எழுத்து?
எழுத்து ஒரு கலை . அது நம்மையே சில நேரங்களில் நமக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போகிறது. பல நேரங்களில் எதாகிலும் ஒரு பயணம் தான் நம்மை எழுத தூண்டுகிறது. அத்தகைய பயணம் நம்மை இன்பத்தில் மிதக்க விட்டிருக்கலாம்...இதயத்தை கிழித்து சோகத்தை பரப்பியிருக்கலாம்...எப்படி வேண்டுமானாலும் அந்த நிகழ்வு நம்மோடு கலந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் எழுத்தாக்க வேண்டுமென்கிற எண்ணம்தான் நம்மை மனிதனாகவே வைத்திருக்கிறது. அதையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்கிற சிந்தனைதான் நம்மை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
உலகில் பலர் அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் எழுதுகிறோம் என்றே தெரியாமலும், தன்னை ஒரு தீவிர எழுத்தாளனாக, எழுத்தின் மீது பற்று கொண்ட காதலனாக, மக்களின் முன்னாள் தன்னை ஒரு எழுத்துச் சிற்ப்பியாக உருவகம் செய்து வைக்க பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். எழுத்துக்களை உருவாக்கிய முதல் தலைமுறை மனிதர்கள் போல சிலர் ஏனோ தம்மை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.
ஆனால், இத்தனை புழுதிகளையும் தாண்டி,.. எழுதுவதை உண்மையாகவே நேசிக்கவும், எழுதுவதை ஒரு தவமாக கருதவும் சிலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை ஒரு போதும் வெளிப் படுத்திக் கொள்ள முயலுவதேயில்லை. எழுத்துக்களை பயன்படுத்தி விளம்பரம் செய்துகொள்வதில் அவ்வர்களுக்கு விருப்பமும் இருப்பதில்லை.
ஏனென்றால் அவர்கள் எழுதுவதை நேசிக்கிறார்கள். இவர்கள் எழுத்துக்களை சுவாசிக்கிறார்கள். அதைக் கொண்டாடுகிறார்கள். அதையே பெரும் தவமாக எண்ணி மகிழ்கிறார்கள். ஆனால், இவர்கள் எந்நேரமும் எழுதிக் கொண்டே இருப்பதில்லை. எழுதுகிற தோரணையில் காலத்தை விரயம் செய்வதில்லை. எழுத்தாளனாக தன்னை அறிவித்துக் கொள்வதுமில்லை. ஆனால், எழுத்தில் ஏற்றக் கூடிய செய்தியைத் தேடி பயணம் செய்கிறார்கள். அவர்களின் பயணம் மூலம் ஒரு முழுமையை கொண்டுவர முடியும் என நம்புகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள்.
இவர்களுக்குள் எழும் இன்ப பிரவாகத்தை எழுத்துக்களுக்குள் அடைத்து காகித பக்கங்களில் நமக்கு பகிர்கிறார்கள். இவர்கள் கண்ட சோக நிகழ்வுகளை எழுத்துக்களில் வார்த்து நம்மை சோகத்திலாழ்த்துகிறார்கள். மனிதர்களை மனிதர்களாக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் கண்டதை கேட்டதை நம்மோடு பகிர்ந்துகொள்ள முயலுகிறார்கள். இவர்களின் விரல் தம்மை அறியாமல் எழுதிச் செல்லும் அதிசயத்தை யாராலும் கண்டறிந்து சொல்ல முடியாது.
இவர்கள் எழுதுவதற்காய் எழுதவில்லை. சொல்லுவதற்காகவே எழுதுகிறார்கள். ஆனால், இவர்கள் எந்நேரமும் எழுதிக் கொண்டே இருப்பதில்லை. எழுதுகிற தோரணையில் காலத்தை விரயம் செய்வதில்லை. எழுத்தாளனாக தன்னை அறிவித்துக் கொள்வதுமில்லை. ஆனால், எழுத்தில் ஏற்றக் கூடிய செய்தியைத் தேடி பயணம் செய்கிறார்கள்.
எழுத்து ஒரு கலை . அது நம்மையே சில நேரங்களில் நமக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போகிறது. என்ன எழுதுவதென்றே தெரியாமல் எழுதி கடைசியில் பல நேரங்களில் பலருக்கு அதுவே வாழ்க்கையாகி போயிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கடந்து பல நேரங்களில் நம் மனது நம்மை எதையாகிலும் எழுதி வைக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறது.
மனிதன் எழுத்துக்களை கண்டறிந்தது அபூர்வம்தான். பரிணாமத்தின் வளர்ச்சியில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பையும் சர்க்கரத்தையும் கூறுகிற நாம் மனிதன் என்கிற அடையாளத்தை நிறுவுகிறதில் எழுத்துதான் தலை நிமிர்ந்து நிற்கிறது.
முதல் மனிதனின் முதல் எழுத்து முறை எத்தகையதாக இருந்திருக்கும்? என்கிற கேள்வி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவசர நேரத்திலும், அத்தியாவசியத்திற்க்காகவும் மற்றவர்களிடம் தன் தேவைகளை கேட்டுப் பெறவும், இங்கே செல்லாதீர்கள்...இங்கே ஆபத்து இருக்கிறது என்று சொல்லவும், இங்கே காட்டு விலங்குகள் அதிகமிருக்கின்றன என்பதை தெரியப் படுத்தவும் எத்தனை சிரமப் பட்டிருப்பான் மனிதன். பல்லாயிரம் ஆண்டுகாலம் கடந்து இதோ இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது குகைச் சிற்ப்பங்களாகவும், காகிதப் பக்கங்களாகவும் கடந்து கணினி மயமாகிவிட்டது எழுத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக