மாநிலங்களில் சுமார் 11 கோடி பழங்குடியின மக்கள் வாழ்வதாக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிலப்பரப்பில் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் மக்கள் பழங்குடிகள் என வரையறுக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கென்று தனித்த மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை கொண்டவர்களாகவும், தங்களுக்கென தனி வரலாற்று பின்னணியை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். நாகரீகத்தின் மோகத்தில் மற்ற சமூக மக்கள் தங்களை உருமாற்றிக் கொள்ளும் போதும் பழங்குடிகள் தங்களை இயற்கையின் எந்த பகுதியில் இருந்தும் நாகரீகம் என்கிற பெயரில் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புவதில்லை. காலம் காலமாக தங்களது மூதாதையர்கள் மூலம் கடத்தப்பட்டு வரும் பழக்க வழக்கங்களையும், இயற்கை மருத்துவ முறைகளையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் செல்ல முயல்கிறார்கள். மற்ற சமூக மக்களிடம் இருந்து தங்களை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் காடுகள், மலைகள் போன்ற இடங்களிலேயே பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்து கொள்கின்றனர்.
ஒருகாலத்தில் வேட்டையாடுவதையும், தேன் எடுப்பதையும், மரம் வெட்டுவதையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த இம்மக்கள், காலப்போக்கில் வேறு வழியின்றி தங்களுடைய தொழிலை முகமாற்றிக் கொண்டனர். பல்வேறு கலாச்சார, பண்பாட்டு பின்னணியை கொண்ட ஒரு நாட்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக, மலைப்பகுதிகளிலும், காடுகளிலும் வசிக்கும் பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பழங்குடி மக்களின் மொழிகள் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அங்கீகாரமும் ஆதரவும் மறுக்கப்படுகின்றன. பழங்குடியினரின் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே ஒழிய, அவர்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் அதலபாதாளத்தில் கிடக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பழங்குடிகளாகக் காட்டிக்கொள்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோலாக விளங்குகிறது. பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறியுள்ள, மூன்று கி.மீ.க்குள் தொடக்கப்பள்ளி என்பதெல்லாம் இவர்களுக்குப் பெருங்கனவாகவே உள்ளது. வனச் சட்டங்களால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இம்மக்கள், பிழைப்பு தேடி சமவெளிப் பகுதிக்குப் படையெடுக்கிறார்கள். கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டுதல், செங்கல் சூளை போன்ற கூலி வேலைகளுக்குச் செல்லும்போது, குழந்தைகளைப் பராமரிக்க ஆளில்லாததால் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால், குழந்தைகளின் படிப்பு தடைபடுவதுடன், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். அவ்வாறு கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் குறைந்தளவே கூலி கொடுக்கப்படுவதால் மற்றவர்களை போன்ற நல்ல உணவை உண்டு மகிழும் வாய்ப்பும், உடல் ஆரோக்கியத்தை பேணும் நிலையும் அவர்களுக்கு வாய்க்கவில்லை என்றே கூறமுடியும்.
இந்தியாவை பொருத்தவரை கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் தான் பழங்குடி மக்கள் அதிகளவில் கல்வி அறிவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த தேசத்தை கடவுளின் தேசம் என்று காலம் காலமாக கூறி வந்தார்களோ, அங்குதான் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் ஒருவர் பசிக்காக உணவெடுத்ததாக கூறி அடித்து சித்ரவதை செய்து கொடூரமாக ஒரு கொலை செய்யப்பட்டதும் அரங்கேறியிருக்கிறது. பழங்குடி மக்களை சக மனிதர்களாக மதிக்காத பண்பு சாதிய கட்டமைப்பில் ஊறிப்போயிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். பழங்குடி மக்களின் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாகவும், 2013-14 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,983 கோடி ரூபாய் அவர்களுக்கான நிதியில் துண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பழங்குடி மக்களுக்கு அரசு நிதிஆதாரங்களை ஒதுக்குவதில் ஏற்பட்ட தோல்வி அவர்களது சமூகப் பொருளாதார நிலையில் பிரதிபலிக்கின்றது. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி கிராமப்புரங்களில் உள்ள பழங்குடி மக்களின் வீடுகளில் 1 சதவீதம் மட்டுமே குடிநீர்க் குழாய் கொண்டவையாக இருக்கின்றன. வெறும் 2.6 சதவீதம் வீடுகள் மட்டுமே வீட்டில் சமயலறை கொண்டவையாக புகையில்லா எரிபொருட்களான LPG, கெரசின், உயிர்க்கூள வாயு வசதியுடன் இருக்கின்றன. பட்டியல் பழங்குடி (ST) மாணவர்களுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி இன்னும் அதிகம். 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி பழங்குடி மக்களில் சுமார் 50% பெண்களும் 32% ஆண்களும் எழுத்தறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். மற்ற வகுப்புகளில் இவை முறையே 32%, 17% என்ற அளவில்தான் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மொழிவாரி மாநிலங்களாக பிரிந்திருக்கும் இந்தியாவில் பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் தங்களுக்கென தனித்த அடையாளங்களோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், மதவாதமும், சாதியக் கொடுமைகளும் இந்தியாவின் பெருமைகளை குழிதோண்டி புதைக்கும் காரியங்களை செய்து வருகின்றன. மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கான நடவடிக்கையில் அரசுகள் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை சர்வதேச அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் 81வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா, சூடான், வடகொரியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் ஊழலின் ஊற்றுக்கண்களாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக சோமாலியா, உலகில் அதிக ஊழல் நிறைந்த நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான குற்றங்கள் நிறைந்த நாடுகளில் ஒன்றாகவும், பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
60 சதவீதத்திற்கும் மேலாக விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பியே இருக்கும் இந்தியாவில் தான், விவசாயத்துக்கு வாங்கிய கடனை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக வங்கிகள் காட்டிய கடுமையால் எத்தனையோ விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள அவலம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஐந்தாயிரத்து 650 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2004ம் ஆண்டு பதினெட்டாயிரத்து 241 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் பதிவிடப்பட்டுள்ளது. நீர்வரத்து பற்றாக்குறையினாலும், விவசாய நிலங்களிலும் இயற்கை சமவெளிகளிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனையும் அரசுகள் மக்களின் அடிப்படை ஆதாரத்தை மறு சீரமைப்பு செய்வதில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றன என்பது மிகப்பெரும் கேள்வியாக முன் நிற்கிறது. விவசாயத்துக்கான அடிப்படை கட்டமைப்புகள் சிதறியுள்ள ஒரு தேசத்தில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் கடனை வாங்கி குவித்துவிட்டு அதை கட்ட முடியவில்லை எனக் கூறும் விஜய் மல்லையா போன்றவர்கள் சொகுசாக வெளிநாடுகளில் உலா வருவது உண்மையில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத அரசுகள் தொழிலதிபர்களின் கடன்களை வராக்கடன்களாக தள்ளுபடி செய்ய முன் வருவதால் தான், விஜய் மல்லையா போன்றோர்களால், நான் விட்ட இடத்தை என்னால் மீண்டும் பிடிக்க முடியும் என தைரியமாக கூறமுடிகிறது. இப்படி பேசுவதற்கு அவருக்கு எங்கிருந்து வருகிறது தைரியம்?
பசிக்காக உணவு திருடியதாக கூறி மது போன்றவர்களை அடித்துக் கொலை செய்யும் நாட்டில் தான் பகல் கொள்ளையர்கள் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகளை கொட்டி கொடுக்க முன்வருகின்றன அரசுகள்... இதனையெல்லாம் மனித தன்மையற்ற செயலென்று சொல்லாமல் வேறென்ன வார்த்தைகளில் எழுதுவது?
கருத்துகள்
கருத்துரையிடுக